*வாழ்க்கை மலர்கள்: ஜனவரி 22*
*அன்பர்களுக்கு*
அன்பர்கள் அமைதி, அன்பு, கருணை என்று பேசிக் கொண்டு இருப்பதோடு ஒவ்வொரு வினாடியும் அயரா விழிப்புடன் செயல்பட வேண்டும்.
“நான்” அறிவுதான், “அறிவு” மெய்ப்பொருளின் அருள் விரிவு மலர்ச்சி தான் என்ற உண்மை உணர்ந்தும், உணரும் ஆர்வத்துடனும் மனவளக்கலை பயிலும் அன்பர்களே! தன்முனைப்பு எழாமலிருக்க, விழிப்போடிருங்கள். நீங்கள் எண்ணியவெல்லாம் அவ்வாறே நிலைபெறும் வெற்றியை அனுபவமாகக் காண்பீர்கள். உங்களுக்கென உரியவை அத்தனையும் இயற்கை நிலையில் ஏற்கனவே உள்ளன. அவற்றை யாரும் பறித்துவிட இயலாது. உங்கள் மனம் பக்குவப்பட, பக்குவப்பட அவை ஒவ்வொன்றாக உங்களிடம் வந்து சேரும்.
இன்னதுதான் இந்த அளவில், இந்த முறையில், இந்தக் காலத்திற்குள் வேண்டும் என்று எப்போதும் எதிர்பார்க்கும் (expectation) கற்பனை நிலை வரையறை (imaginary conditionings)க்குள் மனதை அழுத்திவிட வேண்டாம். நான் முன்னமேயே ஆற்றிய செயல்களின் பயன் காலத்தோடு விளைவாக வந்து கொண்டேதான் இருக்கும். இப்போது இனியும் செய்யப்போகும் செயல்களுக்கு ஏற்ற விளைவு சிறிது கூடப் பிறழாமல் எனக்கு வந்து சேரப்போகிறது என்ற உண்மையில் நம்பிக்கை கொள்ளுங்கள்.
இப்போது விழிப்போடு சிந்தித்து ஆற்றும் செயல்களினால் முன் வினையின் தீமையும் தடுக்கப்படும்; எதிர்காலமும் இனிமையாக இருக்கும். இந்தத் தத்துவம் இயற்கை நியதி. இதை உணர்ந்து மதிப்பளித்துச் செயல் புரிந்து நலம் பெற்று வாழ்வோம்.
*- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி*
K.Pudur MVKM Trust, Madurai - www.facebook.com/vethathiri.gnanam
No comments:
Post a Comment