Thursday, January 2, 2020

அருள்மிகு தண்டாயுதபாணி

*அருள்மிகு தண்டாயுதபாணி (குழந்தை வேலாயுதர்) திருக்கோயில், பழநி*

*தல சிறப்பு*  இத்தலத்து மூலவர் நவபாஷாணத்தால் ஆனவர். இந்த மூலவரை போகர் என்ற சித்தர் பிரதிஷ்டை செய்தார். உற்சவர் முத்துக்குமார சுவாமி. முருகனின் அறுபடை வீட்டில் இத்தலம் மூன்றாம் படை வீடாகும். இத்தலத்ததில் தான் காவடி எடுக்கும் பழக்கம் உருவானது. 

*பொது தகவல்*

*திருவண்ணாமலை கிரிவலம் எத்தனை சிறப்போ அத்தனை சிறப்புகளும் இங்கும் உண்டு.குறிப்பாக அக்னிநட்சத்திர காலங்களில் இங்கு கிரிவலம் செய்தல் சிறப்பு*

தவிர எல்லா நாட்களிலும் கோயிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சுற்றிவிட்டு படியேறுகின்றனர். 450 மீ. உயரத்தில் உள்ள மலைக்கோயிலுக்கு 690 படிகள் கடந்து செல்ல வேண்டும்.தவிர யானைப் பாதை எனும் படியல்லாத வழியும் உண்டு.மலையே மருந்தாக அமைந்த மலை.

பழநிக்கு ஆவினன்குடி,தென்பொதிகை என்ற புராணப் பெயர்களும் உண்டு. பழநி மலையில் முருகன் கோயில் கொண்டிருக்கும் கருவறையில் பழநியாண்டவர் அருகில் ஒரு சிறிய பேழை இருக்கிறது. அப்பெட்டியில் ஸ்படிகலிங்க ரூபத்தில் சிவபெருமானும் உமாதேவியும் இருக்கிறார்கள். இவர்களை பழநி ஆண்டவர் பூஜிப்பதாக ஐதிகம்.

*பழநி மலை தண்டாயுதபாணி சிலையின் ரகசியங்கள்*

*தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான் உபயோகிக்கபடுகிறது. அவை, நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி என்பவை. பன்னீர் மார்கழி மாதத்தில் மட்டும் உபயோகபடுத்தபடுகிறது. இவையில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து, உடனே அகற்றபடுகிறது. முடி முதல், அடி வரை அபிஷேகம் என்கிற முழு அபிஷேகம் சந்தனத்துக்கும், பன்னீரும் மட்டும் தான். இதில் சிரசுவிபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்க படுகிற ஒரு பிரசாதம். கிடைப்பது மிக புண்ணியம்.

*ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யபடுகிறது.

*இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும்.

* அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது.

*இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தன காப்பு சார்த்தபடுகிறது. விக்ரகத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தானம் வைக்க படும். முன் காலத்தில் சந்தன காப்பை முகத்திலும் சார்த்தி கொண்டிருந்தனர். பின்னர் இந்த முறை மாற்றப்பட்டது.

*தண்டாயுதபாணி விக்ரகம் மிகுந்த சூடாக இருக்கும். ஆதலால் இரவு முழுவதும், அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும். இந்த நீரை அபிஷேக தீர்த்ததுடன் கலந்து, காலை அபிஷேகம் நடக்கும் போது, அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்கிறார்கள்.

*தண்டாயுதபாணி சிலையில், நெற்றியில் ருத்ராக்ஷம், கண், மூக்கு, வாய், தோள்கள், கை, விரல்கள் போன்றவை மிக அற்புதமாக உளியால் செதுக்கபட்டது போல் தெளிவாக இருக்கும். இது போகரின் கை வண்ணம்.

* அந்த சிலையை சுற்றி எப்போதும் ஒரு வித சுகந்த மணம் (இதுவரை ஒரு போதும் வெளியே உணர்ந்திராத) பரவி நிற்கும்.

* இந்த சிலையை செய்ய போகர் எடுத்துக்கொண்ட நாட்கள் ஒன்பது வருடம்.

* அம்பாள், முருகர், அகத்தியர் இவர்களுடைய உத்தரவுக்கு பின் தான் போகர் இப்படி ஒரு சக்தி வாய்ந்த சிலையை செய்ய முயற்ச்சியே எடுத்தார்.

* இதற்காக 4000 மேற்பட்ட மூலிகைகளை பல இடங்களிலும் சென்று தெரிவு செய்து கொண்டு வந்தார்.

* 81 சித்தர்கள் இந்த நவபாஷாணத்தை போகர் சொற்படி தயார் பண்ணினர்.

* இது பொது நல எண்ணத்துடன் செய்யப்பட்டதால் காலமும், இயற்கையும் தன் சீற்றத்தை குறைத்துக்கொண்டு சித்தர்களுக்கு உதவி செய்ததாக ஒரு தகவல்.

* அகத்தியர் உத்தரவால், ஒரு அசுரன், இரு மலைகளை காவடி போல் சுமந்து பொதிகை நோக்கி கொண்டு செல்ல, முருகர் அவனை தடுத்து நிறுத்தி, போரில் தோற்கடித்து, இரண்டு குன்றையும் இப்போது இருக்கும் இடத்தில் வைக்க செய்தார் என்று புராண தகவல்.

* போகர், இகபரத்தில் இருக்கும் போது தன் மனைவிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற, முருகனை மேற்கு திசை நோக்கி பிரதிஷ்டை செய்தார். இதனால், மலை நாட்டில் உள்ளவர்களுக்கு பழனி முருகன் குல தெய்வம் ஆனார்.

* கல்லில் சிலை செய்து பிரதிஷ்டை செய்து கட்டிய எத்தனையோ கோயில்கள் சிதிலமடைந்து போயும், நவபாஷணத்தில் சிலை செய்த இந்த கோயில் மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருப்பதன் காரணம் ... சித்தர் தான் என்று பலரின் எண்ணம்.

* தண்டாயுதபாணி சிலைக்கு இடது பக்கத்தில் ஒரு சின்ன மரகத லிங்கம் உள்ளது. அவரை தரிசிக்க வலதுபக்கமாக சென்றால், தீபம் காட்டினால் மட்டும் தான் அதை பார்க்க முடியும்.

* பழனியில் இரண்டு மரகத லிங்கம் உள்ளது. ஒன்று முருகர் சன்னதியில், இன்னொன்று போகர் சமாதியின் மேல். இரண்டுமே போகர் பூஜை செய்ததாக தகவல். 

*தலபெருமை*

*தண்டாயுதபாணி சிறப்பு* : விநாயகர் தன் அன்னையிடமிருந்து தோன்றியவர். முருகனோ, தந்தையின் நெற்றிக்கண்ணில் இருந்து உதித்தவர். இருந்தாலும், தாயின் மீது அவருக்கு கொள்ளைப்பாசம். பொதுவாக குழந்தைகள் தாய்க்குப் பிறகே தந்தையிடம் அடைக்கலமாவார்கள். இடும்பன் என்பவன் அகத்தியரின் உத்தரவுப்படி தென் பொதிகைக்கு கொண்டு செல்ல சக்திகிரி, சிவகிரி என்ற இருமலைகளை எடுத்து வந்தான். வழியில் இத்தலத்தில் பாரம் தாங்காத இடும்பன் மலைகளை கீழே வைத்து விட்டான்.

இதில் சக்திகிரி அம்பிகையின் அம்சம், சிவகிரி சிவனின் அம்சம். திருஆவினன்குடியில் இருந்த முருகன், அம்பிகையின் அம்சமான சக்திகிரி மீது ஏறி நின்று கொண்டார். இடும்பன் அவரை இறங்கும்படி சொல்லியும் கேட்கவில்லை. இடும்பன் அவரை எதிர்க்கத் துணிந்தான். அவனுக்கு தன் அருட்பார்வையை செலுத்தி, தன்னுடன் வைத்துக் கொண்டார் முருகன். மலையில் நின்ற இவர் கையில் தண்டம் வைத்திருந்ததால், "தண்டாயுதபாணி' என்று பெயர் பெற்றார்.

பிற்காலத்தில் இங்கு வந்த போகர் சித்தர், முருகனுக்கு நவபாஷாணத்தால் ஒரு சிலை வடித்தார். இந்த மூர்த்தியே மலைக்கோயிலில் மூலவரா காட்சி தருகிறார். காலப்போக்கில் இவரே பிரபலமாகிவிட்டார். தண்டம்' என்றால் "கோல்' அல்லது "அபராதம்' என்ற இருவகைப் பொருள்களைக் கொண்டது. "இவ்வுலக வாழ்வு நிலையற்றது' என்னும் ஞானபாடத்தை கற்பிக்கும் ஆசிரியராக முருகன் இத்தலத்தில் அருளுகிறார்.

ஆசிரியரின் கையில் கோல் இருக்கிறது. அதைக் கொண்டு பயமுறுத்தி, மாணவர்களை ஒழுக்க வழிக்கு திருப்புவார். முருகன் என்ற ஞான ஆசிரியனும், தன் கையிலுள்ள கோலால், உலக இன்பங்களான மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்னும் மாயைகளில் மூழ்கித் தவிக்கும் மக்களை ஆசைகளைத் துறந்து, தன்னைப் போல் ஆண்டிகோலத்திற்கு அழைக்கிறார்.

மறுப்பவர்களுக்கு "சோதனைகள்' என்னும் அபராதம் விதிக்கிறார். அச்சோதனைகளை தாங்க முடியாதவர்கள், அவரது வழிக்கே சென்று விடுகின்றனர்.

*தம்பியை காத்த அண்ணன்* : சிறுவன் வடிவிலிருந்த முருகனிடம், இடும்பன் சண்டையிட முயன்றபோது, விநாயகர் அவரை காக்க வந்தார். ஆனாலும், முருகனுக்கு கிடைக்க வேண்டிய பழத்தை தான் பெற்றுக்கொண்டதால், தன் மீது அவருக்கு கோபம் இருக்கும் என்பதால், சுயவடிவத்தை மறைத்து நாக வடிவில், இடும்பனுடன் சண்டையிட்டார்.

இந்த விநாயகர் மலைக்கோயில் செல்லும் வழியில், இடும்பன் சன்னதி அருகில் சர்ப்பத்தின் மீது காட்சி தருகிறார். தன் வலது காலை நாகத்தின் தலை மீது வைத்துள்ளார். "சர்ப்பவிநாயகர்' என்று இவரை அழைக்கிறார்கள்.

மலைக்கோயில் அடிவாரத்தில் "பாதவிநாயகர்' இருக்கிறார். மலையேறும் முன்பாக இவரை வணங்கிச்செல்ல வேண்டும் என்பது ஐதீகம். இவ்விநாயகருக்கு பின்புறத்தில் முருகனின் பாதம் இருக்கிறது. இவ்விரு விநாயகர்களின் தரிசனமும் இங்கு விசேஷம்.

*முருகனுக்கு அன்னாபிஷேகம்* : பழநியில் முருகப்பெருமானை மூன்று கோலங்களில் தரிசிக்கலாம். பெரியநாயகி கோயிலில் மயில் வாகனம் இல்லாமல் வள்ளி, தெய்வானையுடன் திருமணக்கோலத்திலும், திருஆவினன்குடியில் மயில் மீது அமர்ந்து குழந்தை வடிவிலும், மலைக்கோயிலில் கையில் தண்டத்துடனும் காட்சி தருகிறார். ஒரே தலத்தில் இவ்வாறு முருகனின் மூன்று கோலங்களையும் தரிசிப்பது அபூர்வம்.

*தல வரலாறு*

நாரதர் கொடுத்த கனியை, தனக்கு தராததால் கோபித்துக்கொண்ட முருகன் மயில் மீதேறி இத்தலம் வந்தார். சமாதானம் செய்ய, அம்பிகை பின்தொடர்ந்து வந்தாள். சிவனும் அவளை பின்தொடர்ந்தார். முருகன் இத்தலத்தில் நின்றார்.

அம்பிகை, இங்கு மகனை சமாதானம் செய்தாள். ஆனாலும் முருகன் விடாப்பிடியாக இங்கேயே இருக்க விரும்புவதாகச் சொல்லி தங்கிவிட்டார். பிற்காலத்தில் இவ்விடத்தில் முருகனுக்கு கோயில் எழுப்பப்பட்டது. சுவாமி குழந்தை வடிவமாக நின்றதால், "குழந்தை வேலாயுதர்' என்று பெயர் பெற்றார்.பழத்தின் காரணமாக முருகன் கோபித்து வந்தபோது, அவரைக் கண்ட அவ்வையார், "பழம் நீ' (நீயே ஞானவடிவானவன்) என்று ஆறுதல் வார்த்தைகள் சொன்னார். இப்பெயரே பிற்காலத்தில், "பழநி' என மருவியது.

No comments:

Post a Comment