Thursday, December 7, 2017

நோயின்றி வாழ பிரண்டை *

*

    சித்தர்கள் நாம் நோயின்றி வாழ பல முறைகளை வகுத்துள்ளனர். அவற்றில் ஒன்றுதான்  மூலிகை கற்ப வகைகளுள் சிறப்பானதாக கூறப்பட்ட *“பிரண்டை”* என்னும் மூலிகை பற்றி  பார்க்கலாம்.

    *உணவே மருந்து,மருந்தே உணவு”* என்பதற்கிணங்க பிரண்டை என்னும் இந்த மூலிகை வீட்டு உபயோகத்தில் துவையல், ஊறுகாய், அடை போன்றவையாகவும் மருத்துவத்தில் வயிறு எரிச்சல், வயிற்று வலி (அல்சர்) போன்றவற்றிற்காகவும் பன்னெடுங்காலமாக நம் தென்னிந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு *“வச்சிரவல்லி”* என்ற மற்றொரு பெயரும் உண்டு.

   இஃது ஓலைப் பிரண்டை, உருட்டைப் பிரண்டை, களிப் பிரண்டை, தீம் பிரண்டை, புளிய பிரண்டை, முப் பிரண்டை என பல பிரிவுகளுமுண்டு. இதில் முப் பிரண்டை கிடைப்பது அரிது.

* பிரண்டையின் பொதுக்குணம்;:-*

    *பிரண்டையை நெய் யால்வறுத்துப் பின்னரைத்து மாதே!*

    *வெகுண்டிடா தேற்று விழுங்கிடில் - அரண்டு வரும்*

    *மூலத் தினவடங்கும் மூலவிரத்த மறும்*

    *ஞாலத்தி னுள்ளே நவில்*

 பிரண்டையினால் வயிற்று வலி (அல்சர்), ஆசனவாய் எரிச்சல், ஆசனவாயில் இரத்தம் வரும் நோயான இரத்த மூலம், முளை மூலம் மற்றும் கை கால் ஓய்ச்சல் நீங்கும். பசி உண்டாகும்.

*பிரண்டையின் மருத்துவப் பயன்களும்,அதை பயன்படுத்தும் விதமும்:-*

*பசியை உண்டாக்க:*

 சிறு துண்டுப் பிரண்டையை சுண்ணாம்பு நீரில் ஊறவைத்து,வேளைக்கு ஒன்றிரண்டு துண்டு சாப்பிட பசியை உண்டாக்கும்.

*உடலைத் தேற்றி; வன்மையுண்டாக்க:*

பிரண்டையின் இளந்தண்டை வெயிலில் உலர்த்தி, உலர்ந்த பின் அந்த இளந்தண்டை பொடியாக்கி அந்த பொடியை பாலில் கலந்து சிறிது கற்கண்டு சேர்த்து காலை, மாலை இரண்டு வேளை அருந்தினால், அது உடலைத் தேற்றி வன்மையை கொடுக்கும்.

ஆசனவாய் எரிச்சல், ஆசனவாயில் இரத்தம் வடிதல் குணமாக:

    பிரண்டையை நெய் விட்டு வறுத்து அரைத்து எலுமிச்சை அளவு 8 நாள் காலை,மாலை சாப்பிட்டு வர ஆசனவாய் எரிச்சல்,ஆசனவாயில் இரத்தம் வடிதல் குணமாகும்.

*வயிற்றுப் பிணி (அல்சர்) குணமாக:*

   பிரண்டையைத் துண்டு, துண்டாக நறுக்கி, வகிர், வகிராய்ப் பிளந்து மோரில் ஊற வைத்து, நன்றாக நைய இடித்து அதில் மிளகு, கொத்தமல்லி, சீரகம், உளுந்து, எள்ளு, கொள்ளு, உப்பு இவற்றை அளவாகச் சேர்த்து அரைத்து, சிறிய வடகங்களாகச் செய்து, காய வைத்து நன்றாக காய்ந்த பின், நெய்யில் வறுத்து, பின் வேளைக்கு 1-2 வடகங்களாக சாப்பிட வயிற்றுப் பிணி (அல்சர்) தீரும். பசி உண்டாகும்.

*மூல வியாதி குணமாக:*

  பிரண்டையை நன்றாக மோரில் ஊற வைத்து, பின் நன்றாக சுத்த நீரில் அலம்பி, துண்டு துண்டாக நறுக்கி பின் அம்மியில் வைத்து சிறிது புளி, உப்பு சேர்த்து அரைத்து துவையலாக செய்து அருந்த மூல வியாதி குணமாகும்.

*வயிற்றுப் புழுக்கள் தீர:*

  பிரண்டை, இலந்தை, வேப்ப ஈர்க்கு, முருக்கள் விதை, ஓமம் இவைகளை முறைப்படி குடிநீரிலிட்டு குடிக்க வயிற்றுப் புழுக்கள் தீரும்.

*வயிற்று நோய், செரியாமை குணமாக:*

  பிரண்டையின் இளந்தண்டை, இலையுடன் உலர்த்திப் பொடித்து, சுக்குத்தூள், மிளகுத்தூள், சிறிது சேர்த்துச் சாப்பிட வயிற்று நோய், செரியாமை நீங்கும்.

*காதில் சீழ் வடிவது குணமாக:*

 பிரண்டையைச் சிறு தீயிலிட்டு வதக்கி சாறு பிழிந்து, காதில் இரண்டு துளி விட, காதில் வடியும் சீழ் நிற்கும்.

*முறிந்த எலும்புகள் சீக்கிரம் கூட:*

  பிரண்டையின் வேரை உலர்த்திப் பொடித்து வேளைக்கு 2 கிராம் காலை, மாலை இரு வேளை வெந்நீரில்ல கொடுத்து வர முறிந்த எலும்புகள் சீக்கிரம் கூடும். பிரண்டையில் “கால்சியம் ஆக்சலேட்”(Calcium Oxalate) என்னும் சத்து அதிக அளவில் உள்ளதால் எலும்புகள் தேய்மானத்தை குறைக்கிறது.

 பிரண்டையின் வேரை வெந்நீரில் குழைத்து மேற்புறமாக பசிவர வீக்கம் குறையும்.

*வாத நோய்கள், உடம்பு வலி குணமாக:*

  மோரில் பாவனை செய்து உலர்த்தி இடித்த பிரண்டை பொடியுடன், சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம், கொத்தமல்லி இவைகளின் பொடியை சேர்த்து வேளைக்கு 1 ஸ்ப+ன் சாப்பிட்டு வர உடம்பு வலி, வாத நோய்கள் குணமாகும்.

*அடிபட்ட வீக்கம், இரத்தக் கட்டு குணமாக:*

  பிரண்டையை பச்சையாக, நன்றாக அம்மியில் வைத்து மை போல் அரைத்து, அடிபட்ட வீக்கத்தில்ல வைத்துக் கட்ட அடிபட்ட வீக்கம், இரத்தக் கட்டு குறையும்.

*பிரண்டையை கற்பமாக பயன்படுத்தும் முறை:*

 பிரண்டையில் ஆங்காங்கே சிறுசிறு கணுக்கள் உண்டு. முதலில் அந்த கணுவை நீக்கி கொண்டு, பின் பிரண்டையை வகிர் வகிராய் பிளந்து மோரில் ஊறவைத்துக் கொள்ளவும். பின் மோரில் ஊறிய பிரண்டையை நன்றாக சுத்தமான நீரில் அலம்பி, அதனுடன் மிளகு, சீரகம், சிறிது புளி, உப்பு, கொத்தமல்லி முதலியவைகளைச் சேர்த்து நன்கு அரைத்து துவையலாகவோ அல்லது அடையாகவோ 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் நோயினால் நொந்து மெலிந்த உடல் பலப்படும்.

No comments:

Post a Comment