🍛 *
உலகில் உயிர்கள் வாழ மிக அவசியமானது உணவு. அது, அறுசுவையும் கலந்ததாக இருக்க வேண்டும். ஏனெனில், அவைதான் நம் உடலுக்கும் உயிருக்கும் ஆதாரமான தாதுக்களாகிய பித்தம், கபம், வாதம் ஆகியவற்றைச் சமநிலையில் வைத்து, நம் உடல் நலத்தைக் காப்பவை. அதே நேரம், எல்லா உணவுகளையும் எல்லா நேரத்திலும் எடுத்துக்கொள்வதும் தவறானது.
ஒரு நாளின் தொடக்கத்துக்கான பூஸ்ட்டராக இருப்பது, காலைஉணவுதான். காலை உணவே நம் உடலுக்கும் மூளைக்கும் தேவையான சுறுசுறுப்பைத் தரும். காலை உணவைத் தவிர்த்தால், நமது மூளை சோர்வடையும். தேவை இல்லாமல் சாப்பிடத் தூண்டும். இது உடல் எடையை அதிகரிக்கும். காலை உணவில் எவற்றை எல்லாம் எடுத்துக்கொள்ளலாம், எவற்றைத் தவிர்க்கலாம் எனப் பார்ப்போம்…
பருத்திப்பால்
காலையில் காபி, டீ குடிப்பதற்குப் பதிலாக, பருத்திப்பால் குடிக்கலாம். முதல் நாள் இரவிலேயே பருத்தி விதைகளைத் தேவையான அளவு எடுத்து, ஊறவைத்து, காலையில் அதில் இருந்து பால் எடுத்து (ஒரு டம்ளர்), தேங்காய்ப் பால் (ஒரு டம்ளர்), பசும்பால் (ஒரு டம்ளர்) கலந்து குடிக்கலாம். கடின உடல் உழைப்பு செய்பவர்கள், இதனுடன் சம்பா அவல், கருப்பட்டி சேர்த்து, கஞ்சிபோல் காய்ச்சிக் குடிக்க, அன்றைய காலை உணவு அபாரம்!
பூண்டுக் கஞ்சி
பூண்டு ஒரு கை அளவு, சாரணைவேர் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்), சுக்கு (சிறிதளவு), முருங்கை இலை (ஒரு கைப்பிடி), புழுங்கல் அரிசி (தேவையான அளவு) மற்றும் பசும்பால் அல்லது தேங்காய்ப் பால் ஆகியவற்றைச் சேர்த்துக் கஞ்சி காய்ச்சி, வாரம் ஒரு முறை காலை வேளையில் குடித்துவர, வாயுத்தொல்லைகள் அறவே நீங்கும்.
காலையில் டிபன் வகைகளுக்குச் சட்னி சாப்பிட்டுச் சலிப்படைந்தவர்கள், பயறு, கடலை, காராமணி, துவரை, உளுந்து, மொச்சை ஆகியவற்றை கடுகு, மிளகு, பெருங்காயம், சுக்குடன் சேர்த்து, கறியாகச் சமைத்து, இட்லி, புட்டு, தோசை, இடியாப்பம், ஆப்பம் ஆகியவற்றுடன் எடுத்துக்கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகள் சிறுதானியங்களில் சமைத்த உணவுகளுடன் இதனை எடுத்துக்கொள்ளலாம்.
பழைய சோறு
இரவில் செய்த அரிசிச் சோறு மீந்துபோனால், அதில் நீரூற்றி வைக்கலாம். நீரூற்றிய சோறு அதாவது, பழைய சோற்றை நீருடன் காலை வேளையில் சாப்பிடுவது நல்லது. இதன் மூலம் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். இதனோடு, சிறிய வெங்காயம் இரண்டு சேர்த்துச் சாப்பிட்டுவர நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாகப் பெருகும். பழைய சோற்றுடன் மோர் சேர்த்தும் சாப்பிடலாம். பழைய சோற்றில் வைட்டமின் பி6, பி12 முதலான சத்துக்கள் அதிகம் உள்ளன. மேலும், பழைய சோறு குளிர்ச்சியைத் தரக்கூடியது என்பதால், சைனஸ் முதலான தொந்தரவு உள்ளவர்கள் இதனைத் தவிர்ப்பது நல்லது. நிசிநீர் எனப்படும் பழைய சோற்று நீர் அருந்த, நாவறட்சி நீங்கி, உடல் வெப்பம் தணியும்.
இஞ்சி – தேன்
இஞ்சியைத் தோல் நீக்கி, அரைத்து, சாறு எடுத்து, அதனுடன் சுத்தமான தேன் கலந்து சாப்பிடலாம். இதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரையும். மேலும், இஞ்சியானது உமிழ் நீரைப் பெருக்கி, பசியைத் தூண்டும். செரிமானத்திறன் மேம்படும். வயிற்றுப்புண் உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது. உடல் பருமன் உள்ளவர்கள், நீரில் தேன் கலந்து பருகலாம்.
வெந்தய நீர்
வெந்தயத்தை ஊறவைத்த தண்ணீர் அல்லது சீரகத் தண்ணீர் போன்றவற்றை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளலாம். சீரகத் தண்ணீர் அஜீரணக்கோளாறுகளை நீக்கி, உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். வெந்தய நீர் குளிர்ச்சியைத் தந்து, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும்.
வெந்தயக் களி
100 கிராம் பச்சரிசி, 10 கிராம் வெந்தயத்தைத் தனித்தனியாக மாவு போல பொடித்துக்கொள்ள வேண்டும். இதை, வாரத்துக்கு ஒருமுறை காலையில், களியாகச் செய்து சாப்பிட, உடல் வெப்பம் தணியும். அரிசியில் மாவுச்சத்து உள்ளதால், உடல் எடை அதிகரிக்கும். பெண்களுக்கு இது மிகவும் நல்லது. குழந்தைகளுக்கும் ஏற்றது.
உளுந்தங்களி
பச்சரிசி, உளுந்தைத் தனித்தனியாக அரைத்துவைத்துக்கொள்ள வேண்டும். 100 கிராம் அரிசி மாவுக்கு, 25 கிராம் உளுந்து என்ற அளவில் சேர்த்து, வெல்லம் சேர்த்து, களியாகக் கிண்டிச் சாப்பிடலாம். பெண்களுக்கு மாதவிடாய் சமயங்களில் உளுத்தங்களி மிகவும் உகந்தது. மேலும், வெள்ளைப்படுதல் பிரச்னைக்கும் சிறந்த பலனைத் தரும்.
காலையில் அருந்தக்கூடிய எளிய பானங்கள்
விழித்தவுடன் சுத்தமான நீர் இரண்டு டம்ளர் அருந்த மலம், சிறுநீர் கழிப்பதில் சிக்கல் இல்லாமல் இருக்கும். வெந்நீர் அருந்த மந்தம் நீங்கும்.
குழந்தைகளுக்குப் பல தானியங்கள் கலந்த சத்து மாவுக் கஞ்சி பால், வெல்லம், நாட்டுச்சர்க்கரை கலந்து கொடுக்கலாம். கேழ்வரகை முளைக்கட்டி அரைத்து, பால் எடுத்துக் கஞ்சி காய்ச்சி அருந்தலாம். இதில் கால்சியம் நிறைவாக உள்ளதால், எலும்புத் தேய்மானம் உள்ளவர்களுக்குச் சிறந்த பானம்.
பாதாம், சோயா போன்றவற்றை நீரில் ஊறவைத்து அரைத்து, பால் எடுத்து, கஞ்சி காய்ச்சிக் குடித்துவந்தால், உடல் பலம் பெறும். இதனுடன், வெல்லம், ஏலப்பொடி, நாட்டுச்சர்க்கரை முதலானவற்றைச் சேர்த்துப் பருகலாம். வெயில் காலங்களில் கம்பங்கஞ்சியை மோருடன் கலந்து குடிக்க, உடல் வெப்பம் நீங்கும். தேங்காய்ப் பாலை வெறும் வயிற்றில் குடிக்க, வயிற்றுப்புண், வாய்ப்புண் நீங்கும்.
எதைத் தவிர்க்க வேண்டும்?
காலையில், மிகவும் புளிப்பு உணவுகளான எலுமிச்சை, புளி, தக்காளி போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. மேலும், வாழைப்பழம், எண்ணெயில் பொரித்த உணவுகள், மாமிச உணவு, இளநீர் முதலானவற்றை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளக் கூடாது.
இவை பித்தம், வாதம் முதலானவற்றை அதிகப்படுத்தி, வயிற்று நோய்கள், குடல் நோய்களை உண்டாக்கும். வாழைப்பழத்தை உணவுக்குப் பின் எடுத்துக்கொள்ளலாம்.
அதே போல் டீ, காபி முதலானவற்றை காலையில் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். இவை, வயிற்றுக்கோளாறு, குடல்புண், செரிமானக் குறைபாடு முதலானவற்றை ஏற்படுத்தும்.
வெறும் வயிற்றில் இலகுவானதும், எளிதில் சக்திதர வல்லதும், எளிதில் ஜீரணமாகக்கூடியதுமான உணவுகளையும், நீர்ச்சத்து உடையதுமான உணவுகளை எடுத்துக்கொள்வதுதான் நம் போன்ற வெப்ப மண்டல நாட்டு மக்களுக்குப் பொருந்தும்.
No comments:
Post a Comment