Monday, December 25, 2017

திருப்பூர் தொழில் நிலை கவலைக்கிடம்!!

கடந்த 32 வருடங்களாக திருப்பூரில் வசிக்கின்றேன்! இதில் 25 வருடங்களாக
சொந்தமாக தொழில் செய்கின்றேன்!
கடந்த நான்கு வருடங்களாக
தொழில் மிக மோசமான நிலைக்கு
சென்று கொண்டுள்ளது.
அதிலும் கடந்த 6 மாதங்களாக
தொழிலை நினைத்து கண்ணீர்
விடாத நபர்களை ஒட்டுமொத்த திருப்பூரில்
விரல் விட்டு எண்ணிவிடலாம்!
ஏன் இந்த நிலமை? ஒரு சிலருக்கு
மட்டும்தான் பிரச்சினை என்றால்
அவர்களின் தவறு நிர்வாகத்தில் தவறு
என்று கூறலாம்!

ஒட்டுமொத்த திருப்பூருக்கே இந்த நிலமை என்கிறபோது எங்கோ தவறு நடக்கிறது
என்பது உறுதியாக தெரிகிறது
இந்த பிரச்சினைகள் அனைத்திற்கும் அரசாங்கத்தையோ ஆட்சியாளர்களையோ
குறைசொல்வது எளிதான ஒன்று ஆனால்
அரசு திட்டங்களால் 10-15 % பாதிப்பு என்பது உண்மை!
ஆனால் உண்மையான பாதிப்பு என்பது
நாமாக ஏற்படுத்திக்கொண்டது.
சில பாதிப்புகள் வெளிநாட்டு இறக்குமதியாளர்களால் நம்மீது திணிக்கப்பட்டவை!

பனியன் ஆடைகள் தரமாக இருக்கவேண்டும்,
நன்கு உழைக்கவேண்டும்,
சலவை செய்யும் போது அதன்
வடிவம் மாறக்கூடாது,
அந்த ஆடைகளில் தீங்கு விளைவிக்கின்ற
எந்த இராசாயண பொருட்களும் இருக்கக்கூடாது,
அதுவும் குழந்தைகளின்
ஆடைகளில் செய்யப்படும் அலங்காரங்கள்
மிகவும் மென்மையாகவும் சருமத்திற்கு
தீங்கில்லாமல் இருக்கவேண்டும் என்பதில் ஆடை ஏற்றுமதியாளர்கள் மிகவும் கடுமையாக
கடைபிடிக்கின்றனர் அவற்றை பரிசோதனை
செய்வதில் ஒரு அர்த்தம் இருக்கிறது
அந்த தரத்தில் இங்கு யாரும் சமரசம் செய்துகொள்வதில்லை.

ஆனால் பனியன் இறக்குமதி நாடுகளுக்கு மறைமுகமாக வருமானம் வருவதற்காக
இறக்குமதியாளர்களின் நாட்டை சார்ந்த சோதனை ஆய்வகங்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு சிறிய ஆர்டருக்கும் 30-50 சோதனைகள்
என்ற ரீதியில் வருடத்திற்கு பல
நூறு கோடி ரூபாய்களை
ஏற்றுமதியாளர்களிடம் பறிப்பதால்
உற்பத்தி செலவு கணிசமாக உயர்ந்தது.
பல ஆர்டர்கள் செய்யும் ஒரு பருவத்தில் ஒன்றிரண்டை மட்டும் சோதனை செய்து
அதன் முடிவுகளை அனுப்பினால் போதாதா?
அதே மூலப்பொருட்களையும் அலங்காரப்பொருட்களும் தானே அனைத்து
ஆர்டர்களுக்கும் உபயோகித்திருப்பார்கள்
இதை இறக்குமதியாளர்களுக்கு கூறி இந்த செலவுகளை குறைத்திருக்கவேண்டும்.

இந்திய தொழிலாளர் சட்டங்களும், தொழிற்சாலை விதிகளும் தொழிலாளர் பாதுகாப்பும் மிக தெளிவாக இருக்கின்றன!
மேலும் பெரும்பாலான நிறுவனங்கள்
அவற்றை பின்பற்றுகின்ற போதும்,
கம்ப்ளையன்ட்ஸ் என்ற பெயரில்
இறக்குமதியாளர்களின் அதி பயங்கரமான
அர்த்தமற்ற கட்டுப்பாடுகளை ஆடை தயாரிப்பு நிறுவனங்களில் அமல்படுத்துவதாலும்
அதற்கான லைசென்ஸ் அவர்களிடம் பெறுவதற்கான நிலைமையும் அதற்கான
செலவுகளும் இந்த தொழிலை மிக மோசமான நிலைக்கு கொண்டு சென்று விட்டது!

உற்பத்திக்கான தேவையை விட
பலமடங்கு இயந்திரங்கள் பனியன்
உற்பத்திக்கு அமைத்ததும்,
பனியன் சார்ந்த அனைத்து சார்பு தொழில்
நிறுவனங்களையும் ஒரே இடத்தில்
கொண்டுவந்தால் தயாரிப்பு விலை குறையும் என்கிற வெளிநாட்டு ஆடை இறக்குமதியாளர்களின்
தவறான ஆலோசனைகளும் நிர்பந்தங்களும்,
நான்கைந்து நாடுகளுக்கு உண்டான
ஆடைகளை ஒரே இடத்தில்
தயார் செய்ய வசதிகளும் இடமும்
இருக்கின்ற போதும்
நான்கு விதமான ரெக்கார்டுகளை
பராமரிப்பது சிரமமென்றும் மற்றும்
அந்த இடத்தில் பல்வேறுவகையான
நடைமுறை மாற்றங்களை
செய்யவேண்டியுள்ளதால் ஒவ்வொரு பிராண்டிற்கும் தனி கட்டிடம் அதற்கான செலவுகள் இவையெல்லாம்தான் இன்று தொழிலதிபர்களின் கழுத்தை நெரிக்கிறது!

எவ்வளவுதான் தெளிவாகவும் முறையாகவும் ஆடைகளை உற்பத்தி செய்தாலும் கூட
சில நேரங்களில் மிக அவசரமாக ஏற்றுமதி
செய்யவேண்டியபோது தொழிலாளர்களின்
ஒத்துழைப்புடன் மிகைநேர வேலையும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட வேலை
செய்யவேண்டிய சூழல் வரும்போது இறக்குமதியாளர்களின்
ஏஜன்டுகள் காவலர் போலவும்
பனியன் தொழிலதிபர்கள் சாராயம் காய்ச்சுபவர்களை
பிடிப்பது போல நள்ளிரவு நேரங்களிலும்
ஞாயிறுகளிலும் திடீர் ஆய்வு செய்து குற்றவாளிகளை போல நடத்துவதும்
ஆர்டரை கேன்சல் செய்வதும் ஏற்றுமதியாளர்களை கருப்பு பட்டியலில்
சேர்த்து தொழிலை அடியோடு ஆடை இறக்குமதியாளர்கள் நசுக்குகின்றனர்.

வெளிநாட்டு இறக்குமதியாளர்களின்
அனைத்து அடக்குமுறையான விதிகளை
பின்பற்றினாலும் அதற்கான விலையை தருவதில்லை! இந்த விதிகளில் ஒன்றிரண்டை கூட பின்பற்றாத கிட்டத்தட்ட
30% டியூட்டி ட்ராபேக்
மற்றும் திருப்பூர் தொழிலாளிகளுக்கான சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு
சம்பளம் மட்டுமே தருகின்ற வங்கதேசத்தை ஒப்பிட்டு அதன் விலைக்கு தயார் செய்ய சொல்வதும் நிர்பந்திப்பதும் நடக்கிறது!

ஒவ்வொரு நிறுவனமும் கட்டமைப்பிற்காக
பல லட்சங்கள் செலவு செய்தாலும்
வெளிநாட்டு இறக்குமதியாளர்கள்
எந்த நேரத்தில் வேண்டுமானாலும்
ஆர்டரை நிறுத்துவும் நடக்கிறது!

ஏற்கனவே நலிவுற்ற பல நிறுவனங்கள்
நான்கைந்து வருடத்திற்கு முன்னமே தனது
உற்பத்தியை நிறுத்திவிட்டன!
பெருந்துறை சிப்காட்டில் 6-7 வருடங்களாக
திருப்பூர் பனியன் நிறுவனங்களுக்கு சார்ந்த பல சாய ஆலைகள் மூடிக்கிடக்கின்றன!!
அவற்றின் முதலீடுகளால் மற்றும் அதன் வங்கிக்கடனை கட்டியதாலும் கட்டமுடியாததாலும் பல நிறுவனங்கள் நலிவடைந்துவிட்டன!!
நஷ்டமான நிறுவனங்களின் இயந்திரங்களை எளிதில் விற்று வங்கிக்கடனையும் அடைக்க முடிவதில்லை!

இதுபோன்று பல பிரச்சினைகளில் திணறிக்கொண்டிருந்த திருப்பூர் பனியன்
தொழில் உயர்பண மதிப்பிழப்பின் போது
உள் நாட்டு வணிகம் மற்றும் கணக்கில்
காட்டாத இரண்டாம் ரக ஆடைத்தொழில்
பாதிப்படைந்தாலும் ஏற்றுமதி வணிகத்திற்கு
அதிகப்பாதிப்பில்லாமல் சென்று கொண்டிருந்தது!!

ஆனால் GST வரிவிதிப்பின் போது
ஆரம்பத்தில் பனியன் சார்பு தொழில்களுக்கு
18% என்ற நிலை இருந்ததால் பலபேர்
தொழிலை தற்காலிகமாக நிறுத்தியதும் உண்மை. அதன்பின்னர் வரி 5% அளவில் மாறியதால்
பாதிப்பு குறைந்தது!!
இருந்தாலும் ஏற்றுமதியாளர்களுக்கு
வரவேண்டிய முந்தைய ட்ராபேக்
மற்றும் வாட் ரீபண்ட், GST ரீபண்ட்
போன்றவை இன்னும் முழுமையாக
வந்தடையவில்லை. அரசு ட்ராபேக்கிற்கு
மாற்றாக வேறு சில சலுகைகளை அறிவித்திருந்தாலும் அவை
போதுமானதாக இல்லை!

தொழிலுக்கு சிரமமான இந்த
காலகட்டத்தில் வங்கிகளும்
பொறுப்பில்லாமல் தங்கள் நிலையை
மேலும் கடுமையாக்கியுள்ளன!
ஒரு மாதத்திற்கும் மேலாக தவணை பாக்கியிருந்தாலும்
வசூல் செய்வதில் கடுமையாக
நடந்துகொள்கின்றன.

இத்தனை பிரச்சினைகள் பனியன்
தொழிலில் இருந்தாலும் GST மட்டுமே அனைத்திற்கும் காரணம் என்பதுபோன்ற
ஒரு தோற்றத்தை உருவாக்குவதில் பலர்
முனைப்பாக இருக்கிறார்கள்!!
இன்றைய சூழலில் GST யை
முழுமையாக நீக்கினாலும் தொழில் மேம்பாடு
அடையாது! அதற்குப்பதிலாக வரிவிதிப்பில்
சில விதிவிலக்குளையும் ஏற்றுமதிக்கான
பல நாடுகளில் செய்வது போன்ற மின்சார சலுகை, பெட்ரோல் டீசல் வரி சலுகை
போன்ற சில சலுகைகளை அளித்தும்
போட்டி நாடான வங்கதேசத்தின் பனியன் ஆடைகளை இந்தியாவிற்குள் வரியில்லாமல்
கொண்டுவருவதை கட்டுப்படுத்தலாம்!

பனியன் தொழில் பிரச்சினையை தீர்க்க
மத்திய மாநில அரசுகள் திறந்த மனதுடன்
ஒரு நடுநிலையான குழு அமைத்து
பிரச்சினைகளை அலசி
உடனடி தீர்வு மற்றும் நீண்ட காலத்தீர்வு
இரண்டையும் கண்டறிந்து உதவவில்லையென்றால்
பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள்
வேலை இழப்பார்கள்
ஒரு சிறப்பான தொழில்நகரம் அதன் முக்கியத்துவத்தை இழப்பதோடு இந்த தொழில் வேறு மாநிலத்திற்கு சென்றுவிடும்!
-திருப்பூர் நலனில்
ஜூப்ளி பாலு

No comments:

Post a Comment