கேள்வி - ஆலயங்களையும், உடலையும் ஒப்பிட்டு நல்ல விளக்கங்கள் கொடுத்தீர்கள். ஓரளவு ஒத்துக் கொள்ளத் தக்க வகையில் இருக்கிறது. ஆனால், புற வழிபாடுகள் செய்வது எதற்காக ஐயா ? பூஜைகள், வேள்விகள், ஆடல், பாடல், கேளிக்கைகள், தேர் திருவிழாக்கள் என்று பொருள் விரையங்களை ஆதரிக்கிறீர்களா ?
இராம் மனோகர் - நான் ஆதரிப்பதாலோ, எதிர்ப்பதாலோ எந்த வித மாற்றமும் வந்து விடப் போவதில்லை. பல சித்தர்களும், ஞானிகளும்,பகுத்தறிவு வாதிகளும் வந்து பலவிதமாகப் புற வழிபாட்டு முறைகளைக் கிண்டல் செய்து, கண்டித்து பேசியிருந்தாலும், காலப் போக்கில் அவை அதிகரித்துதான் இருக்கிறதே தவிர குறைந்த பாடில்லை. ஞானிகள் அவர்கள் ஞானத்தின் நிலையில் நின்று சொல்வதை சாதாரண மனிதனால் பின்பற்ற முடியாது. வழிபாடுகள் என்பது மனிதனைப் பக்குவப் படுத்தும் யுக்திதானே தவிர, அதுவே முடிவல்ல. சொல்லப் போனால் ஞானம் என்பது கூட முடிவான நிலை அல்ல. அது ஒரு உயர்ந்த நிலை, அவ்வளவுதான். அதற்கு அப்பாலும் பல நிலைகள் உள்ளன. ஞானத்தின் நிலைக்கு பக்குவமடைந்து, உயர்ந்தவர்களுக்கு பக்குவமடையாதவர்களின் செயல்கள் குழந்தைகளின் பொம்மை விளையாட்டு போலத் தோன்றுகிறது.
எனவே கிண்டல் செய்கிறார்கள். வழிபாட்டு முறைகளும் எல்லா இடத்திலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. தனி மனிதனின் மனப் பக்குவம், மனநிலை, அறிவு நிலை, சூழ்நிலை போன்றவற்றிற்கு ஏற்பதான் அமைந்திருக்கின்றன. வழிபடுதல் என்றால் என்ன ? ''உயிரானது இறைவனை நோக்கிய வழியில் படுதல்'' இதுதான் வழிபடுதல். மனித உடல் அமைப்பையே ஆலய அமைப்பாக வடிவமைத்து, மனப்பக்குவம் பெறாதவர்களுக்கு புற வழிபாடுகளை ஏற்படுத்தித் தந்தார்கள். சடங்கு, சம்பிரதாயங்களுக்குப் பின்னால் மனப் பக்குவத்தை ஏற்படுத்தும் நுட்பங்கள் பல இருக்கின்றன. மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் அவற்றிற்கிடையே சில தேவையற்ற கேளிக்கைகளும் நுழைந்து விட்டன. அவை இன்றளவும் தொடர்கின்றன. அதை வைத்துக் கொண்டு மொத்த வழிபாட்டு முறைகளையும் தவறு என்று சொல்வது ஏற்புடையதல்ல. சித்தர்களிடம் கூட புற வழிபாடுகள் உண்டு.
சித்தர்களின் பூஜா விதி என்று அனைத்து சித்தர்கள் நூல்களிலும் தரப்பட்டுள்ளன. அவர்களும், யந்திரம், தந்திரம், மந்திரம், ஔஷதம் இவற்றைக் கொண்டு, புற வழிபாடுகள் செய்திருக்கிறார்கள். எனவே மனம் இறைவனை உணர, மனதில் இறைவுணர்வு மேம்பட வழிபாட்டு முறைகள் உள்ளன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தேர் திருவிழா என்பது எதற்காக ஏற்படுத்தப்பட்டது என்பதைப் பற்றி யோசிக்க வேண்டும். சாதிய தீண்டாமை உணர்வுகள் மேலோங்கியிருந்த கால கட்டங்களில், பாமரர்களும் இறைவுணர்வு பெற வேண்டும் என்ற நோக்கில்தான் இறைவன் தேரில் பவனி வருவதாக வடிவமைத்து வைத்தார்கள். இறைவனே ஆலயத்தை விட்டு அவர்களைத் தேடி வீதிகளுக்கு வந்து அவர்களுக்கு அருள் செய்கிறார் என்ற நிலையில் அவர்கள் மனதில் பக்தியை விதைத்தார்கள். இதுவும் அவ்வப்பொழுது தோன்றிய மகான்களின் யுக்திதான். இந்தக் காலத்துக்கு அது பொருந்துமா ? என்று கேட்டால், பொருந்தும் என்றுதான் நான் சொல்வேன்.
ஏனெனில், இப்பொழுதும் தன்னுடைய அன்றாட பனிகளுக்கு இடையே ஆலயங்களுக்கே வராமல் இறைவுணர்வே இல்லாமல் இருப்பவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் இத்தகைய விழாக்கள் மூலம், இறைவுணர்வு தூண்டப் பெறுகிறார்கள் என்பதுதான் உண்மை. அத்தகைய ஒரு காட்சி, ஒரு நிகழ்வு மனதில் இறைவுணர்வை விதைத்து விடுகிறது. என்றேனும் ஒரு நாள் அது முளைத்தெழும் பொழுது அவர்களும் இறைவனை நாட முனைவார்கள். விரையம் என்று பார்த்தால் தற்காலங்களில் நாம் உண்ணும் உணவு கூட விரையம்தான். உடலின் ஆரோக்யத்திற்காக யார் உணவு உண்ணுகிறார்கள் ? பசியை அடக்கவும், ருஷிக்காகவும்தான் உணவு உண்ணுகிறார்கள். எனவே நல்ல காரியங்களுக்காக எல்லோரும் சேர்ந்து சிறிதளவு பணம் செலவு செய்வதால் எந்தத் தீங்கும் நேர்ந்து விடப் போவதில்லை. எல்லாவற்றிற்கும் மனம்தான் காரணம். அதே சமயம் இதை சாக்காக வைத்துக் கொண்டு ஏமாற்றுபவர்களிடம் கவனமாக இருக்க வேண்டியதும் அவசியம்தான்.
புறவழிபாடுகளை மூன்றாகப் பிரிக்கலாம். வேள்விகள், யாகங்கள் மூலம் செய்யப்படும் வேத வழிபாடு. கோவில்களில் விதிகளுக்கு உட்பட்டு செய்யப்படும் ஆகம வழிபாடு(இந்த ஆகம விதிகளெல்லாம் மனக் கட்டுப்படிற்காகத்தான்).
தனிமனித வழிபாடு - நித்திய வழிபாடு, காமிய வழிபாடு, மூர்த்தி - தலம், தீர்த்தம், தந்திரம் - மந்திரம், எந்திர வழிபாடு என மூன்று நிலைகளில் வழிபாடுகள் அமைந்துள்ளன. இதை குணங்களின் அடிப்படையிலும் பிரிக்கலாம். அதாவது சாதாரண உணர்ச்சிகள், ஆசைகள், வேண்டுதல்கள் இவற்றோடு கூடிய வழிபாடு தாமச வழிபாடாகும். உலகியல் வாழ்க்கை, பொருள், பணம், பதவி, புகழ், வாய்ப்பு வசதிகளுக்காக செய்யப்படும் வழிபாடு இராஜசம வழிபாடாகும். வினைகளை சுட்டெரித்து, ஆன்ம விடுதலை பெற வேண்டும் என்ற நோக்கில் செய்யப்படுவது சத்துவ வழிபாடாகும். மன செகிழ்ச்சி, அறிவு முதிர்ச்சி, யோகப் பயிற்சி இல்லாதவர்கள் இறைத் தொண்டு புரிந்து, பழவினை நீக்கவும், மனதைப் பக்குவப்படுத்தவும் இவ்வழிபாட்டு முறைகள் உதவுகின்றன.
வழிபாட்டு முறைகளில் உள்ள மெய்ப்பொருள் விளக்கங்களைப் பார்க்கலாம்.
ஓங்காரம் - பிரணவம், பிள்ளையார்.
நடராசர் - ஐந்தொழில் வடிவம்.
முருகன் - ஓங்காரம், ஆறாதார வடிவம்.
லிங்கம் - அருவுரு வடிவம், ஜோதியின் உருவம்.
திரிசூலம் - மூவாற்றல், முச்சக்தி.
தேங்காய் - மும்மலம் நீக்கல்.
காவடி - சிவசக்தி இணைப்பு, ஆறாதார இணைப்பு, குண்டலினி உச்சி இணைப்பு.
மலையேறுதல் - அக்குபிரஷர் மருத்துவம்.
தீமித்தித்தல் - அக்குப் பஞ்சர் மருத்துவம்.
திருமுழுக்கு - இறையருளை ஞான நீராக பாவித்து, மருளான மல அழுக்குகளைக் கழுவுதல். மேலும் மூர்த்தங்களுக்கு அபிஷேகம் செய்யும் பொழுது அபிஷேகப் பொருள்களுக்கு ஏற்ப மின்கடத்தும் திறன் திருமேனியில் மாறுபடும். இதன் அதிர்வுகள் மூர்த்தத்தின் அடியில் உள்ள தாமிரத் தகட்டில் பாய்ந்து, சேமிக்கப்பட்டு, எதிரே உள்ளவர்கள் மீது பரவும்.
கற்பூர தீபம் - ஜீவான்மா பரான்மாவுடன் கலத்தல், இறைவன் ஒறிமயமானவன் என்பதை உணர்த்துதல், மன இருளை அகற்றி ஞான ஒளியின் மூலம் ஆன்மாவை உணர்தல்.
பூணுல் - உயிர் சக்தியை மேம்படுத்துவதற்காக பூண வேண்டிய நூல்.
நாக வழிபாடு - குண்டலினி வழிபாடு.
தோப்புக் கரணம் - குண்டலினியை எழுப்பும். வழிபாட்டுப் பாடல்கள் - குண்டலினியை எழுப்பும், ஆறு ஆதாரங்களைத் தூண்டும்.
பைரவ ராகம் - மூலாதாரத்தைத் தூண்டும்.
ஶ்ரீராகம் - சுவாதிட்டானத்தைத் தூண்டும்.
மல்லரராகம் - மணிபூரகத்தைத் தூண்டும்.
வசந்த ராகம் - அனாகதத்தைத் தூண்டும்.
இந்தோளம் - விசுத்தியைத் தூண்டும்.
கர்நாடகராகம் ஆக்கினையைத் தூண்டும்.
இனி குடமுழுக்கு பற்றி பார்ப்போம்.
குடம் - உடல்
குட நீர் - குருதி
குடத்துள் மணிகள் - சுக்கிலம்
தர்ப்பை - நாடி
நூல் - நரம்புகள்
துணி - தோல்
மந்திரம் - பிராணன்
தேங்காய் - தலை, முகம்
தேங்காய் மூடி - சிகை
மாவிலைகள் சிவ முடிகள்(சடை)
தீர்த்த வாரி - உயிர்கள் இறைவனின் அருட்கடலில் மூழகி வீடுபேறு அடைதல்.
இப்படி பல வகையான தத்துவங்களை பாவனை மூலமாக மனதில் இருந்தி, அதை வலுப்படுத்தி, இறைவுணர்வை மேம்படுத்துவதே புற வழிபாடுகளின் செயல்.