சித்தர் பாடல்களைப் பார்க்கும்போது மிக
சாதாரண விஷயமாகத் தெரியும். பல
வார்த்தைகளுக்கு அர்த்தமும் புரியாது.
நேரிடையாகப் பார்த்தால் ஒரு அர்த்தம்
இருக்கும். பொருளுணர்ந்து பார்க்கும்போதுதான் தத்துவம் புரியும். இதில் சிலவற்றை
அறிந்துகொண்டு மனதில் போட்டுவைத்தால்
இறையுணர்வு எப்போதும் இருக்கும்.
*மாங்காப் பாலுண்டு மலைமேல் இருப்போர்க்கு தேங்காப் பால்ஏதுக்கடி? குதம்பாய்! தேங்காப் பால் ஏதுக்கடி?*
குதம்பை என்றால் காதில் அணியும் ஒரு நகை.
இந்தப் பாடலை எழுதியவரும் குதம்பைச்
சித்தர்தான்.
இந்திரிய சக்தியை வீணாக்காமல்,
மூலாதாரத்திலிருந்து குண்டலினி சக்தியை
மேலெழுப்பி, அந்த சக்தியானது
சஹஸ்ராரத்தை அடையும் போது
அங்கேயுள்ள சிவனுடன் இணைகிறது.
அதன்விளைவாக அமிர்தத் தேன் உடலெங்கும்
பரவும். இந்த அமிர்தத் தேனைத்தான்
மாங்காப்பால் என்று இங்கே குறிப்பிடுகிறார்.
“மங்கா’ என்றால் நிலைத்த, என்றும்
பொலிவான என்று பொருள். மங்கா
என்பதுதான் கவிதைக்காக மாங்கா என்று
பாடப்பட்டுள்ளது.
தேங்காப்பால் என்பது சிற்றின்பங்களைக்
குறிக்கும்.
பேரின்பத்தை உணர்ந்தவர்கள் சிற்றின்பத்தை
நாடமாட்டார்கள். இப்படி இறை இன்பத்தை
உணர்ந்தவர்களுக்கு கரும்பும் துவர்க்குமாம்;
செந்தேனும் புளிக்குமாம். இதைத்தான்
அருணகிரியார் “கரும்பும் துவர்த்து
செந்தேனும் புளித்து அறக் கைத்ததுவே’
என்று கந்தர்
அலங்காரத்தில் கூறியுள்ளார்.
அது சரி; அந்த மாங்காப்பாலை உண்ணும்விதம்
எப்படி?
அழுகணிச் சித்தர் பாடல் ஒன்று இதை
விளக்கும்.
*“உச்சிக்கு கீழடியோ ஊசிமுனை வாசலுக்குள் மச்சிக்கு மேலேறி வானுதிரம் தானெடுத்து கச்சை வடம் புரிய காயலூர் பாதையிலே வச்சு மறந்தல்லோ- என் கண்ணம்மா வகை மோசமானேன்டி.’*
ஆக்ஞையில் (இரு புருவங்களுக்கு நடுவில்
தியானம் செய்து) பிரம்ம எந்திரத்தை தரிசித்து
நினைத்தால் அமிர்தத் தேனைப் பருகமுடியும்.
பேரின்பம் பெறமுடியும் என்பது கருத்து.
மச்சி என்பது உள்நாக்குக்கு மேலே.
ஊசிமுனை வாசல் என்பது பிரம்ம எந்திரம்.
இதற்குதான் காயலூர் பாதை எனப் பெயர்.
வானுதிரம் என்றால் குண்டலினி சக்தி.
கச்சை வடம் என்பது இடகலை, பிங்கலை,
சுழுமுனை முதலிய மூச்சு இயங்கும்
நாடிகள்.
நடுநெற்றியைத்தான் திரு அண்ணாமலை
என்று குறிப்பிடுவர்.
காரணப்பெயராகவே
திருவண்ணாமலை சேத்திரம் அமைந்துள்ளது.
“அண்ணாமலையை நினைத்தால் முக்தி’
என்பதன் பொருள், நடுநெற்றியில் ஒளியை
தரிசிப்பதுதான்.
ஞானக்கண்ணை மறந்து உலக வாழ்வில்
திரிவதை, “வச்சி மறந்தல்லோ வகை மோசம்
போனேன்’ என்று குறிப்பிடுகிறார்.
இப்படி பேரின்பத்தை அனுபவிக்காமல்
இருந்துவிட்டால் என்னவாகும்?
பிறப்பு- இறப்பு என்ற வட்டம் தொடரும்.
இறப்பு பிறப்பு
பிறப்பு இறப்பு
இறைவன் உடல் தந்ததன் நோக்கம்
நிறைவேறாமல் ஆகிவிடும்போது மறுபடியும்
பிறப்பு ஏற்படுகிறது. இதைத்தான்,
*“நந்தவனத்தில் ஓர் ஆண்டி*
*அவன் நாலாறுமாதமாய் குயனை வேண்டி*
*கொண்டு வந்தானொரு தோண்டி*
*அதை கூத்தாடிக்கூத்தாடி போட்டுடைத்தான்டி ’*
என்னும் சித்தர் பாடல் விளக்குகிறது.
கடவுள் அருளால் பத்து மாதம் கருவிலிருந்து
உயிரானது உடலைப் பெறுகிறது. இறைவன்
உடல் கொடுப்பதன் நோக்கமே, இறைவனை
உணர்ந்து அவனை அடையவேண்டும்
என்பதுதான். ஆனால் மக்கள் மாயையில் சிக்கி,
கண்டபடி வாழ்ந்து, உடலை வீணாக்கி, நாட்கள்
சென்றபின் இறந்துவிடுகின்றனர்.
இதைத்தான் “கூத்தாடிக் கூத்தாடி
போட்டுடைத்தான்டி’ என்று சித்தர்
கூறுகிறார்.
இந்த கருத்தைதான் திருநாவுக்கரசர்,
*“பிறந்தவாறு ஏதோ எண்ணிற் பெருநோய்கள் பெயர்த்தும் செத்துப் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றாரே’* என்று ஆறாம் திருமுறை
திருத்தாண்டகத்தில் நமக்காக வருத்தப்பட்டுக்
கூறுகிறார்.
பிறப்புக்கு காரணம் விஷய வாசனை. விஷய
வாசனை என்றால் என்ன?
உலகம் சம்பந்தப்பட்டவை விஷயங்கள்
எனப்படும். இதையே “விஷய வாசனை’
என்கிறோம். நமது துன்பத்துக்கெல்லாம்
காரணம் இந்திரியங்களுக்கு உட்பட்ட
விஷயங்களில் மாட்டிக்கொள்வதுதான். நின்று
நிலைக்கும் சுகம்- துக்க கலப்பே இல்லாத
சுகம்- இவை எதுவும் நமக்குத் தெரியாமலே
ஆகிவிடுகிறது. இந்த விஷய வாசனைகள்
குறைந்தால்தான் உள்ளதை உள்ளவாறு
உணரமுடியும். ஒரு உதாரணம் மூலம்
விளக்கலாம்.
ஒரு குறிப்பிட்ட உணவை உட்கொள்ள
வேண்டுமென்று ஆசை வருகிறதே- அந்த
உணவை நேரடியாகக் கண்ணால்
பார்க்காதபோதும்! அது எப்படி
வருகிறதென்றால், முன்பு அதே உணவை
ருசித்த அனுபவம்தான் எண்ணப்
பதிவாகிவிடுகிறது.
இதுபோன்று பல
வாசனைகள்தான் நம்மை செயலாற்றச் செய்து
கர்மபலன் ஏற்பட்டு விடுகிறது. இதுவே
பிறப்புக்குக் காரணம்.
பிற்காலத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்த
சித்தர்கள் உயிரைப் பற்றியும், உடலைப்
பற்றியும், இரண்டுக்குமிடையே உள்ள
உறவு பற்றியும் தெரிந்து கொண்டார்கள்.
அதனால் மனிதன் நோயில்லாமல் வாழலாம்;
துன்பம் இல்லாது வாழலாம்; அமைதியாக
நட்புரிமையோடு அறிவுத்
திறமையோடு வாழலாம்; இன்னும்
மரணமே இல்லாமலும் வாழலாம்
என்பதையும் தெரிந்து கொண்டார்கள்.
அதுமட்டுமல்ல.
விரும்பியவர்களுக்கு அதற்கான
பயிற்சிகளைக் கற்பித்து வந்தார்கள்.
வித்துவை உடலில் சுவற விட்டு, உடல்
நலம் காத்து, மன வளம் காத்து,
இளமை காத்து, எப்போதும்
முதுமை இல்லாது இருக்கும்
முறை ஒன்றையும். இரண்டாவதாக
இரசவாதம் மூலமாக முப்பு என்ற
முறையையும் கண்டு பிடித்தார்கள்.
இரசவாத முறை Philosopher Stone
என்று மேல் நாட்டில்
அனுபவத்திற்கு வந்தது இதை உண்டு
விட்டால், முறையாக உடலை விட்டு உயிர்
பிரியாது உடலை விட்டு உயிர் பிரிய
வேண்டும் என்றால்,
உடலை விட்டு வித்து வெளியேற
வேண்டும். வித்து உடையாமல்; உயிர்
பிரியாமல் காத்துக் கொள்வதுதான்
முப்பு என்ற மருந்து. அதைச் சாப்பிட்ட
பிறகு ஒரு சிக்கல் எல்லாச்
சித்தர்களுக்கும் வந்தது. உலகில் 200
வருடம் 300 வருடம் 500 வருடம் கூட
வாழ்ந்து விட்டார்கள். எல்லாம்
அனுபவித்தாகிவிட்டது. உலகை விட்டுப்
போக வேண்டும் என்று நினைக்கிறார்கள்
உயிர் போகவில்லை.
உயிரினங்களில் சில
இயற்கையாகவே லம்பிகா யோகம்
என்பதை செய்து வருகின்றன. பாம்பு,
தவளை, உடும்பு போன்ற சில
உயிரினங்கள்
நாவை மடக்கி மேலே வைத்து அடக்கிக்
கொள்ளும். அந்த மாதிரி நிலையில் பத்துப்
பதினைந்து நாட்கள் அப்படியே இருக்கும்.
தேவையில்லாதபோது உயிரை விட்டு விடும். லம்பிகா யோகம் செய்தால் கொஞ்சம்
கொஞ்சமாக உடம்பில் உள்ள
உணர்வுகளெல்லாம் நின்றுவிடும். ஆனால்
உயிர் போகாது. ஆனால் அத்தகைய
ஜீவன்கள் உணவு இல்லாதபோது அந்த
நிலையை அடைந்தன. உணவு கிடைக்கிற
வாசனை வந்தவுடன், தானாக பழைய
நிலைக்கு வந்துவிடும்.
மனிதர்களில் சிலர் லம்பிகா யோகத்தைச்
செய்து, உயிர் போகாமல் தடுத்துக்
கொண்டார்கள். அதனாலேயும்
உடலைவிட்டு உயிர் பிரியாத ஒரு சிக்கல்
ஏற்பட்டது. காரணம் மனிதன்
லம்பிகா யோகம் செய்து மயக்க
நிலையிலிருந்து திரும்பி வராமல
தன்னை மறந்து விடுகிறான். உயிர்
இருக்கிறது. ஆனால்
உணர்வு தெரிவதே இல்லை.
உடனே மற்றவர்கள், இவர் இறந்து விட்டார்
என்று கருதி அடக்கம்
செய்து விடுகிறார்கள்.அதனால்
அப்பயிற்சி நமக்குத் வேண்டியது இல்லை.
தேவையும் இல்லை. அத்தகைய சிக்கல்கள்
வராமலும் அதே சமயம் உடல் நலத்தைக்
காத்து, ஆயுளைப் பெருக்கி, வாழும்
காலம் வரைக்கும் நோயின்றி வாழ வைக்கக்
கூடியதே
சித்தர்கள் யாபேரும் முதலில் மனிதர், பின்
முனிவராகி, முற்றுப்பெற்று சித்தர்
ஆனார்கள்.
அட்டமா சித்திகளைப் கைப்பெற முனைபவர்
முனிவர். அதில்
சித்தியடைந்து முற்றுப்பெற்றவர்கள்
சித்தர்கள். சித்தர்கள் பல தேசத்திலும்
இருந்து சித்தியடைந்திருந்தாலும்,
ஞானமொழியான தமிழ் தெரியாமல் யாரும்
முற்றுப் பெறமுடியாதென சித்தரேடுகள்
குறிப்பிடுகின்றன. தமிழும் சம(ஸ்)கிருதமும் சித்தர் மொழிகளாக உள்ளன.
இதில் தமிழே ஆதியான ஞானமொழி.
முனிவர்கள் சில சக்திகளைப்
பெற்றிருந்தாலும் தவறிழைப்பதுண்டு,
முற்றுப்பெற்ற சித்தர்கள் எல்லாக்
குணக்கேடுகளையும் கடந்து "வேண்டுதல்
வேண்டாமை" என்ற
நிலையை அடைந்தவர்கள்.
அதாவது அவர்கள் எதையும் விரும்பவும்
மாட்டார்கள், வெறுக்கவும் மாட்டார்கள்.
சித்தர் பாடல்களின் மறைபொருள்
மறைபொருள்களில் மருந்துகளைக்
குறிப்பிடப்படும் பல பாடல்கள்
காணப்படுகின்றன. இதன்
உட்பொருளை அறியாமல் வெளிப்படையான
பொருளை அறிந்துகொண்டு தவறுகள்
நிகழ்வதுண்டு. உண்மையான
பொருளை அறியும் பயிற்சியும் மருத்துவ
அனுபவமும் இல்லாமல் பிழைகள்
நேர்வதுண்டு.
*“தாசிவீடு சென்ற தறுதலைக்குச் செம்மையாய்த் தருக செருப்படிதான் காசும் அற்றுவிடும்; கவம் இளகும் கதியே சைவம் என்றாடு பாம்பே”*
இப்பாடல், தாசிவீடு சென்று வந்ததால் வந்த
மேகவெட்டை எனும் பாலியல் நோய்க்குச்
செருப்படி என்னும் மூலிகையைக்
கொடுத்தால் குணமாகும் என்றும் காச
நோய்க்கும் கபத்திற்கும் தாளிபத்தியம்
கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சித்தர் சைவ நெறியையும்
மருத்துவத்தையும் இணைத்துக்
கூறியுள்ளார்.
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்
அந்த உடலுக்கு யாதொரு மதிப்பும்
கிடையாது. ஒன்று உடலைச்
சுட்டெரித்து விடுகிறோம்
அல்லது புதைகுழிக்குப் போகிறது. ஆக
உயிர் தங்கி இருக்கும் வரையில்தான்
இந்த உடலுக்கு அவசியமும், தேவையும்,
மரியாதையும் இருக்கிறது.
இப்படிப் பட்ட இந்த உடலும், உயிரும்
எப்போது எப்படித் தோன்றுகின்றன?
எது முதலில் உருவாகிறது?, உடலா?,
உயிரா?
இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் அகத்தியர்
தனது "அகத்தியர் ஆயுள் வேதம்” என்ற
தனது நூலில் பதில் வைத்திருக்கிறார்.
*சென்மமனிதர் தாமுஞ் சென்மிக்கும்வாறு கேளாய் இன்னமுஞ் சுக்கிலத்தில் பிராணவாய்வதுவுஞ் சென்று தின்னமாய் பிராணவாயுவு சென்றது கோபமுற்றி யுன்னுமாமி ரத்தஞ்சூழ்ந்து வுதாரணவாய் வளர்க்கம் சூழ்ந்து சுக்கிலதில் சுரோணிதங் கலக்குமென்று பூந்திடும் வியாதி மூன்றும் பொருந்திடும் குமிழிபோல ஏந்தியே திரளுமேழிலீரேழு தன்னிலூர்க்கு மாய்ந்த நாளிருபத்தைந்தி லருங்முளை போற்றோன்றும் -அகத்தியர்.*
ஆணின் சுக்கிலத்தில்
பிராணவாயு சென்றடைந்து கிளர்ச்சியுற்று
உயிரணுக்கள் வளர்ச்சி அடையும். இந்த
சமயத்தில் ஏற்படும் உறவினால்,
பெண்ணின் சுரோணியத்துடன் ஆணின்
சுக்கிலம் கலந்து வாத, பித்த, கபம்
என்று சொல்லப்படும்
மூன்று விகற்பங்களும் அதனுடன்
சேர்ந்து சிறு குமிழி போலாகி கருப்பையின்
உட்சென்று தங்கி வளரத் துவங்கி,
இருபத்தி ஐந்து நாளில் முளை போல
தோன்றும் என்கிறார். இது உயிரற்ற
ஒரு நிலை.
*முந்திய திங்கள்தன்னில் கருமுளைத்தது கட்டியாகும் பிந்திய திங்கள் தன்னிற் பிடரிதோள் முதுகுமன்றி யுதிக்கும் மூன்றாந்திங்க ளுடல்விலா யரையுங்கால்கள் ளுந்திக்கு யுயிரும்வந்தே யிணைந்திடுமென்றே. -அகத்தியர்.*
முதல் மாதத்தின் முடிவில் உருவான இந்த
முளை பின்னர் வளர்ந்து ஒரு கட்டிபோல
உருவாகுமாம். இரண்டாவது மாதத்தில்
பிடறி, தோள், முதுகு ஆகிய பாகங்கள்
உருவாகுமாம். மூன்றாவது மாதத்தில்
உடல், விலா, இடுப்பு போன்றவைகள்
உருவாகும்.அந்த கட்டதில் தான்
கருவிற்கு உயிரும் வந்து இணையும்
என்கிறார்.
ஆக,கருவானது மூன்றுமாத வளர்ச்சியின்
பின்னரே உடலில் உயிர் வந்து சேருகிறது.
அதன் பிறகே மற்ற அவயங்கள்
வளரத்துவங்குகிறது.
இந்த தகவல்கள் எல்லாம் அறிவியல்
வளராத
பலநூறு வருடங்களுக்கு முன்னரே நமது முன்னோர்களால்
தீர ஆராய்ந்து சொல்லப் பட்டிருக்கின்றன
என்பதில்தான் இந்த தகவலின்
மகத்துவமே அடங்கி இருக்கிறது.
உடற்கூறியியலில் சித்தர் பெருமக்களின்
ஆழ்ந்த அறிவு இன்றைய நவீன
அறிவியலின் தெளிவுகளுக்கு கொஞ்சம்
குறைந்ததில்லை என்பது நாம்
பெருமிதத்துடன் நினைவு கூற வேண்டிய
ஒன்றாகும்.
அருமையான விளக்கம் நன்றி
ReplyDeleteசிவவாக்கியர் சித்தர் பாடல்களின் பதவுரை தங்களிடம் உள்ளதா
ReplyDeleteபடிக்க மிகவும் நன்றாக இருக்கிறது நன்றிகள் பல
ReplyDeleteஅருமை
ReplyDeleteசூப்பர் நன்றாக உள்ளது
ReplyDeletei got more useful information form your siddha patalakal thanks for giving this. please give more poem from siddhargal.
ReplyDeleteமிகவும் பயனுள்ள தகவல்கள்! நன்றி.
ReplyDeleteமுழுமையான ஆதாரபூர்வமான ஆய்வுகள் தேவை.
நல்ல பதிவு நன்றி.சிவயநம.
ReplyDeleteநன்றி பாப்தாதா
ReplyDeleteசித்தர்களின் வரலாறு பற்றி அறிவதற்கு அவர்களின் அருளும், தயவு, கருணை,....பாக்கியம் செய்து இருக்க வேண்டும். இறை சக்திக்கு மனமார்ந்த
ReplyDeleteநன்றிகள் வாழ்த்துக்கள் குருவே சரணம்🎉🎊🎉🎊.