Manasaatchi உள்ள உண்மையான டாக்டரின் வாழ்வில் நடந்த சம்பவம்!
நன்றி - திரு. எஸ்.ராமகிருஷ்ணன்
இந்த தொகுப்பு 25 Nov, 2015 தேதியிட்டு வெளியான
ஆனந்த விகடன் - பதிப்பில் "இந்திய வானம் - 14" என்கிற தலைப்பில் இருந்து எடுக்கப்பட்டது. எழுத்தாக்கம்: திரு. எஸ்.ராமகிருஷ்ணன்.
என்.ஜி.ஓ ஒன்றில் தன்னார்வப் பணியாளராகச் செயல்படும் ஓர் இளம் மருத்துவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது அவர் சொன்னார்...
'பொய், எவ்வளவு அபாயகரமானது என்பதை என்னைப் போன்ற மருத்துவர்கள் நன்றாக உணர்வோம். ஆனால், இன்றைய சூழலில் மருத்துவர்கள் நோயாளிகளிடம் பொய் சொல்ல நிர்பந்திக்கப்படுகிறார்கள். அது மிக மோசமானது. என் பணிக்காலத்தில் அன்றாடம் இந்த நெருக்கடியை எதிர்கொண்டேன்.
'பணத்துக்காக இத்தனை பொய்களா?’ என அருவருப்பாக இருந்தது.
ஒருமுறை எங்கள் மருத்துவமனைக்கு, ஒரு பெண் தனது கைக்குழந்தையுடன் வந்திருந்தார். குழந்தைக்கு சிறுநீரகத்தில் பிரச்னை. அதற்கு மருந்து கொடுத்து 'பத்து நாட்கள் பரிசோதனை செய்த பிறகு, தேவைப்பட்டால் அறுவைசிகிச்சை செய்யலாம்’ என நான் பரிந்துரை எழுதியிருந்தேன்.
எனது சீஃப் டாக்டர் அதை மறுத்து, 'உடனே பெட்டில் சேர்க்கச் சொல்லி நாளையே ஆபரேஷன் செய்துவிடுங்கள். இல்லாவிட்டால் அவர்கள் வேறு மருத்துவமனைக்குப் போய்விடுவார்கள்’ என்றதோடு என்னை அனுப்பி அந்தக் குழந்தையின் தாயிடம், 40 ஆயிரம் ரூபாய் அறுவைசிகிச்சைக்குப் பணம் கட்டும்படி சொல்லச் சொன்னார். கட்டாயத்தின் பேரில் அதைச் சொல்வதற்காகச் சென்றேன். வொயர் கூடை ஒன்றுடன் நின்றிருந்த அவரது ஏழ்மைநிலையைப் பார்த்தபோது, அறுவைசிகிச்சை பற்றி சொல்ல எனக்கு நாக்கு எழவில்லை. ஆனால், தனியார் மருத்துவமனையில் பணியாற்றுகிறேன். சீஃப் டாக்டரின் வார்த்தையை மறுக்க முடியாது என்பதால் தயக்கத்துடன் சொன்னேன்.
அந்தப் பெண் கண்கலங்கியபடியே 'என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. ஒரு வாரம் அவகாசம் வேண்டும்’ எனக் கைகூப்பினார். நான் பதில் சொல்லாமல் வெளியேறி வந்துவிட்டேன். அந்தப் பெண்ணை சீஃப் டாக்டர் வரவழைத்துப் பேசி, அடுத்த நாளே பணம் கட்ட வைத்தார். அவர் எப்படியோ கடன் வாங்கிக் கொண்டுவந்து பணம் கட்டினார். அந்த அறுவை சிகிச்சையின்போது முதன்முறையாக எனக்குக் கைகள் நடுங்கின. அன்று இரவு முழுவதும் என்னால் தூங்க முடியவில்லை. என்னோடு வேலைசெய்யும் இன்னொரு மருத்துவரோடு இதைப் பற்றி மனம்விட்டுப் பேசினேன்.
அவர் சொன்னார்...
'யாருக்குத்தான் கஷ்டம் இல்ல. நாம நோயை மட்டும்தான் கவனிக்கணும். நோயாளிகள் மிடில் கிளாஸா... லோயர் கிளாஸா... அவங்க எப்படிக் கடன் வாங்குறாங்க, கஷ்டப்படுறாங்கனு யோசிக்கக் கூடாது’ என்றார்.
'பணத்துக்காக பச்சைப் பொய் சொல்கிறோமே... இது தவறு இல்லையா?’ எனக் கேட்டேன்.
'சும்மா ஒண்ணும் வாங்கலையே. ஆபரேஷன் பண்ணியிருக்கோம்ல... மனசாட்சிங்கிறது யாரோ ஒரு முட்டாளின் கண்டுபிடிப்பு. பழைய செருப்பைத் தூக்கி வீசுற மாதிரி, அதை எப்பவோ தூக்கி வீசிட்டேன். நீ இன்னும் அதை வெச்சுக்கிட்டுப் புலம்பிக்கிட்டு இருக்கே.’
'பொய் சொல்றது தப்பு. அப்படித்தான் எங்க வீட்டுல சொல்லிக்குடுத்திருக்காங்க... ஆசிரியர் கூட ஸ்கூல்ல சொல்லித்தந்திருக்கார்’ என உறுதியாகச் சொன்னேன்.
'பிரச்னையே அங்கதான் ஆரம்பிக்குது. வீடு, ஸ்கூல் எங்கேயாவது பொய் இல்லாமல் இருக்கா?
பொய் சொல்லாமல் இருக்கிறதுங்கிறது ஒரு ஐடியல். அப்படி யாராலும் இருக்க முடியாது. குறைவா பொய் சொல்றவன், நிறையப் பொய் சொல்றவன்னு ரெண்டு விதங்கள்தான் இருக்கு. பொய்யைப் பயன்படுத்தத் தெரிஞ்சவன் புத்திசாலி; பிழைக்கிறதுக்கு அதுதான் ஒரே வழி’ என்றார் அந்த நண்பர்.
என்னால் அவர் சொல்வதுபோல வாழ முடியாது என அந்த மருத்துவமனையில் இருந்து ரிசைன் பண்ணிவிட்டு, இப்படி ஒரு என்.ஜி.ஓ-வுல வேலை பார்க்கிறேன். குறைவான வருமானம்தான்; ஆனா, நிறைய மனநிம்மதி. பொய் சொல்லி நிறையப் பணம் சேர்த்து வாழுறது எனக்குப் பிடிக்கலை. அப்படி வசதியா நான் வாழ வேண்டியதும் இல்லை...’
அந்த இளம் மருத்துவர் இதை என்னிடம் சொன்னபோது எனக்கு நெகிழ்ந்து போனது. இப்படி சிலர் மனதில் இன்னமும் உண்மை ஆழமாக வேரூன்றி இருப்பது சந்தோஷமாக இருந்தது.
அவரிடம் நான் சொன்னேன்...
'உங்களைத்தான் இந்த உலகம் அதிகம் கேலி செய்யும்; அவமானப்படுத்தும்; முடிந்தால், ஒடுக்கி ஓரம்கட்டப் பார்க்கும். அதைக் கண்டுகொள்ளா தீர்கள். உண்மையின் பக்கம் நிற்பது என்பது ஒரு சவால். ஒவ்வொரு முறையும் அதை எதிர்கொண்டு தான் ஜெயிக்க வேண்டும்.’
அதைக் கேட்டு அவர் சொன்னார்...
'யாரோ என்னை ஏமாற்றும்போது எனக்கு ஏற்படும் கோபமும் ஆத்திரமும்தானே மற்றவர்களுக்கும் ஏற்படும். எனக்கு நானே உண்மையாக இல்லாமல் எப்படி வாழ்வது?’
இந்த எண்ணம் ஒருவருக்கு உருவாகிவிட்டால் போதும். அவரால் பொய் சொல்லி, ஏமாற்றிப் பிழைக்க முடியாது எனத் தோன்றியது.
.
நன்றி - ஆனந்த விகடன்
Friday, November 27, 2015
UNMAIYAANA MANASAATCHI
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment