*💓💓*
✨⚡✨⚡✨⚡✨⚡
தன் மூலத்தை அறிய எழுந்த வேகம் திசை தப்பி நிற்கும் அளிவிற்கு அமைதியின்மையின் அளவும் துன்பத்தின் அளவும் இருக்கும்.
இன்று மனித குலத்திடையே நாம் காணும் அமைதியின்மைக்கும் துன்பத்திற்கும் காரணம் இப்போது விளங்குகிறதல்லவா?
பிராயச்சித்தம் மேல்பதிவு தேய்த்தழித்தல் (expiation superimoposition and dissolution) என்று கருமப் பதிவுகளைப் போக்கிக் கொள்ள மூன்று வழிகள் இருப்பதை நான் பலமுறை விளக்கியுள்ளேன்.
அவற்றில் கடைசியான தேய்த்தழித்தல் என்பது தவத்தினால் தான் சாத்தியமாகும்.
ஆக்கினைத் தவத்தினால் ஆகாமிய கர்மம் போகும்.
துரியநிலைத் தவத்தில் ஆகாமிய கர்மமும் பிராரப்த கர்மமும் போகும்.
துரியாதீத தவத்தில் ஆகாமிய கர்மம் பிராரப்த கர்மம் சஞ்சித கர்மம் ஆகிய மூன்றுமே போகும்.
நீண்ட நாள் மருந்தினால் போகாத நோய் கூடத் துரியாதீத தவத்தால் நீங்கும்.
இந்த ஊரில் பெய்த மழை பக்கத்து ஊரிலும் பயனாவது போல ஒருவர் இயற்றும் தவம் அவரது வாழ்க்கைத் துணைக்கும் பயன்படும்.
அதேபோல பெற்ற மக்களுக்கும் ஒருவர் இயற்றும் தவம் பயனாகும்.
மண்ணில் ஆழமாகப் போகப் போகத்தான் தண்ணீர் கிடைக்கும். மனத்தின் ஆழமே துரியாதீதம்.
அங்கே போகப்போக நிலைக்க நிலைக்கத்தான் மனத்திற்கு அமைதியென்னும் தண்ணீர் கிடைக்கும்.
முற்காலத்தில் அவ்வப்போது பலர் துரியாதீத தவத்தில் தேர்ச்சி பெற்றுச் சமாதி நிலை அடைந்தார்கள்.
ஆனால் அவர்கள் கடமைப்பக்கம் திரும்பவில்லை.
துறவறம் என்ற பெயரில் விரக்தி மார்க்கத்தை மேற்கொண்டு உலகத்தை வெறுத்தார்கள் அல்லது ஒதுங்கினார்கள்.
நாம் அப்படி அல்லோம் நாம் சமுதாயத்தை மறப்பதில்லை. நம்மை உருவாக்கியது இந்த மனித குலம். ஆளாக்கி வாழ வைத்தது இந்த மனிதகுலம். நாம் மேல்நிலை அடைவதற்கும்கூட இடமாகவும் ஆதரவாகவும் மனித குலமே இருக்கிறது. எனவே அதன்பால் நாம் பட்ட கடனின் கணக்குத் தீர்ந்தபாடில்லை. அந்தக் கடனைத் தீர்க்கும் செயலுக்குத்தான் கடமை என்று பெயர். இனி முழுமைப் பெற்றப் பின் ஆற்றும் கடமைக்குத் தொண்டு என்று பெயர் கொடுக்கலாம். எனவே முழுமைப் பெற்று விட்டாலும் உடலும் உயிரும் பிரியும் வரை மனித குலத்துக்குத் தொண்டாற்றுவதை நாம் நிறுத்துவதில்லை.
இயக்கத்தில் இருப்பது அறிவு.
இருப்பாக அமைதியாக நிர்ச்சலனமாக இருப்பது மெய்ப்பொருள். அறிவை மெய்ப்பொருளோடு இணைத்திணைத்துத் துரியாதீத தவமாற்றும் போது அறிவிற்கு அமைதியும் ஓய்வும் கிடைக்கிறது.
வேறு எந்த வழியிலும் அறிவிற்கு ஓய்வென்பது கிடைக்கவே கிடைக்காது.
துரியாதீதத்தில் உண்மையான ஆழம் எளிதில் புலப்பட்டு விடாது.
நேற்றைய தவத்தைவிட இன்றைய தவம் ஆழமானதாக இருக்கலாம். இன்றைய தவத்தைவிட நாளைய தவம் ஆழமானதாக இருக்கும்.
இந்த வளர்ச்சி வேகம் முற்றுப் பெற்று சமாதிநலை பூரணமாகக் கைகூடச் சில காலம் பிடிக்கும். அது எவ்வளவு காலம் என்பது அவரவர்களுடைய முன்வினை முயற்சி ஆராய்ச்சி முதலியவற்றைப் பொருத்திருக்கிறது. சமாதி நிலை சித்தியாகித் தூய்மை பெற்றால் நாம் மேற்கொண்ட ஞானமார்க்கப் பயணத்தின் லட்சியம் நிறைவேறும் பிறவியின் நோக்கமான வீடுபேறு கிடைக்கும்.
*💓வாழ்கவளமுடன்!!*
No comments:
Post a Comment