Friday, April 28, 2017

பிரம்மம்


======
தேகமும் நீ அல்ல. எண்ணமும் நீ அல்ல.ஆத்மாவே நீ.ஆத்மாவே எல்லாமுமாய் இருக்கிறது.தேகம் " நான்" என்னும் அபிமானத்தைத் துறக்க வேண்டும்." நான் யார்?" என்று பார்த்தால் , நான் என்ற  சொல்லின் பொருள் ஆத்மா. நான் என்ற சொல்லின் வாயிலாக எந்த " ஆத்மா" விளக்கப்படுகிறதோ, அந்த ஆத்மா உள்நோக்குப் பொருளாக உள்ளது.அனுபவத்தால் அறியக்கூடியது.அனுபவத்தால் அறியக்கூடிய ஆத்மா ஞானத்தின் மொத்த உருவம்.ஆனந்தத்தின் இருப்பிடம்.நமக்கு உடம்பு இருக்கிறது.இந்த உடலை இயக்குவது உயிர்.கடைசியில் நாம் இறந்து போவோம்.இங்கு இறந்து அழிந்து போவது உடல்தான்.அழியாதது உயிர்.வாழ்க்கையில் நாம் சம்பாதிப்பது அழியாத உயிருக்கு உதவுவதாக இருக்க வேண்டும்.ஆனால் நாம் வாழ்நாளில் பெரும்பாலும் உழைப்பது, சம்பாதிப்பது எல்லாம் அழியும் உடலுக்காகவே இருக்கிறது.அழியாத உயிருக்காக சம்பாதிப்பதை விட்டுவிட்டு அழியும் உடலுக்காக மட்டும் நேரத்தை செலவிட்டு சம்பாதிப்பது புத்திசாலித்தனம் ஆகாது.இவ்வாறு சம்பாதித்ததை நாம் இறந்த பிறகு நம்மோடு கொண்டு செல்ல முடியாது.தன்னைத் தான் அறிவதாகிய ஆன்ம அனுபவம் பெற நாம் நமது  ஆசைகளைத் தூண்டி அதன் வலையில் சிக்க வைத்துக் கொள்ளும் உலகப் பொருட்களிலிருந்து விலகி வாழ வேண்டும்.ஆன்ம நலத்தில் பெரும் விருப்பம் கொண்டவர்கள் இந்த உலகமே நிலையற்றது.மாறுபடுவது.தோன்றி மறைவது.மாயையால் தோன்றுவது என்று  எண்ணி அவற்றிலிருந்து விலகி தனது ஆன்ம சொரூபத்தை அடைய விரும்புவார்.அறிவு உள்ளவர் எவரும் இவற்றில் சிக்கிக் கொள்வதில்லை.அறியாமையினாலும், பலவீனத்தாலும் உலகப் பொருட்களின்மாட்டு எழும் அடங்காத ஆசையினாலும்  அவற்றிலிருந்து விலகி வாழ இயலாமல் , செல்லும் வழி அறியாமல் பயனின்றி வாழ்ந்து மறைகிறான்.ஞானி ஆன்மாவின் பக்கமே மனத்தைச் செலுத்துவான்.உலகில் ஆன்மாவைத் தவிர பிற பொருட்கள் எல்லாம் வானவில் போன்று தோன்றி மறையக் கூடியனவே என்பது அவனுக்குத் தெளிவு.தன்னைத்தான் அறிவதாகிய ஆன்ம அனுபவத்தைப் பெற நமது ஆசைகளைத் தூண்டி அதன் வலையில் சிக்க வைத்துக் கொள்ளும் உலகப் பொருள்களிலிருந்து விலகி வாழ வேண்டும்.உலகத்தை உலகமாகக் காண்பது ' மாயை'. உலகத்தை பிரம்மமாகக் காண்பது ' ஞானம்'.எவன் ஒருவன் தேடுகிறானோ, அவன் தன்னைத் தானே உணரும் வேளையில் தேடியது தன்னைத்தான் என்று உணர்வான்.' நீயே நான்.நானும் நீயே' என்ற உண்மையைப் புாிந்து கொள்வான்.இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைந்து இறுதியில் தன்னுள் பயணம் செய்து பார்க்கும் பொழுதுதான் உண்மைப் பொருள் வேறு எங்கும் இல்லை.தன்னுள்ளே உள்ளது என்பதை முழுமையாக உணர்வான்..' அயம் ஆத்மம் பிரம்மம்' என்பது அதர்வண வேதத்தின் மகாவாக்கியம்.இதன் பொருளாவது ஆத்மாவே பிரம்மம் என்பதாம்.அதாவது இந்த ஆத்மா என்பது நமது உடல் , மனம், புத்தி, இவற்றை செயல்படுத்துகிறது.ஆத்மாவின் ஒளியில் தான் இவை செயல்பட முடியும்.அதுபோல உலகில் உள்ள அனைத்துப் பொருடள்களையும் செயல் படுத்துவது பிரம்மம்.ஆகவே தான் இந்த ஆத்மா தான் பிரம்மம்.நான் ' மனம்' அல்ல.,'உடல்' அல்ல.,'புத்தி' அல்ல.நான் பிரம்மம் என்று உணரும் சாதகன் புறத்தேடலை விட்டு அகத்தேடலை தொடர்கின்றான்.அழிவற்றது எதுவோ பிரம்மம்.புலன்களால் அறியப்படுபவை அனைத்தும் அழிவின் கேந்திரங்களே.அழிவு உருவத்திற்கு மட்டுமே.உருவத்தினால் சூழப்பட்டு, உள்ளிருப்பது அழிவது இல்லை.இரு எண்ணங்களுக்கு இடையில் உள்ள வெற்றிடக்தைப் பற்றினால், அந்த இடைவெளியில் மூழ்கினால், அருவத்தின் தரிசனம் கிடைக்கும்.அதுவே பிரம்மம்..உருவத்திற்கு அழிவு உண்டு.அருவத்திற்கு அழிவு கிடையாது.அருவம் பிரம்மம்.

No comments:

Post a Comment