Friday, April 28, 2017

ஆசை


=====
மண் ஆசை கூடாது என்று மகாபாரதமும்,பெண் ஆசை கூடாது என்று ராமாயணமும் போதிக்கின்றன.சக்திக்கு மீறிய ஆசை கொண்டு அலைபவன் அற்ப ஆயுளில் போய் விடுவான்.உன்னால் எதை அடைய முடியாதோ அதன்மீது ஆசை வைக்காதே.குறைந்த ஆசைதான் இன்ப வாழ்க்கை.மனித சமுதாயத்திற்கு துன்பமும், துயரமும் தராதவரை எல்லா ஆசைகளும் நல்லவைகளே.பாம்பிற்கு பாம்பின் விஷம் பகையல்ல.அது மற்றவரைத் தீண்டும்போதுதான் துன்பம் தருகிறது.அதுபோல ஆசைப்படுவது ஒருபோதும் தவறல்ல.மற்றவரை பாதிக்கும் போதுதான்,அவ்வாசை பேராசையாகி விடும்.கிரேக்க மன்னன் அலெக்ஸாண்டருக்கு அகிலத்தையே ஆள ஆசை.கிரேக்க தத்துவஞானி டயக்னஸூக்கு அகிலத்தையே துறக்க ஆசை.நிறைவேறிவிட்ட ஆசைகளில் மனது பெருமிதப்படுவதில்லை.நிறைவேறாத ஆசைகளுக்காகவே மனம் போராடுகிறது.உலகை வெல்ல புறப்பட்ட அலெக்ஸாண்டர்வழியில் ஆற்று மணலில் கோவணத்துடன் படுத்துக்கிடந்த டயோக்னஸ்ஸிடம் சிறிது பேசிவிட்டுச் செல்லும்போது ," நான் மட்டும் அலெக்ஸாண்டராக இல்லாவிட்டால் நிச்சயம் முற்றும் துறந்த டயோக்னஸாகவே இருக்க ஆசைப்படுவேன்.ஆமாம், ஒன்றும் இல்லாமைகூட எத்தனை சுகம்,எவ்வளவு நிம்மதி என்றாா்.தூய ஆசை உன்னை உயர்நிலைக்கு இட்டுச் செல்கிறது.தீய ஆசை வாழ்க்கையைக் கெடுக்கிறது.மனிதனிடம் உள்ள ஆசைகள் தாம் அவன் நூறு ஆண்டு வாழ வற்புறுத்துகின்றன.நல்ல பேச்சு, இனிய பாட்டு, உடல் வலுவுக்கேற்ற இனிய விளையாட்டு முதலியவற்றில் ஆசை கொள்ளுங்கள்.ஆசையிலிருந்து சோகம் தோன்றுகிறது.அச்சம் தோன்றுகிறது.ஆசையற்றவனுக்கு சோகமும் இல்லை.பயமும் இல்லை.படகு தண்ணீாில் இருக்கலாம்.தண்ணீா் படகினுள் நுழையக்கூடாது.மனிதன் ஆசைகள் நிறைந்த உலகில் வாழலாம்.ஆனால் ஆசைகள் அவனிடத்தில் வாழக்கூடாது.உங்களிடமிருந்து எல்லா ஆசைகளும் விலகிவிடுமானால் நீங்கள் இறைவனைக் காண முடியும்.ஆசைகள் இல்லாதவன் என்றும், எங்கும் சுதந்திரமாக இருக்கிறான்.ஆசை முடியும் கட்டத்தில்தான் அமைதி பிறக்கிறது.ஆசையின் இயல்பு என்னவென்றால் ஓர் ஆசை நிறைவேறியதும் இன்னோர் ஆசையைக் கொண்டு வந்து நிறுத்தும்.ஆசைப்படலாம்.ஆனால் பேராசைப்படக்கூடாது.அதேபோல நமது ஆசைகள் தர்மத்தை மீறாத வகையில் அமைய வேண்டும்.இதுதான் முக்கியம்
ஆசைகள் துறந்தால் அகிலம் உனக்கு என்பார்.கையளவு உள்ளம்.அதில் கடல்போல் ஆசை.பிறவியைப் பெருக்குவது ஆசை.புழுவுக்கு ஆசைப்பட்டு மீன் தூண்டிலில் சிக்கிக் கொள்கிறது.கண் கொண்டு தீயின் மீது ஆசைப்பட்டு விட்டில் பூச்சி அதில் விழுந்து மடிகிறது.ஊறு அல்லது ஸ்பாிசத்தை நம்பி யானை பிடிபடுகிறது.தேனை, மணத்தை நாட வண்டு மலாில் அகப்படுகின்றன.இந்த ஐம்பொறிகளையும் நம்பி ஓடுகிற மனிதனின் கதி என்னாவது?ஆடையின்றிப் பிறந்தோம்.ஆசையின்றிப் பிறந்தோமா? என்ற கவிஞனின் கவிதை நினைவுக்கு வருகிறது..வாழ்க்கைப் பயணம் ரயில் பயணம் போன்றது.ஆசை என்னும் சுமையோடு பயணிக்கக்கூடாது.ஆசை என்னும் வலையிலிருந்து சிறிது சிறிதாக விடுபட்டுத் தாமரை இலைத் தண்ணீர்போல பட்டும்படாமல் வாழமுற்பட்டால் வாழ்க்கை சொர்க்கமாகும்.முற்றும் துறந்த முனிவர்களுக்குக்கூட துறவறத்தால் இன்பம் காண ஆசை.ஆசையினால் நாம் எல்லை அமைத்துக் கொண்டோம்.கடலெங்கும் நீந்தி விளையாடுகின்ற மீன் ஒரு நீர்த் தொட்டிக்குள் கட்டுண்டு இருப்பது போன்று நம் சுயநலத்தால் ஆசை என்னும் சிறைக்குள் கட்டுண்டு இருக்கிறோம்.பணத்தாசை, பதவியாசை, புகழ் ஆசை, பெண் ஆசை, மண் ஆசை, பொன் ஆசை என வளர்ந்து கொண்டே போகும்.மனிதனைப் பாவம் செய்யத் தூண்டுவது ஆசையே.வாழ்க்கையில் நாம் தேர்ந்தெடுக்கும் ஆசையைப் பொறுத்தே எதிர்காலம் அமைகிறது.பிறரை துன்பத்திற்கு உள்ளாக்காத எந்த ஆசையும் நியாயமானதே.பகைவனை அடக்குவதைவிட ஆசைகளை அடக்குவதே வீரம்.சமூகம் தோன்றியதிலிருந்து மனிதனைச் செயல்படுத்தி வருவது இந்த ஆசைதான்.ஆசை அகற்றியவனுக்கு அனைத்தும் சொந்தம்.அகிலமும் சொந்தம்.அதை பெற்றுத்தருவது இந்த பிரபஞ்ச மனம் தான்.

No comments:

Post a Comment