Friday, January 11, 2019

சினம்" தவிர்க்கபடவேண்டியது

மகனுக்குத் தந்தைமேல் கோபம். அவருக்குக் காது கொஞ்சம் மந்தமாகிவிட்டது.
எதைச் சொன்னாலும் ‘என்னது?, என்னது?’ என்று மீண்டும் மீண்டும் கேட்கிறார். விளக்கிச் சொன்னாலும் சட்டென்று அவருக்குப் புரிவதில்லை.

எரிச்சலின் உச்சத்திலிருந்தான் மகன்.

‘‘என்னப்பா சொன்ன?’’ என்று மீண்டும் தந்தை கேட்க, மகன் கோபத்தில் கத்தினான்.

‘‘என்ன இது? எத்தனை தடவைதான் திரும்பத் திரும்பச் சொல்றது. ஒரு தடவை சொன்னா புரியாதா? புரியலைனா விட்டுற வேண்டியதுதானே. ஏன் உயிரை வாங்குறீங்க?’’ என்றபடி மீண்டும் கத்தினான்.
தந்தை அவனை அமைதியாகப் பார்த்தார். பிறகு மெதுவாய்ச் சிரித்தார்.
‘‘இவ்வளவு கோபமா சொல்றேன். நீங்க எதுக்குச் சிரிக்கிறீங்க?’’
தந்தை பதில் பேசவில்லை. தன் அறைக்குச் சென்றார். அங்கிருந்து ஒரு நோட்டுப் புத்தகத்தைக் கொண்டு வந்தார். அவரது பழைய டைரி. அதில் ஒரு பக்கத்தை மகனை வாசிக்கச் சொன்னார்.

‘‘அருண் மடியில் அமர்ந்து மரத்திலிருந்த காக்காவைக் காட்டி ‘அது என்ன?’ என்று கேட்டான். ‘காக்கா’ என்றேன். மீண்டும் மீண்டும் ‘அது என்ன?’ என்று கேட்டான். நானும் சொன்னேன். ஆனால், அவன் விடவில்லை. அந்த காகம் பறந்து செல்லும் வரை பல தடவை கேட்டுக் கொண்டே இருந்தான். நானும் சொல்லிக் கொண்டிருந்தேன். மகன் குரலைக் கேட்க கேட்க எனக்கு ஆனந்தமாயிருந்தது.’’
இதைப் படித்ததும் மகன் உணர்ச்சிபூர்வமாகத் தந்தையைப் பார்த்தான்.
‘‘அப்போ உனக்கு நான்கு வயது’’ என்றார் தந்தை.
மகனின் கண்களிலிருந்து கண்ணீர் வழியத் தொடங்கியது.

"சினம்" தவிர்க்கபடவேண்டியது என்கிறார் வேதாத்திரி மகரிஷி.மனவளக்கலை(பாகம் 1)  நூலில் அவர் எழுதுகிறார்:
தன்னையும் கெடுத்துப் பிறரையும் கெடுத்துத் தற்காலத்திலும் துன்பம் உண்டாக்கிப் பின்னரும் துன்பத்தை நீடிக்கச் செய்யும் ஒரு உணர்ச்சிவயப் பட்ட பகை உணர்வு சினம் ஆகும்.நெருங்கிய நண்பர்களிடத்திலே சுற்றத் தார்களிடதிலே  நம்மோடு அன்பு கொண்டு நமது நலனுக்காக வாழ்ந்துகொண்டிருப்பவர்களிடம் தான் அடிக்கடி சினம் வருவதைப் பார்க்கிறோம்.
சினம் எழுகின்ற போது நமது ஜீவகாந்தச் சக்தியானது அதிகமாக வெளியேறுகிறது - அதனால் உடலும் மனமும் பாதிக்கப்படும்.
"எனக்குக் கோபம் வருகிறது", என்று சொல்லுகிறோம். நாம் வேறு,கோபம் வேறா? நாமே கோபமாக மாறுகிறோம்; தன் நிலையில் மாறுதல் அடைகிறோம் எனபது தான் பொருள். நான், அசல் நானாகவே இருக்கும்போது அங்கே கோபமில்லை.நான் கோபமாக இருக்கும்போது அங்கே நானில்லை. மரத்தால் செய்யப்பட்ட பொம்மையை வைத்துக் கொண்டு மரத்தை நோக்கினால் மரம் இல்லை.பொம்மையின் வடிவத்தை நோக்கினால் மரம் இல்லை.மரம், பொம்மை இரண்டையும் நோக்கினால் மரப்பொம்மை என்றாகிறது.இது போலவே, கோபமாக இருக்கும் போது அறிவென்பது ஆராய்ச்சி நிலையில், விழிப்பு நிலையில் இல்லை, அறிவால் ஆராயப் புகுந்தால் கோபம் என்பதில்லை. கூர்ந்து நோக்கினால்; ' நான் என்கிற தத்துவமே ' தான் கோபமாக இருகின்றது என்பது புலனாகிறது.
 

சினத்தை தவிர்ப்பது எப்படி என்பதை பயிற்சி முறையாகவே மகரிஷி அகத்தாய்வு மூலம் நமக்கு அருளியிருக்கிறார்.

No comments:

Post a Comment