"
செல்வந்தராவது உங்கள் பிறப்புரிமை
1. செல்வந்தராக இருப்பது உங்கள் உரிமை என்று தைரியமாகக் கூறுங்கள். உங்கள் ஆழ்மனம் உங்கள் பிரகடனத்திற்கு மதிப்பளிக்கும்.
2. வாழ்க்கையை ஓட்டுவதற்குப் போதுமான பணம் இருந்தால் மட்டும் போதாது. நீங்கள் செய்ய நினைக்கும் அனைத்தையும் நீங்கள் நினைத்த நேரத்தில் செய்வதற்குத் தேவையான எல்லாப் பணமும் உங்களுக்கு வேண்டும். உங்கள் ஆழ்மனத்தின் செல்வங்களைப் பற்றி நன்றாக அறிந்து கொள்ளுங்கள்.
3. பணம் உங்கள் வாழ்க்கையில் தங்குதடையின்றிப் புழங்கிக் கொண்டிருந்தால், நீங்கள் பொருளாதார ரீதியாக ஆரோக்கியமாக இருக்கிறீர்கள். பணத்தைக் கடலலையாகப் பாருங்கள், அப்போது அது எப்போதும் உங்களிடம் ஏராளமாக இருக்கும். அலையின் பாய்ச்சலும் உள்வாங்கலும் ஓயாதது. ஓர் அலை கடலுக்குள் சென்றால், மீண்டும் அது திரும்பி வரும் என்று உங்களுக்கு மிகவும் உறுதியாகத் தெரியும்.
4. உங்கள் ஆழ்மனத்தின் விதிகளை அறிந்து கொண்ட பிறகு, பணம் உங்களுக்குத் தொடர்ந்து கிடைத்துக் கொண்டேயிருக்கும்.
5. போதிய பணமில்லாமல் எப்போதும் பலர் வெறுமனே தங்கள் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பதற்கான ஒரு காரணம், அவர்கள் பணத்தைப் பழிப்பதுதான். நீங்கள் பழிப்பது உங்களைவிட்டு இறக்கை முளைத்துப் பறந்துவிடும்.
6. பணத்தைக் கடவுளாக்கி விடாதீர்கள். அது ஒரு குறியீடு மட்டும்தான். உண்மையான செல்வங்கள் உங்கள் உள்ளத்தில் உள்ளன என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் இங்கு ஒரு சமநிலையான வாழ்க்கையை வாழ வந்துள்ளீர்கள். உங்களுக்குத் தேவையான பணத்தைக் கைவசப்படுத்துவதும் இதில் அடங்கும்.
7. பணத்தில் மட்டுமே குறியாக இருக்காதீர்கள். செல்வம், மகிழ்ச்சி, அமைதி, உண்மையான வெளிப்பாடு, அன்பு ஆகியவற்றையும் தேடுங்கள். தனிப்பட்ட முறையில் அனைவரிடத்திலும் அன்பையும் நல்லெண்ணத்தையும் செலுத்துங்கள். பின், உங்கள் ஆழ்மனம் இவற்றின் வெளிப்பாட்டில், உங்களுக்குக் கூட்டு வட்டி வழங்கும்.
8. ஏழ்மையில் யாதொரு ஏற்றமிகு பண்பும் இல்லை. இது ஒரு மனநோய். நீங்கள் இந்த மனப்பிணியிலிருந்தும், முரண்பாட்டிலிருந்தும் உடனே உங்களைக் குணப்படுத்திக் கொள்ள வேண்டும்.
9. நீங்கள் இங்கு ஒரு மோசமான சூழலில் உழல்வதற்கோ, கந்தல் ஆடைகளுடன் அலைவதற்கோ, அல்லது பட்டினி கிடப்பதற்கோ வரவில்லை. நீங்கள் செழிப்பான வாழ்க்கை வாழ்வதற்கே இங்கு வந்துள்ளீர்கள்.
10. “கறைபடிந்த பணம்,’’ அல்லது “நான் பணத்தை வெறுக்கிறேன்,’’ போன்ற சொற்றொடர்களை ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள். நீங்கள் எதைக் குறை கூறுகிறீர்களோ, அதை இழப்பீர்கள். பணத்திற்கு நல்லது கெட்டது என்ற முத்திரையைக் குத்த இயலாது. நாம் அதைப் பற்றிச் சிந்திக்கும் கோணம்தான் அதனை நல்லதாகவோ கெட்டதாகவோ ஆக்குகிறது.
11. “நான் பணத்தை விரும்புகிறேன். நான் அதை ஆக்கப்பூர்வமாகவும், விவேகத்துடனும் பயன்படுத்துகிறேன். நான் அதை மகிழ்ச்சியுடன் விடுவிக்கிறேன். அது என்னிடம் ஆயிரம் மடங்காகத் திரும்பி வருகிறது,’’ என்று அடிக்கடி மீண்டும் மீண்டும் கூறுங்கள்.
12. பூமியிலிருந்து தோண்டியெடுக்கப்படும் செம்பு, ஈயம், தகரம், அல்லது இரும்பு ஆகியவற்றைவிடப் பணம் ஒன்றும் தீயதல்ல. எல்லாத் தீங்கும் மனத்தின் சக்திகள் குறித்த அறியாமையாலும், அவற்றைத் தவறாகப் பயன்படுத்துவதாலும் ஏற்படுவதுதான்.
13. இறுதி முடிவை மனத்தில் காட்சிப்படுத்தும்போது, உங்கள் ஆழ்மனம் உங்கள் அகக்காட்சிக்கு ஏற்றாற்போல் செயல்விடை அளித்து அம்முடிவை நிறைவேற்றும்.
14. எதுவும் கொடுக்காமல் ஒன்றைப் பெறுவதற்கு முயற்சிப்பதை நிறுத்துங்கள். ஓசிச் சாப்பாடு என்ற ஒன்று கிடையாது. ஏதேனும் ஒன்றைப் பெற, நீங்கள் ஏதேனும் ஒன்றை விலையாகக் கொடுக்க வேண்டும்.
15. நீங்கள் உங்கள் குறிக்கோள்களிலும், உயர்ந்த சிந்தனைகளிலும், தொழில்களிலும் மனத்தை ஒருமுகப்படுத்திக் கவனம் செலுத்தினால், உங்கள் ஆழ்மனம் உங்களுக்குத் துணை புரியும்.
16. செல்வம் குறித்த எண்ணத்தை ஆழ்மனத்தில் நிறைத்து, ஆழ்மனத்தின் விதிகளை நடைமுறைப்படுத்துவதில்தான் செல்வத்தை அடைவதற்கான சூட்சமம் உள்ளது.
படியுங்கள்..உணருங்கள்..பயன்பெறுங்கள்...
நன்றி.நன்றி..நன்றி...
No comments:
Post a Comment