Tuesday, April 9, 2019

Veg & non veg differential

நண்பர் - அசைவத்திற்கும் தியானத்திற்கோ ஞானத்திற்கோ தொடர்பே இல்லை. அவரவர் தாம் போன போக்கில் கூறிவிட்டுப் போனார்கள். நீர் அறிய விரும்பின் நீரே பரீட்சித்துப் பாரும் தெரியும். இறைவனே பிள்ளைக் கறி உண்டார். பெரிய பெரிய மகான்களெல்லாம் மாமிசம் உண்டவர்களே ? வள்ளலார் மட்டும்தான் மறுக்கிறார். எனவே அசைவ உணவு உண்ணக் கூடாது என்று சொல்வதை விட்டு விடும். தெரிந்தால் பேசும். தெரியாவிட்டால் பேசாமல் இரும்.

இராம் மனோகர் - அடேயப்பா.... அனல் பறக்கிறது. பழக்க வழக்கங்களை மாற்ற வேண்டும் என்று சொல்லுகிற பொழுது, இயலாமை ஆத்திரமாக வெளிப்படுகிறது. ஒரு விதத்தில் நீங்கள் கூறுவது உண்மைதான். அசைவத்திற்கும் தியானத்திற்கும், ஞானத்திற்கும் தொடர்பே இல்லைதான். சைவம் என்றால் அசையாமல் நின்ற இடத்தில் நிலை குத்தி நிற்பது. அசைவம் என்றால் இடம் விட்டு இடம் நகர்ந்து கொண்டேயிருப்பது. ஆக மனம் ஒரே எண்ணத்தில் நிலை குத்தி நின்றால் அது சைவம். அதாவது அதுதான் தியானம். அதன் விளைவு ஞானம். மனம் எண்ணம் விட்டு எண்ணம் தாவிக் கொண்டு, அலைந்து கொண்டே இருந்தால் அது அசைவம். அப்படிப்பட்ட மனதிற்கும், தியானத்திற்கும், ஞானத்திற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் ? எனவே நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை.

நாகரீகம், கலாச்சாரம், பண்பாடு, மனிதநேயம் இவைகளெல்லாம் பரிணாமத்தின் வளர்ச்சிகளாகும். கற்கால மனிதன் வாழ்ந்தது போல நாம் வாழ்வதில்லை. ஏனெனில் அவனை விட நாம் அறிவு, மனம், சொல், செயல் என அனைத்து விஷயங்களிலும் பரிணாம அளவில் மிகப் பெரிய வளர்ச்சிகளை அடைந்திருக்கிறோம். எந்த செயல்களால் நமக்கும், இந்த சமூகத்திற்கும், சக உயிர்களுக்கும், இந்த உலகத்திற்கும் நன்மைகள் மட்டுமே ஏற்படுமோ அத்தகைய செயல்களையே நாகரீகம், கலாச்சாரம், பண்பாடு என்றெல்லாம் சொல்கிறோம். அந்த வகையில் பிற உயிர்களைக் கொன்று, அவைகளின் வாழ்வுரிமையைப் பறிக்கக் கூடாது என்ற கோட்பாடும் பண்பட்ட நாகரீகம்தான். அது போலவே உணவுக்காக பிற உயிர்களைக் கொல்லாமல், நாமே நம் உணவை உற்பத்தி செய்து கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாடும் பண்பட்ட நாகரீகம்தான்.

மற்ற பிற தேசங்களை விட நமது தேசத்தில் இதற்கான காலச் சூழல், இடம் எல்லாம் தோதாக அமைந்திருக்கிறது. எனவே இந்தப் பண்பட்ட நாகரீகம் இங்கே அதிகமாகவே வளர்ச்சி பெற்றிருந்தது. ஆனால், அன்னியர்கள் ஊடுறுவலால் நாம் நம் பண்பட்ட நாகரீக பழக்க வழக்கங்கள் சிலவற்றை இழந்து விட்டோம் அல்லது மாற்றிக் கொண்டோம். வள்ளலார் சமீப காலத்தில் வந்தவரல்லவா !! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தெய்வப் புலவர் வள்ளுவரும், அதற்கும் முன்பே வாழ்ந்த புத்தரும், மகாவீரரும், சித்தர் திருமூலரும் புலால் மறுப்பை வலியுறுத்திப் பேசியிருக்கிறார்களே !!? இறைவன் பிள்ளைக் கறி உண்டார். சரி. ஒத்துக் கொள்கிறேன். அவர் மீண்டும் சீராளா என்று அழையுங்கள் என்று சொன்வுடன், அவன் மீண்டும் உயிர் பெற்று வந்து விட்டான் அல்லவா ?

நான் உங்களிடம் கேட்கிறேன், நீங்கள் அழைத்தால் நீங்கள் சாப்பிட்ட ஆடோ, மாடோ, பன்றியோ, கழுதையோ, மீனோ, கோழியோ, நாயோ திரும்ப உயிர் பெற்று வருமா ? உங்களால் வர வைக்க முடியுமா ? அப்படி வரவழைக்க முடியுமென்றால் நீங்கள் சாப்பிடுவதற்கு நானே தினமும் மாமிசம் வாங்கித் தருகிறேன். ஐயா இறைவனும் நீங்களும் ஒன்றா ? அத்தகைய நிலையை நீங்கள் அடைந்து விட்டீர்களா ? அப்படி அந்நிலையை நீங்கள் அடைந்திருந்தால் இந்தக் கேள்வியே எழுந்திருக்காதே ? ரிஷி. முனிவர்கள், மகான்கள் எல்லோரும் உண்டிருக்கலாம், எனெனில் அவர்கள் வனாந்திரத்தில் வாழ்ந்தவர்கள். நாம் இப்பொழுது அவ்வாறு இல்லையே ? ஒரு ரிஷிக்கு பல பத்தினிகள் உண்டு. உமக்கு எத்தனை ? ஏன் ஒன்று ? ஏனெனில் நாம் அதையும் தாண்டி பக்குவப்பட்டு, நாகரீக வளர்ச்சி பெற்று வந்து விட்டோம்.

எது நல்லது ? எது கெட்டது ? என்று ஆராய்ந்து, தெளிந்து முன்னேற்றம் அடைந்திருக்கிறோம். இதை முதலில் நீங்கள் உங்கள் மனதளவில் உணர்ந்து கொள்ள வேண்டும். ஒரு ரிஷி கோமணம் கட்டிக் கொண்டு அலைந்தார் என்பதற்காக நாமும் கோமணம் கட்டிக் கொண்டு அலுவலகத்திற்குச் செல்ல முடியுமா ? எதைக் கொள்ள வேண்டுமோ அதைக் கொள்ள வேண்டும். எதைத் தள்ள வேண்டுமோ அதைத் தள்ளி விட வேண்டும். அன்னிய தேசத்தைச் சேர்ந்த, அன்னிய மதங்களைச் சேர்ந்த குருமார்கள் அல்லது ஞானிகள் மாமிசம் உண்டவர்கள்தாம். தாவர உணவுகள் கிடைக்காத சூழலில் வாழ்பவர்கள் மாமிசம் உண்டுதான் உயிர் வாழ முடியும். வேறு வழியில்லை. எனவே ஒரு உயிரை உணவுக்காக பலியிடும் பொழுது இறைவனிடம் மனமுருக வேண்டி பிரார்த்தனை செய்து விட்டு பலியிடுவார்கள்.

ஆனால், நமது தேசத்தின் தட்ப வெப்ப சூழல், மற்றும் மனிதர்களின் உடலமைப்பு, ஜீரண சக்தி இவையெல்லாம் அசைவ உணவு வகைகளுக்கு ஏற்றதாக இல்லையே !? எனவே ஒருவர் அசைவ உணவு உண்டாலும் 40 வயதுக்குமேல் இரத்தக் கொழுப்பு, மாரடைப்பு, சர்க்கரை நோய், புற்று நோய் போன்ற பல நோய்கள் வந்து விடுகின்றன. எந்த மருத்துவர்கள் மாமிசம் சாப்பிடுங்கள் என்று சொல்கிறார்களோ, அவர்களே பிறகு மாமிசம் சாப்பிடக் கூடாது என்றும் சொல்வார்கள். திருமூலர் உள்ளிட்ட அனைத்து சித்தர்களும், ஞானிகளும் உயிர்களை உணவுக்காகக் கொல்வது பாவம் என்றே சொல்கிறார்கள். என் குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்களிடம் இதே கேள்வியைக் கேட்ட பொழுது '' மாமிச உணவு முரண்பட்ட உணர்ச்சிகளைத் தூண்டக் கூடியது. நோய்களை ஏற்படுத்தக் கூடியது என்று கூறினார்.

மேலும் அவர் கூறியதென்னவென்றால், ஒரு தட்டில் ஒரு கத்திரிக்காயையும், மற்றொரு தட்டில் ஒரு மாமிசத் துண்டையும் வைத்து மூடி வைத்து விடுங்கள். ஒரு வாரம் கழித்து இரண்டையும் திறந்து பாருங்கள். கத்திரிக்காய் அழுகி, வாடிப் போயிருக்கும். துர் நாற்றம் வராது. ஏற்கனவே அதில் இருந்த புழுக்கள்தான் இருக்கும். ஆனால், மாமிசம் அழுகி, அத்தனையும் புழுவாக மாறியிருக்கும். துர்நாற்றம் தாங்க முடியாது. அந்த அளவுக்கு மாற்றம் பெற்று மாமிசம் நம் உடலில் நோயை உண்டு பண்ணக் கூடியது. மேலும் மாமிசத்தை விரும்பி நாடும் மனிதன் உயிர்க்கொலை, அதன் உடலை உயிருக்காகத் திருடுதல், அவ்வுயிரின் வாழ்வுரிமையைப் பறித்தல் என்கிற மூன்று பாவங்களைச் செய்கிறான். இந்த பாவங்கள் சமுதாயத்தில் மக்களிடையே பரவும் பொழுது எல்லா வகையான துன்பங்களுக்கும் காரணமாக அமைந்து விடுகின்றன. இந்த மூன்று குற்றங்களே உலகில் நடக்கும் அனைத்து குற்றங்களுக்கும் அடிப்படை. மேலும் அங்கு அன்பும், கருணையும் எவ்விதம் மலரும் ?'' என்றார் .

எப்படி ஒரு மனிதன் இறந்த சற்று நேரத்திற்கெல்லாம் அவன் உடல் அழுகி நாற்றமடித்து, கிருமிகள் உற்பத்தியாகத் தொடங்கு கின்றனவோ, அதே போலவே உணவுக்காக ஒரு உயிரைக் கொன்ற சில நிமிடங்களில் அதன் மாமிசத்திலும் வேதி மாற்றங்கள் நிகழத் தொடங்கி, கிருமிகள் உற்பத்தியாகின்றன. என்னதான் வேக வைத்தாலும் சில கிருமிகள் சாவதில்லை. மனிதனின் பிணம் போலவே கொல்லப்பட்ட விலங்கின் உடலும் பிணமே. அசைவம் என்ற பெயரில் பிணத்தையே தின்று கொண்டிருக்கிறோம். விலங்குகள் ஒன்றை ஒன்று தின்று வாழ்கின்றன என்றால், அவைகளுக்கு உணவை உற்பத்தி செய்ய முடியாது. மனிதன் அவைகளில் இருந்து பரிணாம அளவில் மேம்பட்டவன். உயிர்களைக் காக்கவும், உணவை உற்பத்தி செய்யவும் கடமைப்பட்டவன்.

No comments:

Post a Comment