காவிரி ஆற்றின் தென்பகுதியில் அமைந்து உள்ள குன்றுதான்(மலை) புகழிமலை ஆகும். இந்த மலையின் உச்சியில்தான் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்து உள்ளது. கரூர் மாவட்டத்தில் இருந்து 16 கிலோ மீட்டர் தூரத்தில் வடக்கே உள்ளது புகழூர். இங்கிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் வேலாயுதம்பாளையம் என்னும் ஊரில்தான் புகழிமலை முருகன் கோவில் அமைந்து உள்ளது.
இந்த மலைக்கு வடக்கே அகண்ட காவிரி ஓடுகிறது. மலைக்கு செல்லும் வழிப்பாதை கிழக்கு திசையை நோக்கி அமைந்து உள்ளது. இதன் உயரம் சுமார் 400 அடி ஆகும். மலைக்கு செல்லும் வீதிக்கு மலைவீதி என்றும், மலையை சுற்றி வரும் வீதி தேரோடும் வீதி என்றும் அழைக்கப்படுகிறது. இதன் சுற்றளவு 4 கிலோ மீட்டர் தூரம் ஆகும்.
மலையின் அடிவாரத்தின் கீழ் திசையில் கிழக்கு நோக்கி விநாயகர் சன்னிதி உள்ளது. மலையின் நுழைவுவாயில் மண்டபத்தின் முன் மலையை நோக்கி மேற்கு திசையில் முருகனுடைய மயில் வாகன சன்னிதி உள்ளது. இதன் அருகில் உற்சவமூர்த்தி மண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது.
மலையின் உச்சிக்கு சென்று முருகனை தரிசிக்க 354 படிக்கட்டுகளை ஏறி செல்ல வேண்டும்.
அதற்கிடையில் உள்ள பல குன்றுகளில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் அமைந்து உள்ளது. முதல் படியில் இருந்து 25 படிக்கட்டுகள் ஏறியதும், தென் திசையில் மலைக்காவலரான அய்யனாருக்கு தனி சன்னதி உள்ளது. இந்த மலைக்கு இவர்தான் காவல் தெய்வமாக கருதப்படுகிறார். இப்பெயரில் மலை அடிவாரத்தின் கீழ் மலைக்காவலன் என்ற தெரு பெயரும் உள்ளது.
இதில் இருந்து 43 படிகள் ஏறியதும் ஒரு குன்றின் மேல் குரங்கு சிலை வாழைப்பழத்தை தின்று கொண்டு உட்கார்ந்த நிலையில் வரவேற்பதாக அமைந்து உள்ளது. இதன் கழுத்தில் தங்கள் வேண்டுதலை பக்தர்கள் எழுதி அந்த வேண்டுதலை நிறைவேற்றி தருமாறு துண்டு சீட்டு கட்டி மாலையாக அணிவிக்கப்பட்டு இருக்கும்.
இதில் இருந்து 5 படிகள் ஏறியவுடன் தென் திசையில் உள்ள சிறிய குகையில் சிவனும், பார்வதியும் அமர்ந்த நிலையில் உள்ளனர். இவர்களின் இடப்புறத்தில் நாரதர், விநாயகர் மூசிக (எலி) வாகனத்தில் நின்ற நிலையில் சிவனிடம் பழத்தை பெறுகிறார். வலதுபுறத்தில் முருகன் மயில் வாகனத்தில் அமர்ந்து உள்ளார்.
முருகன் கழுத்தில் குழந்தை வரம் வேண்டி கொள்பவர்கள் துண்டு சீட்டு எழுதி மாலையாக அணிவித்துள்ளனர். இதன் அருகில் கிழக்கு திசையை நோக்கி 7 கன்னிமார் சாமிகள் உள்ளனர்.
இதன் எதிரில் பூங்காவனம் அமைந்து உள்ளது. இது ஒரு அடர்ந்த காடுபோல் இருக்கும். இக்காட்டில் புலி, சிங்கம், யானைகள் உலாவுவது போல் உள்ள சிலைகள் உள்ளன.
இக்காட்டின் ஒருபுறத்தில் வள்ளி மானுடன் திரிவது போல் உள்ள சிலைகள், மற்றொரு இடத்தில் வேடவர் வேடத்தில் வேட்டைக்கு செல்லும் முருகன் சிலைகளும் உள்ளன.
இங்குள்ள ஒரு மலை குன்றின் மீது அகத்திய முனிவர் கடுமையான தவத்தில் இருக்கிறார். அவரது அருகில் கமண்டலம் உள்ளது.
தீராத தாகத்தை தணிப்பதற்கு காகம் பல இடங்களில் தேடி அலைந்தும் தண்ணீர் கிடைக்கவில்லை. அப்போது அகத்திய முனிவர் அருகில் கமண்டலம் இருப்பதை அறிந்து கொண்டு அவருடைய தவத்தை கலைக்க கூடாது என்பதற்காக கமண்டலத்தை சாய்த்து விட்டு அதில் ஓடும் தண்ணீரை தாகம் தீர காகம் அருந்தும் நிலையை குறிக்கும் சிலைகள் இப்பூங்காவனத்தில் உள்ளது.
பூங்காவில் இருந்து 18 படிகள் ஏறியதும் நுழைவாயில் மண்டபம். இதன் அருகில் பக்தர்கள் அமர்வதற்காக மேடைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் அமர்ந்து சிறிது நேரம் களைப்பு நீங்கி ஓய்வு எடுத்த பின்னர் மேலும் 56 படிகள் ஏறினால் தென் திசையில் உள்ள குன்றில் முருகன் மயில் வாகனத்திலும், அய்யப்பன் புலி வாகனத்திலும், விநாயகர் எலி வாகனத்திலும் அமர்ந்து கொண்டு செல்வது போன்ற சிலைகள் உள்ளன.
இதனையடுத்து 54 படிகள் ஏறியதும் தென்திசையில் உள்ள குன்றில் பாம்பாட்டி ஒருவர் மகுடி ஊதுவதும், நல்ல பாம்பு ஒன்று படம் எடுத்து ஆடுவது போன்ற சிலைகள் உள்ளன. இதனை பார்த்து விட்டு மேலும் 14 படிகள் ஏறினால் வடதிசையை நோக்கி அமைந்து உள்ளது இடும்பன் சன்னிதி. இந்த சன்னிதிக்கு பின்புறம் கல்வெட்டுகள், சமணர்கள் படுக்கை இருப்பது வரலாற்று சிறப்பாகும்.
மேலும் பல படிகள் ஏறி வந்தபின் உச்சிமலை முருகன் சன்னிதியின் நுழைவாயில் மண்டபம். சிறிது தூரத்தில் சன்னிதியின் கொடிமரம். இதன் அருகில் சேவல் சின்னம் பொறித்த கொடிமரம். இதன் முன் சன்னிதியை நோக்கி மேற்கு திசையில் மயில் வாகனம் சன்னிதியை தரிசனம் செய்த பின்னர் சன்னதியின் கிழக்கு திசை நோக்கி விநாயகர் சன்னிதி மற்றும் சன்னிதியை சுற்றி வரும் இடத்தில் தென் திசையை நோக்கி தட்சிணாமூர்த்தி.
இதையடுத்து கிழக்கு திசையில் மகா கணபதி, முருகப்பெருமான் ஆகியோரின் தரிசனத்திற்கு பின்னர் தென் திசையில் சுந்தரேஸ்வரர் சன்னிதியில் நடராஜர் நடனமாடிய நிலையில் அருகில் சவுந்தரநாயகி நின்ற நிலையில் உள்ள விக்கிரக சிலைகள் உள்ளன. கிழக்கு திசையில் பாலமுருகன் ஒரு கையில் வேலும், மற்றொரு கையில் சேவல் கொடியுடனும் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
முருகனை தரிசித்த பின்னர் சன்னிதியை விட்டு வெளியில் வந்தவுடன் மேற்கு திசையில் உள்ள சிவலிங்கத்தை வணங்கிய பின் தென் திசையில் உள்ள மீனாட்சி அம்மன், நவக்கிரக சன்னிதிகளை சுற்றி வந்து அனைத்து சாமிகளையும் தரிசனம் செய்யலாம்.
காவிரி ஆற்றங்கரையின் தென்பகுதியில் உள்ள 6 கிராமங்களுக்கு இந்த மலை சொந்தமானது என்பதால் இம்மலையை ஆறுநாட்டான் மலை என்றும் அழைக்கப்படுகிறது.
சங்க காலத்தில் சமணர்கள் இம்மலையில் அடைக்கலம் பெற்று வாழ்ந்து வந்தனர். சமணர்கள் புகுந்த இம்மலை புகழிமலை என்றும், இவ்வூர் புகழூர் என்றும் பெயர் பெற்றது என்று அருணகிரி நாதர் பாடியுள்ளார். அதன்பின்னர் இம்மலை புகழிமலை என்னும் பெயர் பெற்று புகழ் அடைந்து உள்ளது.
தற்போது மலை உச்சியில் உள்ள முருகன் சன்னிதி, கருவறை அமைந்த பகுதியில் சமணர்கள் காலத்தில் வேல் மட்டும் ஊன்றி அதனை வழிபட்டு வந்துள்ளனர். இதையும் அருணகிரிநாதர் வேல் ஊன்றிய இம்மலையை வேலாயுதம்பாளையம் என்று குறிப்பிட்டு உள்ளார். அதனாலேயே இவ்வூருக்கு வேலாயுதம்பாளையம் என்னும் பெயர் வந்தது.
புகழிமலை அடிவாரத்தில் உள்ள உற்சவமூர்த்தி மண்டபத்தில் முருகனை அலங்காரம் செய்து வழிபட்டு சாமியை தேரில் ஏற்றி சூரனுடன் சண்டைக்கு செல்வதும், சண்டையில் சூரன் தலையை வெட்டுவதும் போன்ற திருவிழாவை காண 6 நாட்டு மக்களும் கலந்து கொள்வார்கள். இந்த கோவிலில் தைப்பூச தேர் திருவிழா மிகவும் சிறப்பு பெற்றதாகும்.
இந்த திருவிழா இரண்டு நாட்கள் நடைபெறும். கோவில் தேர் 2 நாட்கள் தேரோடும் வீதியை சுற்றி வரும். மற்ற முருகன் கோவில்களில் தேர் ஒரு நாள் மட்டும்தான் இழுக்கப் படும். இங்கு மட்டும் 2 நாட்கள் தேர் இழுப்பது சிறப்பானதாகும்...
No comments:
Post a Comment