Saturday, October 7, 2017

நீ யார்? நான் யார்? விளக்கம்*

*

"இதுநாள் வரையில் நமக்கெல்லாம் எப்போதுமே யாராகிலும் சிறிது எதாவதுச் சொன்னால், "நீ யார்?"  என்று கேட்டுத்தான் பழக்கம் !  எப்பொழுதாவது "நான் யார்?" என்று கேட்டுக் கொள்கிறோமோ என்றால் கிடையாது.  எனவே முதல் முறையாக இன்று "நான் யார்?"  எனக் கேட்பது புதுமையாகத்தான் இருக்கும்.  அந்தப்புதுமைதான் மனிதனை மனிதனாக்க வல்லது.  "நீ யார்?" என்று கேட்கையில் வெறுப்புணர்ச்சிதான் மேலோங்கி நிற்கும்.  அது மனம் விரைவாக (புறத்தே) இயங்கிக் கொண்டிருக்கும் உணர்ச்சிவயப்பட்ட நிலை.  "நான் யார்?" என்று கேட்கும்போது "என்னை இந்த உலகிற்கு அனுப்பியவர் யார்?  இந்த உலகத்தை நிர்வகித்துக் கொண்டிருப்பது யார்? நான் எங்கிருந்து வந்தேன்? எங்குப் போகவேண்டும்? அது எப்பேர்ப்பட்ட இடம்? என்றெல்லாம் எண்ணி அந்த எண்ணத்திலே, ஒரு எல்லைகாண, ஒரு எல்லை வகுத்துக் கொள்ளக்கூடிய கேள்விதான் "நான் யார்?" என்பது.  "நான் யார்?" என்பது இரண்டே வார்த்தைகள் கொண்ட கேள்விதான். இரண்டே இரண்டு சொற்கள் தான்.  இந்த இரண்டு சொற்கள் கொண்ட ஒரு கேள்வியிலே, அதற்கு அர்த்தம் மாத்திரம் புரிந்து கொண்டுவிட்டால்,  இந்தப் பிரபஞ்சத்தின் ரகசியம் அத்தனையும் விளங்கிவிடும்.

.
இப்போது "நான் யார்?" என்று ஒவ்வொருவரும் கேட்டுக்கொள்வோம்.  உடல், உயிர், மனம் இந்த மூன்றும் சேர்ந்தது தான் "நான்" என்பதாக ஒலிக்கிறது.  இந்த மூன்றில் நான் உடலா, உயிரா, அறிவா? - இதுதான் இப்போது தெரிந்து கொள்ள வேண்டியது.  எல்லாமே சேர்ந்ததுதான் நானா? - இந்த வினா சுலபமாகக் கிடைக்கக்கூடிய விடை உடையது தான்.  ஆனாலும் அதை எளிதில் பெற முடியாதபடி இதுவரை படித்த நூல்களில் சிக்கல்களை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்.  காரணம் யாரோ ஒரு சாதகர் (aspirant) தனக்குத் தெரிந்த ஒருவரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டு வைத்தார். அவர் அதற்கு விடை சொன்னார். தெரியாதவரைத் தெரியாதவர் கேட்டார் என்றால் அவருக்குத் தெரிந்ததை அவர் சொல்வார்.  இவர் தெரியாதவரிடம் என்ன தெரிந்து கொண்டாரோ அதை வைத்துக்கொண்டே பத்துப் பேரிடம் சொல்வார்.  இப்படி உண்மையை மறைத்து எழுதப்பட்ட எத்தனையோ நூல்களை இன்று பார்க்கின்றோம்.  அதனால் தான் உண்மை மறைந்து போயிற்று.  உண்மை என்பது எப்போதும் எளிது. (Truth is always simple) அதைத் தெரியாமல் அணுகும்போது, பல குழப்பங்களை ஏற்படுத்திக்கொண்டு அதனை யாருக்குமே விளங்காமல் செய்து விடுகின்றார்கள். 

அவ்வாறல்லாது உண்மையோடு உண்மையை அணுகினால், உண்மையைத் தெரிந்துகொண்டால் அது மிகவும் எளிது தானே !  அந்த முறையிலே எந்தவிதமான கூட்டல், குறைத்தல் (addition or subtraction) இல்லாத யோகத்தை, அசலாக, யோகமாகவே நாம் தெரிந்துகொண்டால்,  அந்தப் பயிற்சி முறையை எளிமை, simple என்ற வார்த்தையை வைத்து எளியமுறைக் குண்டலினி யோகம் (Simplified Kundalini Yoga) என்று சொல்கிறோம்". 

.
*தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி*

*வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.*

No comments:

Post a Comment