கலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு
மாலையில் கடுக்காய் மண்டலம்
கொண்டிடில் கோலை ஊன்றி குறுகி
நடப்பவனும் கோலை வீசி குலாவி
நடப்பானே ...
சித்தர்கள் இது போன்ற பாடல்கள் வடிவில் எளிய முறையில் நோய் களைத் தீர்க்கும் வழிமுறைகளை வடித்துள்ளனர்.ஆனால் இவைகளின் உண்மை விளக்கங்களை கண்டறிந்து அதன் படி உண்டோமானால் பாடல்களில் கண்டபடி உண்மையான பலன்களை அடைய முடியும்.
சித்த மருத்துவ முறையின் தத்துவமே அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் என்பதுதான் அதாவது அண்டம் என்ற பிரபஞ்சத்தில் உள்ள பஞ்ச பூதங் களின் ஒரு பகுதிதான் பிண்டமாகிய நமது உடலிலும் இயங்குகின்றது.
நிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம்,என்ற ஐந்து பூதங்களில் நிலம் கீழே நாம் வாழ்வதற்கு ஆதாரமாகவும்,ஆகாயம் மேலே சாட்சியாகவும் இருப் பதால் நடுவில் உள்ள நீர்,நெருப்பு,காற்று என்ற மூன்று வித சக்திகளை மட்டும் இயங்கும் சக்திகளாக குறிப்பிட்டுள்ளனர்.
எனவேதான் சித்த மருத்துவ முறையில் நாடி பிடித்து நோய்களைக் கணிக்க மூன்று விரல்களைப் பயன்படுத்துகின்றனர்.அவை வாதம், பித்தம்,கபம் எனப்படும்.
வாதம் - காற்று - 1 மாத்திரை அளவு
பித்தம் - நெருப்பு - 1/2 மாத்திரை அளவு
கபம் - நீர் - 1/4 மாத்திரை அளவு
இது நாடியின் அளவுகளாகும் இதன் படி கையில் நாடி துடித்தால் உடலில் நோய் இல்லை என அர்த்தம்.இந்த நாடி அளவுகளை கூடவோ குறை யவோ அல்லாமல் சமன் படுத்தும் மருந்துகள் தான் மேற்கண்ட பாடலில் உள்ளவை.
வாதம் - காற்று - 1 மாத்திரை அளவு - சுக்கு
பித்தம் - நெருப்பு - 1/2 மாத்திரை அளவு - இஞ்சி
கபம் - நீர் - 1/4 மாத்திரை அளவு கடுக்காய்
இஞ்சி, சுக்கு, கடுக்காய் இந்த மூன்றும் தான் உடலில் உள்ள வாத, பித்த, கபம் மூன்றினையும் சமன் செய்பவை.
அடுத்து,
சித்த மருத்துவத்தின் அடிப்படையே ஒவ்வொரு மருத்துவ மூலப் பொருட்களிலும் அமிர்தமும் ,நஞ்சும் இணைந்துள்ளது என்பதுதான். எனவேதான் சித்தர்கள் இவைகளில் உள்ள நஞ்சுவை நீக்கி மருந்துகளை தயாரிக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர்.சுத்தி முறை எனும் பிரிவு சித்த மருத்துவ முறையில் மட்டுமே உள்ளது.
சுக்குக்கு புற நஞ்சு - கடுக்காய்க்கு அக நஞ்சு எனும் விளக்கம் உள்ளது அதாவது சுக்கில் மேலே உள்ள தோல் பகுதி நஞ்சு எனவும் ,கடுக்காயில் உள்ளே உள்ள கொட்டை நஞ்சு எனவே இவைகளை நீக்கினால்தான் அமிர்தமாக வேலை செய்யும்.
சுக்கு சுத்தி ; தரமான சுக்கு தேவையான அளவில் வாங்கி சுக்கின் மேல் புறம் வெற்றிலைக்குப் போடும் சுண்ணாம்பு ஒரு போஸ்ட் கார்ட் கணத்தில் பூசி காயவிடவும்.பின்பு மிதமான நெருப்பில் வாட்டவும் சுண்ணாம்பில் நெருப்பு பிடிக்கும் சமயம் எடுத்து விடவும்.பிறகு நன்கு ஆரிய பின் ஒரு கத்தியால் சுண்ணாம்பை சுரண்ட சுக்கின் மேல் தோலுடன் வந்து விடும் .இதனை இடித்து சலித்து பதனம் செய்யவும்.
கடுக்காய் சுத்தி ;கடுக்காயை உடைத்து மேலே உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.கொட்டை நஞ்சு எனவே நீக்கிவிடவும்.சதைப் பகுதியை இடித்து தூள் செய்யவும்.
இஞ்சி சுத்தி ; இஞ்சியை சிறிது நீர் விட்டு அரைத்து பிழிந்து சாற்றை வடித்து வைக்கவும் இதை பத்து நிமிடம் கழித்து பார்க்க அடியில் சுண்ணாம்பு போல் வண்டல் இருக்கும் இதுதான் நஞ்சு எனவே மேலே உள்ள தெளிவை மட்டும் எடுத்துக் கொள்ளவும் .
இந்த முறையில் சுத்தி செய்த பிறகு அமிர்தமாக வேலை செய்யும்.
உண்ணும் முறை :
காலையில் இஞ்சிச்சாறு 15-மிலி (மூன்று டீஸ்பூன்)எடுத்து சுத்தமான தேன் அதே அளவு கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடவும்.இது பித்தத்தை சமன் செய்யும்.
மதியம் உணவிற்கு முன் சுக்குத்தூள் 1/2 டீஸ்பூன் அளவு சுடுநீரில் கலந்து சாப்பிடவும்.இது வாயுவை சமன் செய்யும்.
இரவில் படுக்கும் பொது கடுக்காய் தூள் ஒரு டீஸ்பூன் அளவு வெண்ணீ ரில் கலந்து சாப்பிடவும்.இது கபம் எனப்படும் சிலேத்துமத்தை சமன் செய்யும்.மலம் மிதமாக இளகிப் போகும்.
இதன்படி ஒரு மண்டலம் உண்ண உடலில் இளமை மிடுக்குடன் புத்துணர்ச்சி கிட்டும்.
பழமொழி :
கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்.
ஒரு கடுக்காய் பத்து தாய்க்கு சமம்.
சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை சுப்பிரமணியருக்கு மிஞ்சிய கடவுள் இல்லை.
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
வாழ்க நலமுடன்
RAJAJI JS (10.7.17)
No comments:
Post a Comment