Tuesday, February 2, 2016

நமது கடமை

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
.

நமது கடமை:
.

"பழக்கத்தின் காரணமாக எத்தனையோ குறைபாடுகள் உள்ளன. அதை எல்லாம் படிப்படியாகப் போக்கிக் கொள்ளலாம். எந்தச் சீர்திருத்தமும் இடித்துக் கூறியோ, குற்றம் கூறியோ வரமுடியாது. ஆகவே நலம் கூறி, நலம் செய்து அதன் மூலமாகத்தான் தீமை ஒழிவதற்கு, வேண்டாமை ஒழிவதற்கு நாம் பார்க்க வேண்டும். நாம் செய்ய வேண்டியது எல்லாம் நல்லதைப் புகுத்த வேண்டியது என்ற முறையில் ஒவ்வொரு குடும்பத்திலேயும்  "மனவளக்கலையைக்" கற்றுக் கொடுக்க வேண்டும். இதனால் மனம் ஒடுங்குகின்றது. அடங்குகின்றது. அறிவு நுட்பம் பெறுகின்றது. அந்தச் சிந்திக்கும் ஆற்றல், அறிவு, நுட்பம் இவை கிடைத்துவிட்டால், அவற்றின் கீழே பொக்கிஷம் போல அனைத்து நலன்களும் கிடைக்கும்; எல்லா மனிதர்களுக்கும் தேவையான அத்தனையும் கிட்டும்.
.

தவம் செய்து கடவுளிடம் வரம் கேட்கப் போகிறேன் என்ற ஒருவரிடம் "நீ என்ன கேட்டாலும் அது பற்றாக்குரையாகத் தான் இருக்கும்" என்று கூறிவிட்டு, மற்றவர் நான் தவம் செய்யும் போது கடவுளே என்னிடம் வந்து "உனக்கு என்ன வரம் வேண்டும்? ராஜ்ஜியம் வேண்டுமா" என்று கேட்டாலும் வேண்டாம், வேண்டாம் என்று சொல்லிக்கொண்டே வருவேன். எனக்கு நல்ல "அறிவு" வேண்டும் என்று தான் கேட்பேன் என்றார். "அது தான் சரி" என்று ஒத்துக்கொண்டார். அது போல நல்ல அறிவு இருக்குமேயானால் அதன் கீழ் எல்லாம் பெறலாம்.
.

ஆகவே அறிவை மேம்படுத்த வல்ல, அறிவைத் திடப்படுத்தவல்ல, அறிவைக் கூர்மைபடுத்த வல்ல இந்த "மனவளக்கலையைப்" பயின்று இது வரையிலே இந்த அறிவைப் பற்றி அறியாமல், வாழ்வைப் பற்றி தெரிந்து கொள்ளாமல், செய்த தவறுகளினால் ஏற்பட்ட விளைவுகளை எல்லாம் போக்கிக் கொண்டு மேன்மேலும், அத்தவறுகள் எழாமல் காத்துச் சிறப்பாக வாழ வேண்டுமானால் இந்த "மனவளக் கலையை" ஒவ்வொரு குடும்பத்திலும் ஆணும், பெண்ணும் சமமாகக் கற்றுக் கொண்டு செயல்பட வேண்டும்."
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.

" இறைவனை வணங்குவதை விட
சிந்திப்பது மேல்".
.

"இறைவனே நான் ஆக இருக்கிறான் என்ற
உண்மையைத் தெளிவாக உணர்ந்த
நிலையிலே தன்முனைப்பு எழவே எழாது".
.

அறிவின் அமைதி :

"இறைவனது திருநிலையோடு இணைந்தபோது
இன்பதுன்ப உணர்வுகளைக் கடந்துயர்ந்து
மறைபொருளாம் அறிவு அதன் முழுமை பெற்று
மா அமைதிபெறும்; அது பேரின்பமாகும்;
நிறையறிவுநிலை ஈதே இந்தப் பேற்றை
நினைந்தோ மறந்தோ உலகில் மனிதன் அந்தத்
துறைநோக்கி வாழ்க்கைக் கடல் நீந்துகின்றான்-
துணைகுருவே வழி அறமும் தவமும் ஆகும்".
.

மனித மாண்பு :

"மனிதவுயிர் பிறவியதன் மதிப்புணர வேண்டும்
மனம் உயிர்மெய்மூன்றான மறைபொருட்களான
மனிதனுடைய ஆற்றல்களை மலரவைக்க வேண்டும்
மறைந்திருக்கும் உட்பதிவாம் பலவினைகடம்மை
மனிதனேமாற்றி அறச்செயல் பதிவு செய்து
மனத்தூய்மை வினைத்தூய்மை பெற்று பரத்துறைந்து
மனிதனவன் உயர்மனிதனாக வாழச்செய்யும்
மனவளக்கலையிதனைப் பரப்பி நலம் காண்போம்."
.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

மெல்ல கொள்ளும் நஞ்ச ரீபைண்ட் ஆயில

மெல்ல கொள்ளும் நஞ்சு( slow poison )
ரீபைண்ட் ஆயில்( Refined oil)

ரீபைண்ட் ஆயில் பயன்படுத்தாதிங்க!நோயை விலை கொடுத்து வாங்காதிங்க !நாமெல்லாம் நினைக்கிறது போல ரீபைண்ட் ஆயில்னா சுத்திகரிக்க பட்ட எண்ணெய் மட்டும் இல்லங்க சுத்தமா உயிர் சத்துகளே இல்லாதஎண்ணெய்.
ரீபைண்ட் ஆயில் எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா?
மில்லில் இருந்து பெறப்பட்ட எண்ணெய்யில் காஸ்டிக் சோடாவை சேர்த்து கொதிக்க வைத்து முதலில் அதிலிருந்து சோப்பு எடுக்கிறார்கள்.பிறகு அதிகம் இருக்கும் காஸ்டிக் அமிலத்தின் மூலம் அகற்றி நீயூட்ரலைஸ் செய்து அதில் இருக்கும் வாசனையை அறவே நீக்கிவிடுகிறார்கள்.பிறகு அதை சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்சன் மூலம் பிரித்து எடுக்கிறார்கள்.இதை எல்லாம் நேரில் பார்த்தால் நம்மில் பலருக்கு சாப்பிடவே பிடிக்காது. திரைமறைவில் நடக்கும் இந்த வேலைகள் எல்லாம் மக்களுக்கு தெரியாத காரணத்தால் " சுத்தம் செய்யப்பட்ட எண்ணெய் "என்று நினைத்து ரீஃபைண்ட் ஆயிலை உபயோகித்து கொண்டு இருக்கிறார்கள்.#உண்மையில் ரீஃபைண்ட் ஆயில் என்பது அடர்த்தி இல்லாத தண்ணீர் போன்ற ஒரு திரவம்.சமையலுக்கு இதை பயன்படுத்தும் போது சூடு தாங்காமல் உருக்குலைந்து உடல் ஆரோக்கியத்திற்கு தீமை விளைவிக்கும் ஒரு ரசாயன கலவையாக மாறுகிறது.
#எண்ணெய் விஷமாக மாறிவிட்டதால் இன்று மக்கள் பலவிதமான நோய்களுக்கு உள்ளாகி சிகிச்சைகள் எடுத்து கொள்வதற்க்காக பெரியதொகைகளை செலவளித்து கொண்டு இருக்கிறார்கள்.நமக்கு வரும் நோய்களுக்கு எல்லாம் சுற்றுசூழல் மாசுப்பட்டு இருப்பது தான் காரணம்என்று சொல்லி நம்மை நாமே ஏமாற்றி கொள்கிறோம். #கடந்த 60-70 ஆண்டுகளில் நோய்கள் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மக்களை வாட்டி வதைத்துக்கொண்டு இருக்கிறது. இதற்க்கானகாரணங்களில் முக்கியமான இடத்தை பிடித்து இருப்பது ரீஃபைண்ட் ஆயில்.
யோசிச்சு பாருங்க இவ்வளவு தீமையான ஒரு பொருளை நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தி, நம் ஆரோக்கியத்தை நாமே விலை கொடுத்து பாழ்படுத்தி கொள்கிறோம்.
அப்போ என்ன எண்ணெய் தான் வாங்குறது?ரீபைண்ட் செய்யாத நல்லெண்ணெய்,கடலை எண்ணெய்,தேங்காய் எண்ணெய் வாங்கி பயன்படுத்தலாம். இதை தானே நம்மதாத்தா பாட்டி பயன்படுத்தினாங்க.ஒரு வேலை நீங்க இப்படி கேட்டா,அய்யய்யோ அதுல நிறைய கொழுப்பு இருக்குனு சொல்லுவாங்களே! அது மட்டும் இல்லாம கொழுப்பு உள்ள எண்ணெய் பயன்படுத்தினா ஹார்ட் அட்டேக், B.P. வரும்,ரொம்ப வெய்ட் போடும்னு சொல்லுவாங்களே! கிராமத்து இளைஞனின் கருத்து : சரிங்க ரீபைண்ட் ஆயில் தானே இப்போ பெரும்பாலும் பயன்படுத்துறோம்.யோசிச்சு பாருங்க உங்க ஊர்ல ஹார்ட்வர்றவங்களோட எண்ணிக்கை குறைஞ்சு இருக்கா இல்ல கூடி இருக்கா. என்ன கொடுமைனா முன்னயாவது 60,70 வயசு ஆனவங்களுக்கு பெரும்பாலும் ஹார்ட்அட்டாக் வந்தது. இப்போ தெல்லாம் 25,30,35 வயசு உள்ளவங்களுக்கே ஹார்ட் அட்டக் வருது.அப்போ ரீபைண்ட் ஆயில் உபயோகிச்ச பிறகு நோயின் அளவு ஜாஸ்தி தானே ஆகியிருக்கு?..ஒரு வேலை நீங்க இப்படி கேட்டா : சரி ரைட்டு வேற எண்ணெய் வாங்கலாம்னா அதாவது,எள்எண்ணெய் (நல்லெண்ணெய்),கடலை எண்ணெய்,தேங்காய் எண்ணெய் வாங்கலாம்னு பார்த்தா விலை பட்ஜெட்ல அடங்காது போல இருக்கே!.நான்: ஒரு லிட்டர் கடலை எண்ணெய் 170 ரூபாய்,ஒரு லிட்டர் ரீபைண்ட் ஆயில் 85 ரூபாய்,அப்போ ரீபைண்ட் ஆயில் வாங்குனா உங்களுக்கு பாதி பணம் அதாவது 85 ரூபாய் மிச்சம். அந்த பணத்தை சேர்த்து வச்சு என்னா செய்விங்க? நான் சொல்லட்டுமா!!! இப்படி மிச்சம் பிடிச்ச பணத்தை பேங்குல போட்டு வச்சு வட்டியும் முதலுமா டாக்டர் கிட்ட குடுபிங்க.ஆரோக்கியத்திர்க்கு கேடு விளைவிக்கும் பொருளை குறைந்த விலையில் கிடைக்குதேன்னு வாங்கி உபயோகபடுத்திட்டு பின்னால் நோய் வந்த பிறகு மிச்சம் பிடிச்ச பணத்தை டாக்டர் கிட்ட குடுத்துட்டு,உங்களையும் கஷ்ட படித்திக்கிட்டு இருக்கறதுக்கு, நல்ல தரமான பொருளை வாங்கி பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழலாமே!!! ஆரோக்கியம் தானே மிக பெரிய செல்வம்..
எண்ணெய் விலையை நாம் நினைத்தால் குறைக்கலாம். அது எப்படி ?
நாம் எந்த பொருளை விரும்புகிறோமோ அதை வியாபாரிகள் தயாரித்து கொடுக்க தயாராக இருக்கிறார்கள். எதை அதிகமாக வாங்குகிறோமோ அதன் தயாரிப்பும் அதிகரிக்கும். தயாரிப்பு அதிகரித்தால் விலை குறையும்.தரமான பொருளை அதிகமாக வாங்கினால் அதன் தயாரிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதன் மூலம் தரமான பொருளை நியாயமான விலையில் வாங்க முடியும். மட்டமான பொருளை விற்கிறார்களே என்று வியாபாரிகளை குறை சொல்லி பயனில்லை.நாம் எதை கேட்கிறோமோ,எதை அதிகம் வாங்குகிறோமோ அதை தானே அவர்கள் விற்ப்பார்கள்.
நீங்கள் விஷம் குடுங்கள் என்று கேட்டால் விஷம் தான் கொடுப்பார்கள்!.அதை விடுத்து அய்யய்யோ விஷத்தை ஏன்வாங்குகிறீர்கள் அதை சாப்பிட்டால் இறந்து விடுவீர்கள் என்று விளக்கம் சொல்லி கொண்டு இருக்க மாட்டார்கள். விஷம் சாப்பிட்டால் இறந்து விடுவீர்கள் என்று தெரிந்து கொள்ளவேண்டியது உங்கள் பொறுப்பு.மேலும் அவர்கள் எதை தயாரிக்கிறார்களோ,அதை ஆஹா ஓஹோ என்று தான்விளம்பரபடுத்துவார்கள். அது அவர்கள் வியாபாரயுக்தி.ரீபைண்ட் ஆயில் தயாரிப்பாளர்கள்ரீபைண்ட் ஆயில், பயன்படுத்தினால் கேன்சர்வராது என்று சொல்லி தான் விற்பார்கள். ஆனால் அது உண்மையா பொய்யா என்று நாம் யோசித்து வாங்கவேண்டும்.நாளைக்கே அந்த நிறுவனம் ரீபைண்ட் ஆயில் தயாரிப்பை நிறுத்திவிட்டு எள்ளெண்ணெய் விற்றால் அப்போது சொல்லுவார்கள் ரீபைண்ட் ஆயில் பயன்படுத்தினால் கேன்சர் வரும் என்று!!!!நம் முன்னோர்கள் அந்த காலத்தில் செக்கில் ஆட்டி எடுத்த தேங்காய் எண்ணெயையும்.,நல்லெண்ணையையும் அப்படியே உபயோகித்தனர்.இந்த எண்ணெய்கள் அடர்த்தியாகவும்.,நிறமாகவும்., மணமாகவும் இருக்கும்.இதற்கு காரணம் அந்த எண்ணெய்களில் உள்ள ஊட்டசத்துக்கள் தான்.இதனால் தான் உடல் ஆரோக்கியத்திற்க்கு தேவையான புரோட்டீன்கள், வைட்டமின்கள்,தாதுப்பொருள்கள், நார்ச்சத்துக்கள் , குளோரோபில்,கால்சியம், மெக்னீசியம்,காப்பர், இரும்பு,பாஸ்பரஸ்,வைட்டமின் " இ " போன்றவை நமக்கு கிடைத்து வந்தன..இந்த தாதுப்பொருட்கள் மூலம் உற்பத்தியாகும் மெழுகு போன்ற பொருள்கள் மூட்டுகளுக்கு சென்று.,எலும்பு தேய்மானத்தை தடுத்தன.#நம் முன்னோர்கள் உடற்பயிற்சி செய்து முடித்ததும் ஒரு கிண்ணம் நிறைய நல்லெண்ணெய் குடிக்கும் வழக்கத்தையும் வைத்து இருந்தனர்.இதை உணவுக்கு மட்டுமின்றி. குளியலுக்கும்,மசாஜ் செய்வதற்க்கும் உபயோகித்த காரணத்தால் அவர்கள் 80 வயது வரை மூட்டு வலியின்றிகால்நடையாகவே சென்று வந்தனர்.அதனால் தான் எல்லாம் அறிந்த நம் முன்னோர்கள் இதை எள் எண்ணெய் என்று சொல்வதற்கு பதிலாக " நல்ல எண்ணெய் "என்று சொன்னார்கள்.வெளிநாட்டில் கூட இதை " Queen of Oil "என்று அழைக்கிறர்கள்.ஆனால் இன்று நாம் உபயோகிக்கும் ரீஃபைண்ட் ஆயிலில் உயிர்சத்துக்கள் எதுவுமே இல்லை என்பது அதிர்ச்சியான உண்மை.புதுசா புதுசா எதை எதையோ கண்டுபிடுச்சு அதை குறைந்த விலையில் விற்று நம்மை சோதனை எலிகளை போல் பயன்படுத்துகிறார்கள். இதன் முடிவு பத்து வருஷம் கழித்து தான் தெரியும்.அப்போ தான் சொல்வார்கள் இதை பயன்படுத்தியதால் தான் இப்படி என்று!அனால் அப்போது தெரிந்து என்ன பயன்.யோசிங்க நீங்க சோதனை மனிதராக இருக்க ஆசைபடுரிங்களா? இல்லை ஏற்கனவே நம்ம முன்னோர்கள் காலம் காலமாக உபயோகபடுத்திய உணவு முறையை பின்பற்றி அவர்கள் போலவே 80,90 வயது வரை ஆரோக்கியமாக வாழஆசை படுறிங்களா?.அட்லீஸ்ட் வாழும் காலம் வரை நோயில்லாமல் வாழ வேண்டும் என்பது தானே அனைவரது விருப்பமும்.எதை வாங்குகிறோம் என்பதில் தெளிவாக இருப்போம்.
நன்றி : சரவணக்குமார் வே

குண்டலினி யோகம்"  (Simplified Kundalini Yoga

"குண்டலினி யோகம்"  (Simplified Kundalini Yoga) :
-------------------------------------------------------------------------

"மாலையிலே ஒருவருக்கு பலவிதமான மன இறுக்கம் (Tension) உண்டாகின்றன.  போய் படுத்துக் கொள்கிறார்.  தூங்கி விடுகிறார்.  காலையில் எழுந்தவுடன் ஒரு பெரிய மாற்றம்.  முதல் நாள் மாலை இருந்த அளவுக்கு மன இருக்கமோ, கவலையோ இல்லை.  மறுபடியும் வரும்;  நேரம் போகப் போக வரும்;  ஆனால் இப்போது இல்லை.  காரணம் என்னவென்றால், ஒரு பகுதி மன இயக்கம் இன்று, சக்தி சேமிக்கப்பட்டது.  அந்தச் சேமிக்கப்பட்ட சக்தியினால் ஓரளவு அமைதி, உடல் நலம் இவைகளெல்லாம் கிடைக்கிறது.  அதே போன்று யோகத்தின் வாயிலாக, மனவளக்கலையின் வாயிலாக "குண்டலினி யோகம்" (Simplified Kundalini Yoga) வாயிலாக,  சிறுகச் சிறுக நமது ஆற்றலை, சேமிப்புத் தன்மையை அதிகரிக்கிறோம்.  ஏனென்றால் உடல், உயிர், மனம் இந்த மூன்றின் இயக்கம் ஒன்றையொன்று தள்ளியே இருக்கிறது.
.

மனம் விரைவாக இயங்குமேயானால், உயிர்ச் சக்தியின் தன்மாற்றம் அதிகமாகிறது. அதனால் உயிர்ச்சக்திக்கு அதிர்வலை அதிகமாகிறது (Vibration of life force is increasing).  அதே நேரத்தில் உடலில் உள்ள எல்லா செல்களும் தூண்டப் பெற்று, செல்களெல்லாம்  இயக்கத்தில் வேகம் பெறுகின்றன.  இப்படி ஒன்றால் ஒன்று உடலில் துன்பம் ஏற்பட்டால், அதனால் உயிர்ச்சக்தி அதிர்வலை அதிகமாகும்.  மனமும் துன்பப்படும்.  அதேபோல, மனம் அமைதி பெற்றதேயானால் உயிர்ச்சக்தி அமைதி பெறுகிறது.  உடல் சக்தியும் அமைதி பெறுகிறது.  இப்படி ஒன்றோடு ஒன்று இணைந்திருப்பதனால், உயிரும் உடலும் சரியாக அமைய வேண்டுமானால், மனதைச் சரியாக வைத்துக் கொள்ள வேண்டும்.  மனதைப் பற்றிய உண்மைகளையெல்லாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.  நல்ல பயிற்சியின் மூலமாக மனதை எப்போதும் அமைதி காக்கத் தெரிந்து கொள்ள வேண்டும்.  அந்தப் பேற்றை பெறுவதற்கு "குண்டலினி யோகப்" (Simplified Kundalini Yoga) பயிற்சி மிக மிக உதவியாக இருக்கும்.  இந்த யோகப் பயிற்சியைப் பெறுவதற்கு முற்காலத்தில் மிக மிக கால தாமதமாகும்.  இப்பொழுது எளிமைப்படுத்தி வழங்கி வருகிறோம்.
.

இப்போது 'குண்டலினியோகம்' (Simplified Kundalini Yoga) கற்றுக் கொள்பவர்களுக்கு ஒரே நிமிடத்தில் பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் என்ற ஐந்து ஆதாரங்களையும் கடந்து, ஜீவ ஸ்தானத்திற்கு வந்து விடுகிறோம்.  அதாவது மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுத்தி இந்த ஐந்து  ஸ்தானங்களையும் கடந்து, ஆக்கினைக்குக் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறோம்.  சரியாக வெற்றி பெறுவதற்கு ஐந்து முதல் ஏழு நாட்கள் ஆகும்.  அந்த ஏழு நாட்களுக்கு உடல் உறவு இல்லாமல் இருந்தால் போதும்.   அதன் பிறகு அதன் ஆற்றல் மீறிவிடுகிறது.  முதலில் உயிரை உணர்ந்தால் தான் உயிருக்கு மூலமான பிரம்மத்தை உணர முடியும்.  உயிர் உணர்வு பெறாமல் பிரம்மத்தை உணர்வது வேதாந்தம்.  உயிர் உணர்வு பெற்று அதற்கு பின் பிரம்மத்தை அறிவது சித்தாந்தம்."
.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

கருமையத்தூய்மை

கருமையத்தூய்மை
வாழ்க்கையை வாழ்வதற்கும் இன்பம், அமைதி, பேரின்பம் ஆகியவற்றை அனுபவிப்பதற்கும், அறிவில் முழுமை பெறுவதற்கும் கருமையத்தை எப்போதும் வளமாகவும், தூய்மையாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

வாழ்த்துவது நம்மை நாமே வாழ்த்துவது,

கேள்வி - அலுவலகத்தில் மற்றும் நிறைய இடங்களில், எங்கு சென்றாலும் இவ்வளவு ஏன் வீட்டில் உள்ளவர்கள் கூட எனக்குத் தடைகளை ஏற்படுத்துபவர்களாகவும், தீங்கு செய்பவர்களாகவுமே இருக்கிறார்கள். நான் என்ன செய்வது ? தியானம் செய்யலாமா ? அப்படி தியானம் செய்யும் பொழுது தீமைகளை விலக்கும் ஏதேனும் மந்திரத்தை உச்சரிக்கலாமா ? அப்படிப்பட்ட மந்திரம் இருந்தால் சொல்லுங்களேன்.

இராம் மனோகர் - இந்நிலையில் நீங்கள் தியானம் செய்ய அமர்ந்தால் அங்கும் உங்களுக்குத் தடை ஏற்படுத்தப்படுவது போலத்தான் தோன்றும். தியான முயற்சியால் அந்த எண்ணம் வலுப் பெறும் பொழுது அத்தகைய சூழல் இயல்பாகவே உருவாகிக் கொண்டேயிருக்கும். இது மனதால் ஏற்படும் பிரச்சனையாகும். நமது வாழ்க்கைச் சூழல்கள் செயலுக்கு வருவதும், வராமல் போவதும் நம் கையில்தான் இருக்கிறது. எல்லாமே நமக்கு எதிராக செயல்படுகிறது என்றால், நமது, எண்ணமோ, சொல்லோ, செயலோதான் அதற்கு காரணமாக இருக்கும். எனவே நம்மை நாம் தற்சோதனை செய்து நம் எண்ணங்களை, சொற்களை, செயல்களை சீரமைத்துக் கொள்வது மட்டுமே ஒரே உபாயமாகும். சிலர் ஜோதிடர்களிடம் போய் கேட்பார்கள். அவர் இன்ன  இன்ன கோவில்களுக்குச் சென்று வழிபாடு செய்யுங்கள் தடை விலகும் என்று சொல்வார்கள். அவர்களும் ஜோதிடர் சொன்ன அனைத்து கோவில்களுக்கும் சென்று வழிபாடு செய்துவிட்டு நம்பிக்கையோடு வருவார்கள். அந்த நம்பிக்கையானது அவர்களது வாழ்க்கைச் சூழலை மாற்றி விடுவதோடு, அவர்களது எண்ணத்திலும், சொல்லிலும், செயலிலும் கூட மாற்றத்தை ஏற்படுத்தி விடும். ஆனால், இது அனைவருக்கும் பலன் தராது. தன் நிலை குறித்த தெளிவு, ஆழமான நம்பிக்கை, எண்ணங்களை, சொற்களை, செயல்களை மறு சீரமைத்துக் கொள்ளும் நோக்கம் இவற்றைப் பொருத்தான் பலன் அமையும்.

என் குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் இதற்கு ஒரு எளிய வழிமுறையை சொல்லித் தருகிறார். அது என்னவென்றால் வாழ்த்துவது. நம்மை நாமே வாழ்த்துவது, அனைவரையும் வாழ்த்துவது. இடைவிடாமல் காண்போரையெல்லாம் வாழ்த்துவது. அதிலும் குறிப்பாக எதிரிகளை, நமக்கு தீங்கு செய்பவர்களை கூட வாழ்த்துவது மிகமிக அவசியம். பொதுவாக நாம் ஒருவரை வாழ்த்தும் பொழுது நமது மனமானது அறிவு தன் இயக்கதின் நுண்ணிய நிலையைப் பெறுகிறது. நம்மை நாமே வாழ்த்திக் கொள்வதால் மனதில் எழும் அலையானது, நாம் பிறரை வாழ்த்தும் பொழுது, அவர்களுக்கு உதவியாக இருக்கிறது. இடைவிடாது வாழ்த்திக் கொண்டேயிருப்பதால் நம் மனதில் அறிவின் நுண்ணிய இயக்க நிலை வலுப்பெற்று விடுவதால் இறைநிலை உணர்வு ஏற்படுகிறது. இதனால் இறைநிலையில் கலந்திருக்கும் நிலை உருவாகிறது. இந்நிலையில் வாழ்த்து அழுத்தம் பெறப் பெற பலன் அதிகரிக்கும். ஒரு முறை வாழ்த்தினாலே ஆயிரம் தடவை வாழ்த்தியதற்கான பலனைப் பெற்றுத் தரும். எனவே ஓய்வாக இருக்கும் பொழுதெல்லாம் நம்மை நாமே வாழ்த்திக் கொள்வதோடு, நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள், நமக்குத் தொல்லை தருபவர்கள் அனைவரையும் வாழ்த்திக் கொண்டேயிருக்க வேண்டும் என்கிறார்.

மேலும், தவத்தில் மந்திரங்களை உச்சரிப்பதால் ஏற்படும் பலனை விட, வாழ்த்துவதால் ஏற்படும் பலன் துரிதமாகச் செயல்படும் என்கிறார். நமக்கு எத்தனை நண்பர்கள் இருக்கிறார்களோ, அவர்களை ஒவ்வொருவராக நூறு முறை வாழ்த்த வேண்டும். தீமை செய்பவர்களை முதலில் வாழ்த்த வேண்டும். உறவினர்கள், நண்பர்களை அதற்குப் பிறகு வாழ்த்தலாம். அதற்குப் பிறகு பார்த்தால் வாழ்த்துவதற்கு நேரமே இல்லையே என்ற நிலை உருவாகி விடும். நாம் வாழ்த்திக் கொண்டேயிருக்க இருக்க வாழ்த்தப்படுபவர்களுக்கும் நமக்குமிடையே உயிர்க் கலப்பு வலுப்பெற்றுக் கொண்டே வரும். இதனால் நமக்கு தீங்கு செய்ய நினைப்பவர்கள் மனதில் திருப்பம் ஏற்பட்டு விடும். இவருக்குப் போய் தீங்கு நினைத்தோமே, இவருக்குத் தடைகளை ஏற்படுத்தினோமே என்ற எண்ணம் அவர்கள் மனதில் உருவாகும். இந்த எண்ணம் அழுத்தம் பெறும் பொழுது அவர்கள் நிலை மற்றும் குணத்தை மாற்றி நன்மை செய்யக் கூடியவர்களாக மாற்றி விடும். அதாவது நண்பர்களை வாழ்த்துவதினால் அவர்களுக்கு உணர்வுப்பூர்வமாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். பொல்லாதவர்களை வாழ்த்துவதினால் தீமையை விலக்கிக் கொள்வதோடு, அவர்களால் நன்மையையும் அடைகிறோம். இது மிகவும் எளிய உபாயமாகும். இது என்னால் இயலாது என்று உங்களுக்குத் தோன்றுமானால், ஒரு சிறந்த மனதத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெறுவது மட்டுமே வழி. வேறு வழியேதுமில்லை.

Sunday, January 31, 2016

புத்தர் பேசத் தொடங்கினார்

🌼ஒரு ஊரில் மக்கள் மத்தியில் புத்தர் பேசத் தொடங்கினார்.

🌼ஒரு குரல் அவர் பேசுவதை இடைமறித்தது.
தொடர்ந்து புத்தரை நோக்கி,
“புத்தரே நாங்கள் உங்களைப் போன்ற எத்தனையோ ஞானிகளைச் சந்தித்தும், அவர்களது பிரசங்கங்களை கேட்டும் விட்டோம்.

🌼ஆனால் எங்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படவில்லை.
இப்போதும் எங்களுக்கு பிரச்சனை இருக்கிறது.

🌼எங்களுக்கு மட்டுமல்ல இவ்வுலகில் உள்ள அனைவருக்குமே ஏதாவது ஒரு பிரச்சனை இருந்து கொண்டே தான் இருக்கிறது.

🌼அதனால் எல்லோருடைய சிக்கலும் தீரும்படியாக, அனைத்து மனிதர்களுடைய வாழ்விலும் பிரகாசம் தெரியும்படி மந்திரங்களைச் சொல்லித் தாருங்கள்.

🌼தேவையற்ற பிரசங்கம் வேண்டாம்.

🌼நாங்கள் மனப்பாடம் செய்து எல்லோருக்கும் சொல்லத்தக்க அளவில் சிறியதாக இருக்க வேண்டும். நாங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படியான sqq சொல்லுங்கள்.

🌼உங்களைக் குருவாக ஏற்றுக்கொள்கிறோம்”
என்றது அக்குரல்.

🌼மௌனமாக சிரித்த புத்தர்,

“இதுவும் கடந்து போகும்”

என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்.

🌼அந்த கணமே அக்கூட்டம் ஆடாமல் அசையாமல் அப்படியே அமர்ந்தது. புத்தரின் மந்திரத்தை மனசுக்ள் அசைபோட்டது.

🌼நன்றாகப் படித்திருந்தும் பணம் சம்பாதிக்க முடியாமல் தாழ்வு மனப்பான்மையால் உழன்று கொண்டிருந்த இளைஞனுக்கு தன்னம்பிக்கையைத் தந்தது அந்த வார்த்தை.

🌼“இதுவும் கடந்து போகும்” 🌼என்ற வார்த்தையால் என்னுடைய நிலை கண்டிப்பாக மாறிவிடும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.

🌼இம்மந்திரத்தைத் தினந்தோறும் உச்சரித்து இன்னமும் எனக்கு வேண்டிய பலம் பெற்றுக்கொள்வேன்” என்று உரக்கச் சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றான்.

🌼“இம்மந்திரத்தால் என்னுடைய நீண்ட கால நோய் கண்டிப்பாகத் தீர்ந்துவிடும். இனிமேலும் எனக்கு இந்நிலை தொடராது. இது மிகவும் நல்ல மந்திரம் என்று கூறிச் சென்றான்” நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தவன்.

🌼“இந்த பணம் தொடர்ந்து என்னுடன் இருக்காது என்பதைப் புத்தர் எனக்கு இம்மந்திரத்தின் மூலம் புரிய வைத்துவிட்டார். இனி இந்தப் பணத்தை என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்துகொண்டேன்” என்று கூறிச் சென்றான் பணக்காரனாக இருந்தவன்.

🌼அடுத்து இருந்த அழகான பெண், “என்னுடைய அழகு எப்போதும் என்னுடன் வராது என்பதை இம்மந்திரம் எனக்குப் புரிய வைத்துவிட்டது” என்று கிளம்பினாள்.

🌼கடைசியாக, தினந்தோறும் உழைத்து ஓடாய்த் தேய்ந்த பெண்மணி கிளம்பும் போது, “இத்தனை நாளும் உழைத்துக் கொண்டிருக்கிறேன். மரணம் வரையிலும் உழைக்கத்தான் வேண்டியிருக்கும் என நினைத்துக் கொண்டிருந்தேன்.

🌼ஆனால் இந்த மந்திரத்தின் மூலம் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. என்னுடைய நிலையும் மாறிவிடும்” என்று நம்பிக்கையுடன் சென்றார்..

🌼ஆம்,நண்பர்களே.,
தோல்விகள் தழுவும்போது

🌼 “இதுவும் கடந்து போகும்”🌼
 
என்பதை நினைவில் கொள்ளுங்கள்.சோர்ந்துவிடv.  மாட்டீர்கள்.

🌼நல்ல மனிதர்களும்,நண்பர்களும் உங்கள் வாழ்வில் வரும்போது ‘இதுவும் கடந்து போகும்” என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

🌼அவர்கள் இருக்கும்போது அவர்களை கொளரவிப்பீர்கள்..
அவர்கள் விலகும்போது பாதிப்படைய மாட்டீர்கள்.

🌼எத்தனையோ மனிதர்களை மாற்றிய இந்த உன்னத சொல்
உங்கள் வாழ்விலும் இனி ஒளி ஏற்றும்.

🌼“இதுவும் கடந்து போகும்” என்பதை உறுதியுடன் நம்புங்கள்.

🌼கண்டிப்பாக மாறிவிடும். தோல்வியைச் சந்திப்பவர்கள்,
நோயில் இருப்பவர்கள், சிக்கலில் மாட்டியவர்கள்,
திசை தெரியாமல் இருப்பவர்கள் ,

🌼அனைவரும் தினமும் இதை மனதில் சொல்லிக் கொண்டே இருங்கள்.🌼

🌼வெற்றி நிச்சயம்…🌼