*யார் இந்த அத்திவரதர்?* *இவரது அவதாரம் எப்படி நிகழ்ந்தது?* *ஏன் இவர் குளத்தில் மூழ்கி உள்ளார்?*
*வாருங்கள்...* *தலபுராணத்தைப் பார்ப்போம்.*
மூலவர் திருநாமம் வரதராஜப் பெருமாள். இவருக்கு தேவராஜப் பெருமாள் என்றும் பெயருண்டு.
இங்கு ஆதிகாலத்தில் மூலவராக இருந்தவர் அத்தி வரதர் தான். அத்தி மரத்தாலான இச்சிலையை பிரதிஷ்டை செய்தவர் பிரம்மா. ஒருமுறை படைப்புத் தொழிலை மேற்கொள்ள தயாரானார் பிரம்மா. அதற்காக அஸ்வமேத யாகம் நடத்த காஞ்சிபுரம் வந்தார். இத்தலத்தில் எந்த செயலைச் செய்தாலும், ஆயிரம் மடங்கு பலன் கிடைக்கும். அதாவது ஒருவருக்கு அன்னதானம் செய்தால் ஆயிரம் பேருக்கு செய்த புண்ணியம் கிடைக்கும். ஒரு பாவம் செய்தாலும், அதுவும் ஆயிரம் மடங்காகி தண்டனைக்கு ஆளாக்கும்.
ஒருவர் யாகம் நடத்தும் போது அவரது மனைவியும் இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் பிரம்மா தன் மூத்த மனைவியான சரஸ்வதியுடன் இங்கு வரவில்லை. முறையாக அழைக்காததால் யாகத்தில் பங்கேற்க சரஸ்வதிக்கு விருப்பமில்லை. பிரம்மாவின் மற்ற மனைவியரான காயத்ரி, சாவித்ரியின் துணையுடன் யாகப்பணிகள் நடந்தன. இதையறிந்த சரஸ்வதி, கோபம் கொண்டு யாகத்தை தடுக்க தீர்மானித்தாள்.
வேகவதி என்னும் நதியாக மாறி ஆர்ப்பரித்தாள். யாகசாலையை இன்னும் சில விநாடிகளில் மூழ்கடிக்கும் நிலை உருவானது. இந்நிலையில் மகாவிஷ்ணு, யாகத்தைப் பாதுகாக்க நதி பாயும் வழியில் சயனக்கோலத்தில் படுத்துக் கொண்டார்.
அதிர்ந்த சரஸ்வதியும் தன் பாதையை மாற்றிக் கொண்டு ஓடினாள். மகாவிஷ்ணுவின் துணையால் பிரம்மாவின் யாகம் நிறைவேறியது. அவர் கேட்ட வரங்களையும் வழங்கினார் மகாவிஷ்ணு. வரங்களை வாரி வழங்கியதால் 'வரதராஜப் பெருமாள்' என பெயர் பெற்றார்.
நன்றி தெரிவிக்கும் விதத்தில் வரதராஜர் திருக்கோலத்தை அத்தி மரத்தில் சிலையாக வடித்தார் பிரம்மா.
தனக்கு வரம் கிடைத்தது போல, மற்றவர்களும் வரம் பெற வேண்டும் என சிலையை காஞ்சிபுரத்தில் பிரதிஷ்டை செய்தார். இந்த நிகழ்ச்சி முதல் யுகமான கிருதயுகத்தில் நிகழ்ந்தது. இதன் பின் தேவலோக யானையான கஜேந்திரன், தேவகுருவான பிருஹஸ்பதி, ஆதிசேஷன் போன்றவர்கள் இங்கு வழிபட்டு பலன் அடைந்தனர்.
மீண்டும் ஒருநாள் இங்கு தரிசிக்க வந்த பிரம்மா யாகம் நடத்தினார். அப்போது ஏற்பட்ட தீப்பொறியானது, அத்தி வரதர் மீது படவே, சிலையில் சிதைவு ஏற்பட்டது. பதறிய பிரம்மா ' இதென்ன சோதனை? குறை நேர்ந்த சிலையை எப்படி கருவறையில் பூஜிப்பது?' என வருந்தினார்.
'என்னுடைய சிலையை (அத்தி வரதர்) அனந்த சரஸ் என்னும் குளத்தில் வைத்து விடு. யாகத் தீயால் ஏற்பட்ட வெப்பம் தணிக்க நிரந்தரமாக தண்ணீரில் தங்கியிருப்பேன்' என்றார் வரதர். அதன்படி வெள்ளிப் பெட்டி செய்து, அதற்குள் அத்தி வரதரை வைத்து, குளத்திற்குள் வைத்து விட்டனர். இக்குளம் எப்போதும் வற்றியதில்லை.
மூலவர் அத்திவரதர் குளத்தில் மூழ்கி விட்டாரே... வழிபாட்டுக்கு சிலை வேண்டாமா? அதற்கும் வரதரே உத்தரவிட்டார். என்ன தெரியுமா? 'பழைய சீவரம் (காஞ்சிபுரம் - செங்கல்பட்டு தடத்தில் உள்ள ஊர்) கோயிலில் உள்ள தேவராஜப் பெருமாளை இங்கு பிரதிஷ்டை செய்' என்று பிரம்மாவுக்கு கட்டளையிட்டார்.
அதன்படி பழைய சீவரத்திலுள்ள தேவராஜப்பெருமாள் இங்கு எழுந்தருளினார். பிற்காலத்தில் இவரே 'வரதராஜப்பெருமாள்' என பெயர் பெற்றார். அப்போது ''கலியுகத்தில் மக்களுக்கு வரம் அளிப்பதற்காக 40 ஆண்டுக்கு ஒருமுறை குளத்தை விட்டு வெளியே வந்து 48 நாட்களுக்கு தரிசனம் தருவேன்'' என அசரீரியாக வரதர் வாக்களித்தார்.
அதன்படி ஜூலை 1 முதல் அத்தி வரதர் வைபவம் நடக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை விட்டால் 2059 வரை காத்திருக்க வேண்டும். அத்தி வரதரை தரிசித்து அளவில்லா வரங்களைப் பெறுவோம்
💚💚💚💚 ஓம் நமோ 💚💚💚💚💚💚💚நாராயணாய நமஹ.💚💚💚
Tuesday, July 9, 2019
Atthi varadhar
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment