எல்லாச் செல்வங்களையும் நிரந்தரமாக எவருக்கும் இறைவன் வழங்கியதில்லை. ஏற்றம் என்பது இறைவன் வழங்கும் பரிசு. இறக்கம் என்பது அவன் செய்யும் சோதனை. நீ நினைப்பது எல்லாமே நடந்து விட்டால், தெய்வத்தை நம்பவேண்டாம். எப்போது நீ போடும் திட்டம் தோல்வியுறுகிறதோ, அப்போது உனக்கு மேலானவன் அதை நடத்துகிறான் என்று பொருள்.
உனது வாழ்க்கை பூஜ்ஜியத்திலே ஆரம்ப மாகிறது. அதற்கு முன் பக்கம் நம்பர் விழுந்தால் இறைவனின் பரிசு; பின்பக்கம் விழுந்தால் அவனுக்கு சோதனை. மேடும் பள்ளமுமாக வாழ்க்கை மாறி மாறி வந்தால் உனக்குப் பெரிய வீழ்ச்சி இல்லை. ஒரேயடியாக உச்சிக்கு நீ போய் விட்டால் அடுத்துப் பயங்கரமான சரிவு காத்திருகுகிறது. வீழ்ச்சியில் கலக்கமோ, எழுச்சியில் மயக்கமோ கொள்ளாதே!
“அடுத்த பாதை என்ன, பயணம் என்ன என்பது உனக்குத் தெரியாது; எல்லாம் தெய்வத்தின் செயல் என்றார்கள் நம் முன்னோர்கள். துன்பத்தைச் சோதனை என்று ஏற்றுக் கொண்டு விட்டால், உனக்கேன் வேதனை வரப்போகிறது? அந்தச் சோதனையிலிருந்து உன்னை விடுவிக்கும்படி நீ இறைவனை வேண்டிக் கொள்; காலம் கடந்தாவது அது நடந்து விடும்.
தர்மம் என்றும், சத்தியம் என்றும், நேர்மை என்றும், நியாயம் என்றும் சொல்லி வைத்த நமது மூதாதையர்கள் முட்டாள்களல்ல.
கஷ்டத்திலும் நேர்மையாக இரு.
நீ ஏமாற்றப் பட்டாலும் பிறரை ஏமாற்றாதே.
உன் வாழ்நாளிலேயே அதன் பலனைக் காண்பாய்.
தெய்வ நம்பிக்கை உன்னைக் கைவிடாது.
- ஞானக் கவிஞர் கண்ணதாசன்
No comments:
Post a Comment