Wednesday, November 1, 2017

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள் "

"

பாகம்-3

வர்மம் என்பது
அருவம் ,ஆக்கிராணம்,ஆவி,உயிர்,ஒளி,கந்தம்,கலை,காலம்,காற்று,சரம்,சர்வாத்மா வாழும் வீடு,சீவன்,சுவாசம்,சைவம்,பரசிவம்,பரம்,பிராணன்,புரவி,மாய்கை,மூச்சு,யோகம்,வாசி,வாயு என்னும் இருபத்து மூன்று பொருள்களில் மாற்றுப் பெயர்களைப் பெறுகிறது .இதனை

சரமென்றும் உயிரென்றும் வாயுவென்றும்
சர்வாத்மா வசித்ததொரு கலையதென்றும்
புரவியென்றுங் காலமென்றும் பிராணனென்றும்
பிரகாச மானகாற்று சீவனென்றும்
பரமென்றுஞ் சுவாசமென்றும் மூச்சதென்றும்
பரசிவமாக் கிராணகெந்த மாவியென்றும்
பிரசித்த சைவமென்றும் வர்மமென்றும்
பிசகாத வரூபியென்றுஞ் சரத்தின் பேரே

வர்மமென்றும் வாசியென்றும் புரவியென்றும்
காற்றென்றும் உயிரென்றும் மாய்கையென்றும்
பிராணனென்றுங் கலையென்றுஞ் சுவாசமென்றும்
சரமென்றும் யோகமென்றும் பரமம் என்றும்
சிவமென்றும் இவையெல்லாஞ் சொல்லலாகும்

என்னும் பாடல்கள் உணர்த்துகின்றன, இவற்றுள் வர்மங்களின்  பெயர்களைக் கூறும் சுவடிகள் அனைத்தும் வர்மம்,காலம் என்னும் இரண்டு சொற்களைமட்டும் ஆளுகின்றன, அடைப்புவர்மம்,அணிவர்மம்,கதிர்வர்மம், கதிர்காமவர்மம்,என்பன போன்று பெரும்பான்மையானவை வர்மம் என்றே பெயர்பெற்றுள்ளன,
அமிர்தகாலம்,அன்னகாலம்,உறக்ககாலம், உறுமிக்காலம் என்பன போன்று சில வர்மங்கள் காலம் என்ற சொல்லால் பெயர்பெற்றுள்ளன.

எட்டான கலையுடனே பிராணன் நாலும்
ஏகினதால் ஈராறு கலையா மென்ன

மனம்,அகங்காரம்,புத்தி,வித்தை,வாக்கு,சத்தி, கன்மம்,ஞானம் என்னும் எண்வகைக் கலைகளும் காற்று, சீவன், சுவாசம் ,பெலன் என்னும் நால்வகைப் பிராணன்களும் ஒடுங்குமாறு ஏற்படும் கலைகள் பன்னிரண்டாகும் எனச்சுட்டுவது இப்பாடலடி ,இதில் ஈராறு கலை என்றது பன்னிரண்டு படுவர்மங்களையாகும்,

உள்ளபடி நூற்றெட்டுத் தலங்களாகும்
உணர்வாகும் அத்தலங்கள் உயிருமாகும்
உள்ளுணர்ந்த அத்தலங்கள் வாசியேற

இவ்வடிகளில் உள்ள உயிர்,வாசி என்னும் சொற்களும் வர்மத்தைக் குறிப்பனவாகும் வர்ம இடம் என்று பொருள் தரும் தலம் என்பதும் வர்மத்தைக் குறிக்கிறது ,இது மாற்று பெயர்ப்பட்டியலில் இடம் பெறாதது ,இதே போல சூட்சம் ,அடவு,ஈடு என்பனவும் ஆளப்பெற்றுள்ளன,

சூட்சாதி சூட்சுமதைக் கண்டு நீயும்
தொகையான விபரமெல்லாம் ஆய்ந்து பாரு

இயம்பினார் இன்னமொரு அடவுகேளு

விதவிதமாய் அகத்தீடும் மாறிப்போகும்

என்னும் அடிகளில் முறையே சூட்சம்,அடவு,ஈடு என்னும் சொற்கள் வர்மத்தைக் குறித்து வந்தவையாகும்,மிக நுட்பமாக அறியக்கூடிய ஒன்று என்பதனால் வர்மம் சூட்சம் எனப்பட்டது,அடக்கம் என்றும் இதைக்குறிப்பர் ,தற்காப்புக்குரிய கவசம் ஈடு எனப்படும் ,வர்மக்கலை தற்காப்புக்குரிய கவசமாகப் பயன்படுதலின் பொருட்டு ஈடு எனப்பட்டது.

-தொடரும்-

நன்றி
தலைமை வர்மக்கலை ஆசான்
எஸ்.கோபாலகிருஷ்ணன்
கோவை
9894285755.
www.aadhisakthivarmakalai.com

No comments:

Post a Comment