சோற்றுக் கற்றாழையின் சாற்றையோ அல்லது உள்ளிருக்கும் கூழ்ப்பகுதியையோ தினமும் அளவோடு சாப்பிடுவதால் கண் பார்வை தெளிவு பெறும்.
2. சோற்றுக் கற்றாழை உள்ளுக்குச் சாப்பிடுவதாலும் மேலுக்கு உபயோகப்படுத்துவதாலும் பெண்கள் மற்றும் ஆண்களின் சிறுநீர்த் தாரையில் உள்ள எரிச்சல், புண் குணமாகும்.
3. சோற்றுக் கற்றாழையை ஓரிரு சாக்லேட் அளவு வில்லைகளாக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் உண்ட உணவு குடலில் தங்கி நஞ்சாகி நமக்குத் துன்பம் தரும் நோய்களைத் துடைக்கும் வகையில் குடலுக்கு பாதிப்பின்றி தேங்கிய நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இதனால் வயிற்றிலுள்ள வாயு வெளியேற்றப்படுவதோடு மன இறுக்கமும் (ஸ்ட்ரெஸ்) தணிந்து ஆரோக்கியம் கிடைக்கின்றது.
4. சோற்றுக் கற்றாழையின் இளமடலை தோல் சீவி சோற்றை சுத்திகரித்து உடன் சீரகம், கற்கண்டு, சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து சாப்பிட குருதியும் சீதமும் கலந்த வயிற்றுப்போக்கு குணமாகும்.
5. 100கிராம் கற்றாழைச் சோற்றை எடுத்து கொண்டு அத்தோடு 10கிராம் ஊறவைத்த வெந்தயத்தையும் சிறிதாக அறிந்த ஒரு வெங்காயத்தையும் சேர்த்து அரைத்து 350கிராம் விளக்கெண்ணெயில் இட்டு பதமாகக் காய்ச்சி வடித்து பத்திரப் படுத்திக் கொண்டு அந்தி, சந்தி இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வர உடல் உஷ்ணம் தணிந்து உடல் பெருகும், அழகான தோற்றம் பெருகும்.
6. சோற்றுக் கற்றாழை மடலை நன்கு முற்றியதாகத் தேர்ந்தெடுத்து இரண்டாகப் பிளந்து அதன் இடையே ஒரு ஸ்பூன் வெந்தயத்தை திணித்து கற்றாழையின் மடல்கள் இருபகுதியும் ஒன்றாக சேரும் வண்ணம் நூலால் இறுகக் கட்டி இரவு முழுவதும் வைத் திருந்து மறுநாள் காலையில் எடுத்துப் பார்க்கையில் வெந்தயம் நன்கு முளை விட்டு இருக்கும். அந்த வெந்தயத்தை மட்டும் எடுத்து உள் ளுக்கு சாப்பிட்டு வர தீராத வயிற்று வலி, வாய் வேக்காடு, வயிற்றுப்புண், சிறுநீர்த் தாரைப்புண் ஆகியன குணமாகும்.
7. கற்றாழைச் சோற்றை மோரில் கலந்து அன்றாடம் குடித்து வர உடல் சூட்டினால் ஏற்படும் முகப்பருக்கள், கட்டிகள், வெயிலில் அலைவதால் ஏற்படும் தோலின் கருமை மற்றும் மேல் தோலில் ஏற்படும் கருந்திட்டுக்கள் குணமாகும்.
8. சோற்றுக் கற்றாழையின் வேர்களை சேகரித்து சிறுதுண்டுகளாக வெட்டி சுத்தம் செய்து பால்ஆவியில் வைத்து வேகவைத்து எடுத்து வெயிலில் இட்டு உலர்த்தி நன்றாக பொடித்து வைத்துக் கொண்டு தினம் இரவு படுக்க போகுமுன் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பாலில் கலந்து சாப்பிட்டு வர ஆண்மை மிகும். விந்துக்களின் எண்ணிக்கையும் பெருகும்.
9.. சோற்றுக் கற்றாழைச் சோற்றை சுத்தம் செய்து 10 முதல் 15 கிராம் அளவு எடுத்து நீராகாரத்துடன் (பழையது நீர்) சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர சிறுநீரில் ரத்தம் போவது குணமாகும். மூத்திரக்கிரிச்சாம் என்னும் சிறுநீர்த்தாரை எரிச்சல் தணியும்.
10. சுத்திகரித்த கற்றாழைச் சோறு ஒருகப் அளவு எடுத்து இதனோடு 5 சிறு வெங்காயத்தைப் பொடித்து நெய் விட்டு சேர்த்து வதக்கிச் சேர்த்து சுடுக்காய் கொட்டை நீக்கியபின் மூன்று கடுக்காயின் தோலைப் பொடித்துச் சேர்த்து ஒன்று கலந்து சிறிதளவு நீர்விட்டு ஒரு பாத்திரத்தில் வைத்து மூடிவைத் திறந்து அரைமணி நேரம் கழித்துப் பார்க்க அனைத்துப் பொருட்களின் சாரமும் ஒன்றாய்க் கலந்து வடிந்து தெளிவாய் இருக்கும். இதை உள்ளுக்குச் சாப்பிட சில மணித் துளிகளில் சிறுநீர்கட்டு தளர்ந்து தாராளமாக சிறுநீர் வெளியேறும்.
11. சோற்றுக் கற்றாழைச் சாறை தினமும் 2 அவுனஸ் உள்ளுக்கு கொடுப்பதால் இதய ரத்த நாளங்களில் கொழுப்புச்சத்து படிவதால், ஏற்படும் இதய நோய்கள் அச்சம் தரும் உயிர் போக்கி நோய்களைத் தணிக்கிறது.
12. சோற்றுக் கற்றாழையில் உள்ள ஹார்போஹைட்ரேட்டு மெட்டபாலிசம் சர்க்கரை நோய்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும். இது ரத்தத்தில் உள்ள உணவுக்குமுன் ஆன சர்க்கரை அளவையும், உணவுக்கு பின் ஆன சர்க்கரையின் அளவையும் குறைக்க உதவுகிறது.
13. இதயத்துக்கு போதிய பிராணவாயு கிடைக்க வழிசெய்கிறது. பிராணவாயு சரியான அளவு இதயத்துக்கு கிடைக்காத போது கடும் நெஞ்சுவலி உண்டாகிறது. சோற்றுக் கற்றாழைச் சாறு இப்படி மாரடைப்பு வருவதைத் தடுக்கிறது.
14. சோற்றுக் கற்றாழையில் உள்ள வேதிப் பொருட்கள் பேகொசைட்டோஸிஸ் மற்றும் ஆண்டிபாடீஸ் என்னும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தாண்டி ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது.
http://vijaytamil.net/
Saturday, June 3, 2017
அனைத்து நோய்களுக்கும் தீர்வு தரும் சோற்று கற்றாழை !!!
உடலுக்கு வலிவு தரும் சூப்கள்!
“பழங்கள், காய்கறிகள் நிறைய எடுத்துக்கோங்க… ஹெவியா சாப்பிடாதீங்க, லைட்டா சாப்பிடுங்க” எந்த நோய்க்கும் டாக்டர்களின் அட்வைஸ் இது.
”அந்த காலத்துல நிறைய உடல் உழைப்பு இருந்தது. வெரைட்டியா உக்காந்து சாப்பிட்டோம். இப்ப எல்லாரும் உட்கார்ந்த இடத்திலேயே உடல் உழைப்பே இல்லாமல் வேலை செய்றோம். இப்பவும் நிறைய சாப்பிட்டா எப்படி? மூத்த தலைமுறையின் கேள்வி இது.
ஆரோக்கியமாக சாப்பிட வேண்டும். அது மிதமானிதாகவும், எடை கூட்டாததாகவும், எளிதில் செய்யக்கூடியதாகவும் இருக்க வேண்டும். அப்படியெனில் என்ன சாப்பிடுவது?
இந்த அத்தனை கேள்விகளுக்குமான விடைதான் இந்த இணைப்பிதழ். வயது வித்தியாசமின்றி அனைவரும் அருந்தக்கூடிய எளிதான சூப்களின் செய்முறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
சூப்பின் சிறப்புகள் என்னென்ன?
காய்கறித் தோல்களில் தாது உப்புகள், வைட்டமின்கள் மிகுந்து இருப்பதால், அவற்றைக் குப்பையில் தூக்கி எறியாமல் சூப் தயாரித்து சாப்பிடலாம். மூலிகைகள், காய்கறிகள், கீரை வகைகள் என விதவிதமான சூப்கள் தயாரிக்கலாம். சூப் வகைகளை செய்வதும் சுலபம், பலனும் அபாரம். ஒரு வேளைக்கான உணவின் தேவையை ஒரு கப் சூப் அருந்துவதன் மூலமே பெற முடியும்’ என்கிறார் இயற்கை மருத்துவர் இரத்தின சக்திவேல்.
ஆரோக்கியத்தை விரும்புபவர்களுக்கு மூலிகை சூப், குழந்தைகளுக்குப் பிடித்த சத்தான கார்ன் சூப் என அனைவரும் விரும்பிச் சாப்பிடக்கூடிய சூப் வகைகளைச் செய்து காட்டு்கிறார் சமையல்கலை நிபுணர் கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார்.
வாங்க… ருசிக்கலாம்!
பொதுவாக, சூப் பசியைத் தூண்டக்கூடியது. உணவு உண்பதற்கு அரை மணி நேரம் முன்பு அருந்த வேண்டும். காபி, டீக்கு பதிலாக தானிய சூப் வகைகளைக் குடிக்கலாம். சிறுநீரகக் கோளாறு, அல்சர் பிரச்னை உள்ளவர்கள் மசாலா சேர்ந்த சூப்களை அருந்த வேண்டாம். மற்றபடி காய்கறி, கீரை, மூலிகை சூப்களை சாப்பிடலாம். மூலப் பிரச்னை இருப்பவர்கள், இதய நோயாளிகள், உடல் எடை குறைக்க நினைப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள் சூப் வகைகளை தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், உப்பு, வெண்ணெய் போன்றவற்றை மிகவும் குறைவாக சேர்த்துக்கொள்ள வேண்டும். எடை அதிகரிக்க நினைப்பவர்கள் மட்டும் சூப் வகைகளைக் குறைவாக சாப்பிடலாம்.
பொதுவாக சூப் தயாரிக்கும் முறை:
எந்த சூப் தயாரிக்க வேண்டுமோ, அந்த காய்கறி 150 கிராம், கீரை எனில், 100 கிராம். மூலிகை எனில், 50 கிராம் எடுத்து நன்றாக சுத்தம் செய்து நறுக்கி, (ஒரு நபருக்கு) 250 மி.லி தண்ணீரில் போட்டுக் கொதிக்கவைக்க வேண்டும். மூலிகைப் பொடியாக இருக்கும்பட்சத்தில் 10 கிராம் முதல் 20 கிராம் வரை பயன்படுத்தலாம்.
இதில் சிறிது தக்காளி, வெங்காயம், பீன்ஸ், காரட், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, மிளகுத்தூள், சீரகத்தூள் எல்லாமும் 50 கிராம் வருமாறு சேர்த்து பசுமை மாறாமல் சூடுபண்ணி, மசித்து வடிகட்டி அருந்தலாம். தேவைப்பட்டால், இந்துப்பு அல்லது எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.
மூலிகை மற்றும் கீரை சூப் வகைகள்
மிளகு சூப்
தேவையானவை: மைசூர் பருப்பு 100 கிராம், வெங்காயம் 1, பச்சைமிளகாய் 2, மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன், சீரகம், மல்லித்தூள் தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் சிட்டிகை, கறிவேப்பிலை சிறிதளவு, கொத்தமல்லி சிறிதளவு, ஆப்பிள் 1, உப்பு தேவையான அளவு, வெண்ணெய் ஒரு டீஸ்பூன்.
செய்முறை: பருப்பை வேகவைத்துக்கொள்ளவும். கடாயில் வெண்ணெயைப் போட்டு, நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, மஞ்சள்தூள், மிளகு, சீரகம், மல்லித்தூள் சேர்த்து வதக்கவும். வேகவைத்த பருப்பு சேர்த்து 4 டம்ளர் தண்ணீர் விட்டு உப்பு சேர்க்கவும். கொதித்து வரும் போது நறுக்கிய ஆப்பிள் துண்டுகளை சேர்த்து வேக விடவும். நன்றாக மசிந்து வரும்போது, கொத்தமல்லித் தழை சேர்த்து, இறக்கிப் பரிமாறவும். விருப்பப்பட்டால், க்ரீம் சேர்க்கலாம்.
பலன்கள்: தினமும் இரண்டு மிளகை மென்று தின்னாலே… இதய நோய் நெருங்காது. பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம்’ என்பார்கள். மிளகில் வைட்டமின் ‘சி’ சத்து நிறைந்துள்ளதால் ஆன்டிஆக்சிடன்டாக செயல்பட்டு, நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கச் செய்யும். கை கால் நடுக்கம், ஞாபகசக்திக் குறைபாடு, நரம்புத் தளர்ச்சி போன்றவற்றுக்கு மிகச் சிறந்த மருந்து.
வாதத்தைப் போக்கும். வீக்கத்தைக் குறைக்கும். பசியைத் தூண்டும். வெப்பத்தைத் தணிக்கும். கோழை நீங்கும்.
தூதுவளை சூப்
தேவையானவை: தூதுவளை அரைக் கட்டு, தக்காளி, வெங்காயம் 1, பூண்டு பல் 2, கொத்தமல்லித்தழை சிறிதளவு, மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, வெண்ணெய் ஒரு டீஸ்பூன்.
செய்முறை: தக்காளியை அரைத்துக்கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். தூதுவளைக் கீரையை, முள் நீக்கி சுத்தம் செய்யவும். பூண்டை நசுக்கிக் கொள்ளவும். கடாயில் வெண்ணெயை போட்டு சூடாக்கி நறுக்கிய வெங்காயம், பூண்டு, தூதுவளை சேர்த்து வதக்கவும். அரைத்த தக்காளி விழுது, 4 டம்ளர் நீர், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். 10 நிமிடங்கள் கழித்து, கொத்தமல்லித்தழை, மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும். தக்காளி விழுதுக்குப் பதில் வேகவைத்த பருப்புத் தண்ணீர் சேர்க்கலாம்.
பலன்கள்: கப நாசினி. ஆஸ்துமா அலர்ஜி, காது மந்தம், சளி, இருமல், கக்குவான் விலகும். தாது விருத்தியாகும். கை, கால் அசதியைப் போக்கும். நரம்புத் தளர்ச்சியைச் சரிசெய்யும். தலைவலி மற்றும் காது, மூக்கு வலிகளுக்கு நிவாரணம் தரும். பசி, ஜீரணத்துக்கு நல்லது. ஊளைச்சதை, தொப்பையைக் குறைக்கும்.
முடக்கத்தான் கீரை சூப்
தேவையானவை: வேகவைத்த துவரம்பருப்பு ஒரு கப், முடக்கத்தான் கீரை 2 கைப்பிடி அளவு, நசுக்கிய பூண்டு 2 பற்கள், சின்ன வெங்காயம், தக்காளி 1, மிளகுத்தூள், சீரகத்தூள் ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, வெண்ணெய் ஒரு டீஸ்பூன்.
செய்முறை: கடாயில் வெண்ணெயைப் போட்டு சூடாக்கி, முடக்கத்தான் கீரை, பூண்டு, சின்ன வெங்காயம், நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் வேகவைத்த பருப்பு, 4 டம்ளர் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். அதனுடன் மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கலக்கிப் பரிமாறவும்.
பலன்கள்: வாயுத் தொல்லைக்கு அருமருந்து முடக்கத்தான் சூப். வாயுப் பொருமல், தொப்பை, அக்கி, வயிற்றுப்புழு, மசக்கை, பசி, ஏப்பம் மறைந்து உடலுக்கு தெம்பைக் கூட்டும். குடல் புழுக்கள் அழியும். மேல் வாய்வுப் பிடிப்பு, இடுப்பு வாய்வுப் பிடிப்பு விலகும். கை, கால் வலி இருப்பவர்கள் தொடர்ந்து சாப்பிடலாம். முடக்குவாதம், பக்கவாதம் இருப்பவர்கள் தொடர்ந்து 48 நாட்கள் (ஒரு மண்டலம்) சாப்பிட்டுவந்தால் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
தானிய சூப் வகைகள்
வெஜ் மில்லட் சூப்
தேவையானவை: கேரட், தக்காளி தலா 1, பீன்ஸ் 5, காலிஃப்ளவர் 10 பூக்கள், முட்டைகோஸ் துருவல் கைப்பிடி, இஞ்சித் துருவல், மிளகுத்தூள் தலா ஒரு டீஸ்பூன், பூண்டு பல் 2, சாமை, குதிரைவாலி தலா ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு தேவையான அளவு, வெண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன், பட்டை சிறிய துண்டு, பிரியாணி இலை 1, புதினா சிறிதளவு.
செய்முறை: கடாயில் வெண்ணெயைப் போட்டு சூடாக்கி, பட்டை, பிரியாணி இலைகளைத் தாளிக்கவும். இதில், இஞ்சித் துருவல், பூண்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பீன்ஸ், கேரட், முட்டைகோஸ், காலிஃப்ளவர் சேர்த்து வதக்கி, சாமை, குதிரைவாலி அரிசி சேர்க்கவும். 6 டம்ளர் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து நன்கு வேகவிடவும். பரிமாறும் முன் புதினா, மிளகுத்தூள் சேர்க்கவும். விருப்பப்பட்டால், கால் டம்ளர் பால் சேர்த்துக் கலக்கிப் பரிமாறவும்.
பலன்கள்: அனைத்துக் காய்கறிகளும் சேர்ந்த கலவையான இந்த சூப், உடலுக்குத் தேவையான வைட்டமின், தாது உப்புக்களை ஒருங்கே தரும். உடல், உரம் பெற்று உறுதியாகும். நார்ச்சத்து நிறைந்துள்ளதால், மலச்சிக்கல், வயிறு தொடர்பான பிரச்னையிலிருந்து காக்கும். நன்றாகப் பசி எடுக்கும்.
பார்லி சூப்
தேவையானவை: பார்லி 50 கிராம், தக்காளி, கேரட் தலா 1, சின்ன வெங்காயம் 4, இஞ்சித் துருவல், மிளகுத்தூள் தலா ஒரு டீஸ்பூன், பூண்டு பல் 2, பட்டை சிறிய துண்டு, உப்பு தேவையான அளவு, கொத்தமல்லி தழை, புதினா சிறிதளவு, வெண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: பார்லியை முந்தைய நாள் இரவே ஊற வைக்கவும். கடாயில் வெண்ணெயைப் போட்டு சூடாக்கி, பட்டை, நசுக்கிய பூண்டு, இஞ்சித் துருவல், நறுக்கிய வெங்காயம், கேரட், தக்காளி சேர்த்து வதக்கவும். இதில் ஊறவைத்த பார்லி, 5 டம்ளர் தண்ணீர், உப்பு, கொத்தமல்லி சேர்த்து பாத்திரத்தை மூடி, குறைந்த தீயில் 30 நிமிடங்கள் வேகவிடவும், புதினா, மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.
பலன்கள்: 100 கிராம் பார்லியில் சுமார் 55 சதவிகிதம் நார்ச்சத்து இருப்பதால், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தி, உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கும். மார்பகப் புற்றுநோய் வராமல் இருப்பதற்கான எதிர்ப்பு ஆற்றலை அளிக்கும். ஆஸ்துமா போன்ற பாதிப்புகள் நெருங்காது.
ராகி நூடுல்ஸ் சூப்
தேவையானவை: ராகி நூடுல்ஸ் அரை பாக்கெட், கேரட், தக்காளி, உருளைக்கிழங்கு தலா 1, பச்சைப்பட்டாணி கைப்பிடி, பீன்ஸ் 5, பூண்டு பல் 2, இஞ்சித் துருவல், வெண்ணெய் தலா ஒரு டீஸ்பூன், புதினா, கொத்தமல்லி சிறிதளவு, மிளகுத்தூள், சீரகத்தூள் தலா ஒரு டீஸ்பூன், பிரியாணி இலை 1, உப்பு தேவையான அளவு.
செய்முறை: ராகி நூடுல்ஸை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். (கேழ்வரகை வாங்கி முந்தைய நாள் ஊறவைத்து, முளைக்கட்டி காயவைத்து அரைத்து மாவாக்கி வைத்துக் கொள்ளலாம். தேவைப்படும்போது, இந்த மாவில் வெந்நீர் விட்டுப் பிசைந்து, இடியாப்பக் குழாயில் வைத்துப் பிழிந்து, ஆவியில் வேகவைத்து எடுத்துப் பயன்படுத்தலாம்.) காய்கறிகளைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். கடாய் காய்ந்ததும் வெண்ணெயை சேர்த்து, காய்கறிகளைப் போட்டு வதக்கவும். இஞ்சி, பூண்டு, புதினா, கொத்தமல்லி, பிரியாணி இலை சேர்க்கவும்.
அதனுடன் 4 டம்ளர் நீர், உப்பு சேர்த்து நன்கு வேகவிட்டு இறக்கி, காய்கறிகளை மசிக்கவும். மிளகு, சீரகத்தூள் சேர்க்கவும். விருப்பப்பட்டால் அரை டம்ளர் பால் சேர்க்கலாம். பரிமாறும் முன் வேக வைத்த ராகி நூடுல்ஸ் சேர்த்துப் பரிமாறவும்.
பலன்கள்: கேழ்வரகு, எடையைக் குறைக்க உதவும். தொப்பையைக் குறைக்கும். ரத்தத்தை சுத்திகரிக்கும். எலும்பு, தசை உறுதிபடும். வயிறு நிரம்பியிருக்கும். இதனால் அதிக நேரம் பசிக்காது. இதை விரும்பாத குழந்தைகளுக்கு, கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்துப் பழக்குவதன் மூலம், அவர்கள் உடல்வலுவைப் பெறலாம்.
தினை, மேக்ரோனி சூப்
தேவையானவை: தினை அரிசி 50 கிராம், மேக்ரோனி ஒரு கப், தக்காளி, வெங்காயம் தலா 1, பூண்டு பல் 2, உப்பு தேவையான அளவு, வெண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள், சீரகத்தூள் ஒரு டீஸ்பூன், புதினா சிறிதளவு.
செய்முறை: மேக்ரோனியை தனியே வேகவைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் வெண்ணெய் போட்டு சூடாக்கி, நறுக்கிய வெங்காயம், பூண்டு, தக்காளி, புதினா சேர்த்து வதக்கவும். இதனுடன் தினை அரிசி சேர்த்து, 6 டம்ளர் தண்ணீர் விட்டு வேகவிடவும். வெந்ததும் உப்பு, மிளகு, சீரகத்தூள், மேக்ரோனி சேர்த்துக் கலக்கிப் பரிமாறவும்.
பலன்கள்: உடலுக்கு நல்ல உறுதியைக் கொடுக்கும். சிறுநீரைப் பெருக்கும். வாய்வு நோய், கபத்தைப் போக்கும். அதிக நேரம் பசி எடுக்காது. நார்ச்சத்து நிறைந்திருப்பதால், உடல்பருமன் உள்ளவர்கள் சாப்பிட ஏற்றது. வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது.
கொள்ளு சூப்
தேவையானவை: கொள்ளு 50 கிராம், தக்காளி 1, சின்ன வெங்காயம் 10, இஞ்சி விரல் நீளத்துண்டு, பூண்டு பல் 5, மிளகுத்தூள், சீரகத்தூள் ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, கொத்தமல்லித்தழை சிறிதளவு, வெண்ணெய் ஒரு டீஸ்பூன்.
செய்முறை: வெறும் கடாயில் கொள்ளை வறுத்து, இரவே ஊறவிடவும். பாத்திரத்தில் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி, கொள்ளு சேர்த்து வேகவிட்டு மசிக்கவும். கடாயில் வெண்ணெய் போட்டு சூடாக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, நசுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும். இதில் வேகவைத்த கொள்ளைச் சேர்க்கவும். தேவைப்பட்டால், சிறிது தண்ணீர் சேர்க்கலாம். உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், கொத்தமல்லித்தழை சேர்த்துப் பரிமாறவும்.
பலன்கள்: உடல் பலமும் தெம்பும் உடனடியாகக் கிடைக்கும். நல்ல சக்தியைக் கொடுக்கும். ஊளைச்சதை குறைந்து, உடல் கட்டுக்கோப்பாக அமையும். தொப்பை மறையும், மூட்டுவலி மறைந்து கால் எலும்புகள் வலுவாகும். பற்கள் உறுதிப்படும். சர்க்கரை நோய் குறையும். மலக்கட்டு நீங்கும். ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், நன்கு எடை குறையும்.
காய்கறி, பழ சூப் வகைகள்
பூசணிக்காய் சூப்
தேவையானவை: பூசணிக்காய் துண்டுகள் ஒரு கப், வெண்ணெய் ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை சிறிதளவு, பால் ஒரு டம்ளர், மிளகுத்தூள், சீரகத்தூள் ஒரு டீஸ்பூன், பூண்டு 2 பல், சின்ன வெங்காயம் 4, உப்பு தேவையான அளவு.
செய்முறை: கடாயில் வெண்ணெயைப் போட்டு சூடாக்கி, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், நசுக்கிய பூண்டு, பூசணிக்காய் துண்டுகள், உப்பு சேர்த்து 4 டம்ளர் தண்ணீர் விட்டு வேகவிடவும். காய் வெந்ததும், எடுத்து அரைத்துக்கொள்ளவும். விழுதை, காய் வேகவைத்த தண்ணீரில் கலக்கவும். இதனுடன் பால், மிளகு, சீரகத்தூள் சேர்த்துக் கலக்கிப் பரிமாறவும்.
பலன்கள்: சிறுநீரகப் பிரச்னைகள், கல் அடைப்புகள் நீங்கும். உடல் பருமன், கொலஸ்ட்ரால் பிரச்னை இருப்பவர்கள் தினமும் அருந்தலாம். உடல் வறட்சி, பித்தக் காய்ச்சல், உள் காய்ச்சல், சரும நோய்கள், சிரங்கு போன்றவை குறையும். நீர்க்கடுப்பு, நரம்புத் தளர்ச்சி, மூலக்கடுப்பு, மூல நோய்கள் மறையும். சர்க்கரை நோய் மட்டுப்படும். இதில் அதிக காரத்தன்மை உள்ளதால் ரத்தம் சுத்தமடைந்து, வியர்வை நாற்றம் மறையும். வயிற்றுப்புண், குடல் புண் இருப்பவர்கள் தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டுவந்தால், குணம் கிடைக்கும்.
வாழைத்தண்டு சூப்
தேவையானவை: வாழைத்தண்டு 1, இஞ்சித் துருவல், சீரகத்தூள், மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.
செய்முறை: வாழைத்தண்டில் நாரை எடுத்துவிட்டு பொடியாக நறுக்கவும். நறுக்கிய வாழைத்தண்டுடன் இஞ்சித் துருவல், உப்பு, 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். தண்டு நன்றாக வெந்ததும் அதில் உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்க்கவும். சிறிதளவு பால் சேர்த்தும் பரிமாறலாம்.
பலன்கள்: சிறுநீர் எரிச்சல், நீர்க்கடுப்பு மற்றும் சிறுநீரகக் கற்கள் கரைய உதவும் இந்த சூப். வெள்ளைப்படுதல், வெட்டை நோய், மூலக்கடுப்பு, மூல நோய்க்கு மருந்தாகச் செயல்படும். நரம்புத் தளர்ச்சி, வலிப்பு நோய், மலச்சிக்கல் கட்டுப்படும். உடல் பருமன், கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோயைக் குறைக்கும். போதைப்பழக்கத்திலிருந்து மீண்டு வருபவர்களுக்கு, வாழைத்தண்டு சூப் நல்ல பலன் தரும்.
ஆப்பிள் சூப்
தேவையானவை: ஆப்பிள் 2, எலுமிச்சை சாறு ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை, வெண்ணெய், மிளகுத்தூள் தலா ஒரு டீஸ்பூன், பால் ஒரு டம்ளர்.
செய்முறை: வெண்ணெயை உருக்கி, பொடியாக நறுக்கிய ஆப்பிள் சேர்த்து லேசாக வதக்கி, 5 டம்ளர் நீர் சேர்த்து வேகவிடவும். சர்க்கரை, மிளகுத்தூள், பால் சேர்த்துக் கலக்கவும். பரிமாறும் முன் விருப்பப்பட்டால், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கொள்ளலாம்.
பலன்கள்: ஆப்பிள் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு சூப்பாக செய்து கொடுக்கலாம். இதில், வைட்டமின்கள், புரதச்சத்துக்கள் அதிகம் உள்ளன. எந்த நோயும் உடலைத் தாக்காமல் காப்பதுடன், உடலை வலுவாக்கும். சருமம் பொலிவாகும். உடல் எடையைக் குறைக்கவும், உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
பீட்ரூட் சூப்
தேவையானவை: பீட்ரூட் 1, வேகவைத்த துவரம் பருப்பு ஒரு கப், சின்ன வெங்காயம் 5, தக்காளி 1, பூண்டு பல் 2, இஞ்சித் துருவல் ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை சிறிதளவு, மிளகுத்தூள், சீரகத்தூள், எண்ணெய் தலா ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.
செய்முறை: துவரம் பருப்பை மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்த்து வேகவைத்து மசித்துக்கொள்ளவும். பீட்ரூட்டை துருவிக்கொள்ளவும். கடாயில் வெண்ணெய் போட்டு சூடாக்கி, நறுக்கிய தக்காளி, வெங்காயம், பூண்டு, பீட்ரூட் துருவல், இஞ்சித் துருவல் சேர்த்து வதக்கவும். இதனுடன் வேகவைத்த பருப்பு, 4 டம்ளர் நீர் சேர்த்து கொதிக்கவிடவும். உப்பு, மிளகு, சீரகத்தூள் சேர்த்துக் கலக்கி, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
பலன்கள்: ரத்தசோகை, உடல் இளைத்தவர்கள் தொடர்ந்து 21 நாட்கள் காலை, மாலை இருவேளையும் சாப்பிட்டு வந்தால், உடல் நல்ல புஷ்டியாகும். உடல் சூடு, மலச்சிக்கல் இரண்டே நாட்களில் விலகும். சிறுநீரகப் பிரச்னை, மஞ்சள் காமாலை, வயிற்றுப்புண்ணுக்கு மிகவும் நல்லது.
பரங்கிக்காய் சூப்
தேவையானவை: பரங்கிக்காய் துண்டுகள் ஒரு கப், தக்காளி, கேரட் தலா 1, பூண்டு பல் 2, இஞ்சித் துருவல், மிளகுத்தூள் தலா ஒரு டீஸ்பூன், பட்டை சிறிய துண்டு, பிரியாணி இலை 1, கொத்தமல்லித்தழை சிறிதளவு, உப்பு தேவையான அளவு, வெண்ணெய் ஒரு டீஸ்பூன், பால் அரை டம்ளர்.
செய்முறை: பரங்கிக்காயை (மஞ்சள் பூசணி) வேகவைத்து மசித்துக்கொள்ளவும். வெண்ணெயை உருக்கி, பட்டை, பிரியாணி இலையைப் போட்டுத் தாளிக்கவும். இதில் பொடியாக நறுக்கிய தக்காளி, கேரட், பூண்டு பல், இஞ்சித் துருவல் சேர்த்து வதக்கவும். மசித்த பரங்கிக்காய் விழுது, 5 டம்ளர் தண்ணீர், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். மிளகுத்தூள் பால் சேர்த்துப் பரிமாறவும்.
பலன்கள்: பரங்கிக்காயில் கொழுப்பற்ற அமினோ அமிலங்கள், இரும்புச்சத்து, வைட்டமின்கள் அதிகமாக உள்ளன. சிறுநீர் எரிச்சல், சிறுநீரகக் கோளாறுகள், வயிற்றுக் கோளாறுகள், வாத நோய் போன்ற பிரச்னைகளைக் குறைக்கும். உடலுக்கு ஊட்டத்தையும் சக்தியையும் அளிக்கும் சூப் இது.
காளான் சூப்
தேவையானவை: காளான் ஒரு பாக்கெட், பால் ஒரு டம்ளர், புதினா, கொத்தமல்லித்தழை சிறிதளவு, பிரியாணி இலை 1, மிளகுத்தூள், சீரகப்பொடி, இஞ்சி துருவல் தலா ஒரு டீஸ்பூன், பூண்டு பல் 2, உப்பு தேவையான அளவு, வெண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: கடாயில் வெண்ணெயைச் சூடாக்கி பிரியாணி இலை போட்டுத் தாளிக்கவும். இஞ்சித் துருவல் நசுக்கிய பூண்டு, புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கி, நறுக்கிய காளான், உப்பு, 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். வெந்த காளானை அரைத்து, வேகவைத்த தண்ணீர் மற்றும் பால் சேர்த்துக் கலக்கவும். மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.
பலன்கள்: அசைவ உணவுக்கு இணையான சுவையும், சக்தியும் கொண்டது. உடலைப் புதுப்பிக்கக்கூடிய சூப் இது. நரம்புகளின் வலிமைக்கும், மலக்கட்டு நீங்கவும் இந்த சூப்பை அருந்தலாம். சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்.உடல் மெலிந்த குழந்தைகளுக்கு, இந்த சூப்பைத் தொடர்ந்து 20 நாட்கள் கொடுத்துவந்தால் உடல் உறுதிப்படும்.
கார்ன் சூப்
தேவையானவை: வேகவைத்து மசித்த ஸ்வீட் கார்ன் முத்துக்கள், வேகவைத்த ஸ்வீட்கார்ன் முத்துக்கள் தலா கால் கப், தக்காளி 1, இஞ்சித் துருவல், மிளகுத்தூள் தலா ஒரு டீஸ்பூன், வெண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு தேவையான அளவு, பால் அரை கப், கொத்தமல்லித்தழை, புதினா சிறிதளவு.
செய்முறை: பாத்திரத்தில் வெண்ணெயைப் போட்டு சூடாக்கி, பொடியாக நறுக்கிய தக்காளி, இஞ்சி, கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும். இதனுடன் வேகவைத்த கார்ன் சேர்த்து 4 டம்ளர் தண்ணீர் விட்டு, கொதிக்கவிடவும். மசித்த ஸ்வீட் கார்ன் முத்துக்களை ஒரு டம்ளர் நீரில் கலக்கி, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கொதிக்கவிடவும். பால் சேர்த்துக் கலக்கிப் பரிமாறவும். (குறிப்பு: இந்த சூப்பில், புரோகோலி துண்டுகளைச் சேர்த்து வேகவிட்டும் செய்யலாம்).
பலன்கள்: கெட்ட கொழுப்பைக் குறைக்கும். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். மார்பகம், தொண்டை, குடல் புற்றுநோய்களுக்கு எதிராகச் செயல்படும். மேலும், சோளம் சேர்ப்பதால், செரிமானக் குறைபாடு நீங்கும். ரத்தசோகை மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. சிறுநீரைப் பெருக்கும். மூல நோயாளிகள், சோளத்தை மட்டுமே பயன்படுத்தி, சூப் செய்து சாப்பிடலாம்
http://vijaytamil.net/