#பிரமிடின் உண்மைகள்...
நாம் உலகத்தில் பார்க்க வேண்டிய அதிசயங்களில் மிக மிக்கியமான ஒன்று பிரமிடு. உலகில் இருக்கும் ஒவ்வொரு அதிசயமும் விளங்க முடியாத ரகசியத்தைக் கொண்டுள்ளது. பிரமிடுகள் தனக்குள் கொண்டிருக்கும் ரகசியத்திற்கு இன்னும் விடை கிடைக்கவே இல்லை.
பிரமிடுகளில் மிகப் பெரிய பிரமிடான கிசா பிரமிடு 23 லட்சம் கற்களால் கட்டப்பட்டது. ஒவ்வொரு கல்லும் 2 முதல் 9 டன் வரை எடை கொண்டது. இந்தக் கற்களை எங்கிருந்து எப்படி இழுத்து வந்தார்கள்; ஒன்றின் மீது ஒன்றாக எப்படி ஏற்றினார்கள் என்பது இன்னும் மர்ம முடிச்சாகவே உள்ளது.
தற்கால எகிப்துத் தலைநகர் கெய்ரோவின் புறப் பகுதியில் அமைந்துள்ள கிசா பிரமிடுகள் உலகப் புகழ் பெற்றவை. உலகத்தின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகப் போற்றப்படும் பிரமிடுகள் மிக விந்தையான, இன்னும் முற்றிலுமாக அறிந்து கொள்ளப்படாத செய்திகளை உள்ளடக்கியது. அய்நூறு அடி உயரம் கொண்ட இந்தப் பிரமிடுகள் இரண்டரை டன் எடையுள்ள தனி சுண்ணாம்புப் பாறைக் கற்களால் எழுப்பப்பட்டது.
இவ்வளவு எடை கொண்ட கற்களை அய்நூறு அடி உயரத்திற்குக் கொண்டு சென்ற விந்தையை வரலாற்று நிபுணர்கள் இன்னும் ஆராய்ந்து கொண்டுள்ளனர். சுண்ணாம்புக் கற்களின் மேலடுக்குகள் நன்றாக பாலிஷ் செய்யப்பட்ட பளிங்கு சுண்ணாம்புக் கற்களால் வெளிப்புறம் பதிக்கப்பட்டுள்ளன.
இருபத்தி மூன்று லட்சம் சுண்ணாம்புக் கற்கள் எவ்வாறு அவ்வளவு உயரத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டன என்பதும், அத்தகைய பாலைவனப் பரப்பில் எவ்வாறு சாத்தியம் என்பதும் ஆய்வில் உள்ள ஒன்று. புற கற்களில் வித்தியாசமான எழுத்துகள் பதிக்கப்பட்டுள்ளன.
இவற்றை மட்டும் பதித்தால் பத்தாயிரம் பக்கங்கள் வரும் என்பது வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து. கிசாவில் உள்ள மூன்று பிரமிடுகளும் பிதாகரஸ் என்கிற கணித விதிகளின்படியும், பிரபஞ்சத்தில் உள்ள மூன்று ஓரின நட்சத்திரங்களைக் குறிக்கின்ற துல்லியக் கோட்பாட்டின்படியும் அமைக்கப்பட்டுள்ளதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பிரமிடின் உடல்கள் கெடாமல், மாறாக முற்றிலும் உலர்ந்த நிலையில் உள்ளன. இது ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுக்குப் பெருந்தீனியாக உள்ளது! இன்னும் முற்றிலுமாக கண்டறியப்படாத உள் அறைகளின் பயன்பாடுகள், குறுக்கும் நெடுக்குமாகச் செல்கின்ற சதுரத் துளைகளின் பயன்பாடுகள் திருட வருபவர்களைக் குழப்புவதற்காக அமைக்கப்பட்ட தந்திரப் பாதைகள்.
இரண்டாயிரத்தி நான்காம் ஆண்டு இத்தகைய சதுரத் துளைகளின் ரகசியங்களை அறிந்து கொள்ள எந்திர மனிதனை (ரோபோட்)உள்ளே செலுத்தி உலகம் முழுதும் பல்லாயிரம் மக்கள் தொலைக்காட்சிகளில் நேரடியாகக் கண்டபோது. உட்புறம் மேலும் சில வாயில்கள் அடைக்கப்பட்டிருந்ததை உலகம் கண்டு வியந்தது. இவற்றைத் திறக்கவும் அதற்குப் பின்புறம் உள்ள மர்மங்களை அறிந்து கொள்ளவும் தற்பொழுதும் ஆய்வுக் குழுக்கள் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன.
வியக்கத்தக்க முறையில் கட்டப்பட்டுள்ள பிரமிடின் கூம்பகங்களை பண்டைக் கால ஃபாரோ மன்னர்களின் வெறும் புதைப்புப் பீடமாக மட்டும் நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது! பிரமிடுகள் பூர்வீக எகிப்தியரின் வரலாற்றுக் களஞ்சியத்தின் சுரங்கமாக வடிக்கப்பட்டதுடன், அக்காலத்திய கணித, விஞ்ஞான, வானியல், மருத்துவ அறிவுத் திறமைகளையும், முறைகளையும் பறைசாற்றும் அறிவுக் களஞ்சியமாகவும் திகழ்கின்றன.
எகிப்தில் கட்டப்பட்டுள்ள வியக்கத்தக்க கோபுரங்களும், பிரமிட் கூம்பகங்களும் ஒரு புதிரான வரைகணித [Hermetic Geometry] முறையில் திட்டமிட்டுக் கட்டப்பட்டதாகத் தெரிகின்றன! அந்தக் கணித முறை நுணுக்கங்களைப் புரிந்து பண்டைக் காலத்தில் பயன்படுத்திய எகிப்தியர் மிகச் சிலரே.
அவற்றில் நழுவிச் சென்ற சில கணிதத் துணுக்குகளைத்தான் புராதன, அலெக்ஸாண்டிரிய கிரேக்க அறிஞர் கைப்பற்றி விருத்தி செய்ததாக அறிய முடிகிறது. பிரமிடுகளும் அயர்லாந்தில் இருக்கும் கற்சுமைத் தாங்கிகள் [Stonehenge, Ireland] போல கற்தூண் காலங்காட்டியாக[Megalithic Calendars] கருதப்படுகின்றன.
இந்தப் பிரமிடுகளில் ஏராளமான மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. மம்மிப்படுத்துதல் பற்றி...
1. இறந்தவரின் உடலைத் தனியாக ஒரு கூடாரத்திற்கு எடுத்துச்சென்று, மரணக் கட்டிலில் அவரைக் கிடத்தி பேரீச்சை மதுவாலும் நைல் நதி நீராலும் கழுவுவார்கள்.
2. உடலின் இடது பக்கத்தில் அறுத்து உள்ளே இருக்கும் பகுதிகளை வெளியே எடுப்பார்கள்.
3. நுரையீரல், கல்லீரல், வயிற்றுப் பகுதிகள், குடல் பகுதிகள் எடுக்கப்பட்டு கல் உப்பில் பதப்படுத்தப்படும்.
4. இருதயம் அறிவின் இருப்பிடமாக எகிப்தியர்களால் கருதப்பட்டதால் அது உடலுக்குள்ளேயே இருக்கும்.
5. ஒரு வளைந்த கம்பியை மூக்கின் வழியாக விட்டு உடைத்து, மூளையை எடுத்துவிடுவார்கள். (உண்மையில் அறிவு என்பது மூளை தொடர்புடையது என்ற அறிவு அந்தக் காலத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது)
6. உடல், கல் உப்பால் மூடப்படும்.
7. நாற்பது நாட்கள் கழித்து உடலை மறுபடியும் நைல் நதி நீரால் கழுவி, அதன்மீது வாசனை எண்ணெய்களைத் தடவுவார்கள். உடல் இப்போது தன்னுடைய ஈரப்பதத்தை முழுவதுமாக இழந்திருக்கும். அதன் பிறகு மரணக்கோவில் என்றழைக்கப்படும் லூசார் கோவிலின் பலிபீடத்தில் சில நாட்கள் வைப்பர். இது நேரடியாக சூரிய ஒளி படும் இடமாதலால் பாலைவன வெயிலின் வெப்பம் காரணமாக உடலின் ஈரப்பதம் முழுமையாக ஆவியாகி இப்போது காய்ந்த உடல் மாத்திரம் இருக்கும்.
8. உடற்பகுதிகள் தனித்தனியாக ஜாடிகளில் (canopic jars) வைக்கப்படும்.
9. உடலை, பிசின் தடவிய துணியால் இறுக்கமாகச் சுற்றுவார்கள். தலை, கைகள், கால்கள், உடல்பகுதி தனித் தனியாகச் சுற்றப்படும்.
10. இறுதியில் பிரமிடுகளின் மய்யப்பகுதியில் அரச மரியாதையுடன் எடுத்துச்சென்று அடக்கம் செய்யப்படும், அரசர் பயன் படுத்திய அனைத்துப் பொருள்களும் பிரமிடில் வைக்கப்படும். இதில் தங்க வைர நகைகள் மற்றும் இதர விலையுயர்ந்த பொருட்களும் அடங்கும்.