Saturday, March 14, 2020

பழனி மூட்டை சாமிகள்

🔱 *பழனி மூட்டை சாமிகள்* 🔱
       பழனி அருகே கணக்கன்பட்டியை சேர்ந்தவர் காளிமுத்து என்ற பழனி சுவாமிகள். எப்போதும் அழுக்கு மூட்டைகளுடன் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்ததால் இவர் மூட்டைசித்தர் என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார்.

பழநியில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது கணக்கன்பட்டி. சிறு கிராமம். இங்குள்ள டீக்கடை, மளிகைக்கடை, பஞ்சர் கடை, பெட்டிக்கடை என்று எல்லா கடைகளிலும் வீடுகளிலும் இவரது வண்ணப்படம் போட்ட நாட்காட்டி மாட்டப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் தேதி கிழித்து, அவர் முகத்தில்தான் விழிக்கிறார்கள். ஊர்க்காரர்கள் இவரை 'பகவான் ஞான வள்ளல்' என்றும், 'சத்குரு' என்றும் அழைக்கிறார்கள். 'சித்தரின் அவதாரம் இவர்' என்கிறார்கள்.

இன்றைக்கு இருக்கிற போலிச் சாமியார்களையும், வேஷதாரிகளையும் எளிதில் அடையாளம் கண்டுபிடித்து விடலாம். எப்படி? பெரும்பாலும் பெண்கள் பிரச்னையில் சிக்குகிறார்கள். அடுத்ததாக, பக்தர்களிடம் பணம் பறிப்பதில் மாட்டிக் கொள்கின்றனர். ''ஆனால், மூட்டை சுவாமிகள் உண்மையிலேயே ஒரு மகான். ஏனென்றால், கடந்த ஐம்பது வருடங்களுக்கும் மேலாக அவரை இந்த பழநியில் அறிந்தவர்கள் ஏராளம். பழநியில் அவருக்கு பக்தராக இருந்த பணக்காரர்கள் பல பேர். மூட்டை சுவாமிகள் நினைத்திருந்தால் எப்படி எப்படியோ அவர்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம். ஆனால், அவரது வாழ்க்கை முறையே வேறு. நம்மிடம் இருக்கும் குறைகளை அகற்றுவதற்காகவே இவர் அவதரித்திருக்கிறார்.

எவரேனும் இவரிடம் பணமோ, பொருளோ கொடுக்க வந்தால், முதலில் அவர்களை விரட்டி விடுவார். எவரிடம் இருந்தும் சல்லிக் காசு வாங்க மாட்டார். யாரிடமும் எதுவும் கேட்கவும் மாட்டார். இப்போது கூட இவரின் சில பக்தர்கள், இதே கணக்கன்பட்டியில் இவர் தங்குவதற்காக ஒரு 'சித்சபை' கட்டி வருகிறார்கள். அதற்கு இவர் முறையாக ஒப்புதல் தரவில்லை. அந்த அளவுக்கு ஒதுங்கியே இருப்பார்.
பழநி மலைக்கு எதிரே உள்ள இடும்பன் மலை யில் சில காலம் தங்கி இருந்தாராம். பல நேரங்களில் இவர் எங்கு இருக்கிறார் என்பதை பக்தர்கள் எவராலும் கண்டுபிடிக்க முடியாது. உச்சி வேளையில் கொளுத்துகிற வெயிலில் மலைக்கு மேலே தகிக்கிற ஒரு பாறையில் அமர்ந்து தியானத்தில் இருப்பார்; பேயெனக் கொட்டுகிற மழையில் முழுக்க நனைந்தபடி அதே பாறையில் படுத்திருப்பாராம். இயற்கையின் எந்த ஒரு சக்தியும் இவரை பாதித்ததே இல்லையாம்.

மூட்டை சுவாமிகளின் அற்புதங்கள் என்று ஒரு பக்தர் நம்மிடம் சொன்னவை: ''ஒரு மழைக் காலத்தில், அதிக வோல்டேஜ் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும் மின் வயர் ஒன்று அறுந்து, நடு ரோட்டில் விழுந்து கிடந்தது. இதைக் கண்டு அனைவரும் அஞ்சி நடுங்கி அந்தப் பக்கமே செல்லாமல் இருந்தனர். சுவாமிகள் ரொம்ப சாதாரணமாகச் சென்று அந்த வயரைத் தன் கையால் எடுத்து அப்புறப்படுத்திப் போட்டார்...

சுவாமிகள் தியானத்தில் ஒரு முறை பேச்சற்றுக் கிடந்தபோது, பதறிப் போன சேலத்து பக்தர் ஒருவர், இவரைக் கொண்டு போய் ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டுப் போயிருக்கிறார். அங்கு சுவாமிகளைப் பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள், 'மூச்சே இல்லை. இறந்து விட்டார்!' என்று ரிப்போர்ட் எழுதி, இவரை மார்ச்சுவரியில் வைத்திருக்கிறார்கள்.

அடுத்த சில மணி நேரங்களில் சுவாமிகள், பழநியில் ஒரு மலையில் தவத்தில் இருந்தாராம். மார்ச்சுவரியில் சுவாமிகள் இருந்த அறையைத் திறந்து பார்த்த ஆசாமிக்கு அதிர்ச்சி... அங்கே இவர் இல்லை.

பழநி கல்லூரியில் வேலை பார்த்து வந்த பேராசிரியர் ஒருவர், இன்ன தேதியில் இறக்கப் போகிறார் என்பதை முன்கூட்டியே சொல்லி இருந்தார் சுவாமிகள். எந்த ஞான திருஷ்டி மூலம் சுவாமிகள் சொன்னாரோ தெரியவில்லை...

சுவாமிகள் சொன்ன தேதியில் திடீரென உடல் நலக் குறைவாகி இறந்து விட்டார்.

- இப்படி நிறைய சம்பவங்களை அனுபவங்களாகச் சொல்லலாம்.''

மூட்டை சுவாமிகளின் இயற்பெயர் 'பழனிச்சாமி' என்று ஓர் அன்பர் சொன்னார். சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் வரை மூட்டை ஸ்வாமிகள் வசித்து வந்த இடம்: பழநி- திண்டுக்கல் மெயின் ரோட்டில் உள்ள பழநி கலைக் கல்லூரி வாசலில். கலர் வேஷ்டி... மேலே ஒரு முழுக்கைச் சட்டை... தலையில் ஒரு முண்டாசு. பெரும்பாலும் வேஷ்டியை மடித்துக் கட்டி இருப்பார். இவர் உடுத்தி இருக்கும் துணிகள் பெரும்பாலும் கந்தலாகவே காணப்படும்.

இவரது இடது தோள்பட்டையில் ஒரு பெரிய மூட்டை தொங்கிக் கொண்டிருக்கும். ரொம்ப கனமான மூட்டை. அதற்குள் என்ன இருக்கிறது என்பது எவருக்கும் தெரியாது. புளிய மரத்தின் அடியில், தான் ஓய்வெடுக்கும்போது மரத்தின் ஒரு கிளையில் தன் கண்களில் படும்படி மூட்டையைத் தொங்க விட்டிருப்பார். ஆர்வக்கோளாறின் காரணமாக- சில நேரங்களில் எவரேனும் அந்த மூட்டை அருகே நெருங்கினால் போதும்... கன்னாபின்னாவென்று கத்தி விட்டு, அவர்களை விரட்டி விடுவார். தான் செல்லும் இடங்களுக்கெல்லாம் அந்தக் கந்தல் மூட்டையை விடாமல் தூக்கிச் செல்வதால், அந்தப் பகுதிவாசிகளால் 'மூட்டை ஸ்வாமிகள்' என அழைக்கப்பட ஆரம்பித்தார் இவர்.

பழநி கலைக் கல்லூரியின் வாயிலில் ஏராளமான புளிய மரங்கள் இருக்கின்றன. அதில் ஏதாவது ஒன்றின் நிழலில் இவர் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பார். சில நேரங்கள் திடீரென்று காணாமல் போய் விடுவார். எப்போது வருவார் என்றும் தெரியாது. 'சாமி மலைக்கு மேலே போயிருக்கு' என்பார்கள். அவர் இருக்கும் இடம் இதுதான் என்று பிறரால் அடையாளம் சொல்லக் கேட்டு, அவரைத் தேடி அங்கே போனால் - அவர் இருக்க மாட்டார்.
தெருவில் சுவாமிகள் அவர்பாட்டுக்கு நடந்து கொண்டிருப்பார். சில நேரங்களில் உட்காருவார். இங்கு வந்திருக்கிற ஒவ்வொருவருக்கும் உள்ள குறைபாடுகளை அவர் சூட்சுமமாக உணர்வார். வந்திருப்பவர்களின் கஷ்டங்களையும் பிரச்னைகளையும் வெறும் வாயில் போட்டு மென்று, அதை வெளியே துப்பி விடுவார். சுவாமிகள் சஞ்சரித்துக் கொண்டிருக்கிற உலகமே வேறு. எனவே, அவரின் அருகே போனால் அது அவருக்குத் தொந்தரவு தருவதாகவே அமையும்.

தவிர, சுவாமிகள் சில நேரங்களில் வந்திருப்பவர்களை விரட்டியும் விடு வார். உடனே, அங்கிருந்து அவர்கள் போய் விட வேண்டும். ரொம்ப நேரம் இவரை தரிசனம் பண்ணிக் கொண்டு இங்கேயே உட்கார்ந்திருக்கலாம் என்று இருக்கக் கூடாது. வந்தோமா, தரிசனம் பண்ணினோமா என்று நகர்ந்து விட வேண்டும்.

சிலரை ஏதோ வேலைகள் செய்யச் சொல்வார். என்ன வேலை தெரியுமா? மண்ணை அள்ளிக் குவிக்கச் சொல் வார். சாக்கடைத் தண்ணீரை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்தில் மாற்றி ஊற்றச் சொல்வார். இதற்கெல்லாம் பக்தர்கள் முகம் சுளிக்கக் கூடாது. இதன் மூலம் அவர்களது வினையை சுவாமிகள் விரட்டுகிறார். அதுதான் நிஜம்.

பொதுவாக சித்தப் புருஷர்கள் ..மகான்கள் தன்னலம் இல்லாதவர்கள். சிலரெல்லாம் இப்பொழுது எப்படி எப்படியோ இருக்கிறார்கள். ஆனால், இவர் ஒரு மாட்டுக் கொட்டகை போன்ற ஒரு இடத்தில்தான் தங்கினார் . எங்கேயாவது சென்று உட்கார்ந்து கொண்டு எதையாவது சொல்லிக் கொண்டு இருப்பார். இதையெல்லாம் நம்மால் புரிந்துகொள்ள முடியாது.

இந்த மகான் சமாதி அடைந்தது  (11 -03-2014)

..இப்போதும் நம்மோடு வாழ்ந்து கொண்டு ,பக்தர்களின் பாவங்களை மூட்டையாக சுமந்து , உலகம் எங்கும் தம் பக்தர்களை காத்து ரட்சித்து அருள் புரியும் பழனி கணக்கம் பட்டியில் வாழும் ஞான வள்ளல் சற்குரு பழனி மூட்டை சுவாமிகள் மலரடிகள் போற்றி போற்றி !!!
               🙏🏻நன்றி🙏🏻